2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

’மஹிந்தவுடன் குடும்பப் படம் எடுத்தது அரசியல் சாணக்கியமா?’

Editorial   / 2020 ஜூலை 28 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

“நாம் கோட்டாவின் ஆள் என்றால் வடமாகாணசபையில் வெற்றிபெற்ற பின்னர் மஹிந்தவுடன் சென்று குடும்பப் படம் எடுத்த நீங்கள் மஹிந்தவின் ஆளா?” என்று, ஜனநாயக பேராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. துளசி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனநாயக போராளிகள் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக முன்னாள் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துகளுக்கு பதில் அளிக்கும் விதமாக, வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தாம் ஜனநாயக அரசியலுக்கு வந்த பிறகு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருவதாகவும் குறிப்பாக, மஹிந்த, கோட்டாபய,  ரணில் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் போன்ற பலரை தாம் சந்தித்திருப்பதாகவும் கூறினார்.

இந்த இடத்தில் விக்னேஸ்வரனிடம் ஒரு கேள்வியை  முன்வைக்கின்றேனெனத் தெரிவித்த அவர்,  கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ​ஜனநாயகப் போராளிகள் கட்சி கோட்டாபயவை ஆதரித்ததாக, எந்த விதமான சாட்சிகள், ஆதாரங்கள் இன்றி தீர்ப்பு வழங்கியுள்ளீர்களெனவும் தாங்கள் ஆதரித்தது ரணில் தலைமையிலான சஜித் பிரேமதாஸவை என்று ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்கு தெரியுமெனவும், அவர் கூறினார்.

இந்தக் கருத்தானது கடந்த காலத்தில் நீங்கள் வழங்கிய நீதிமன்ற தீர்ப்புகளையே கேள்விக்குள்ளாக்கியுள்ளதெனத் தெரிவித்த அவர், எனவே அவரது கடந்தகால தீர்ப்புகள் தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழு ஆராயவேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.

“வடக்கு மாகாணசபைக்கு விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்ட பின்னர் மஹிந்தவிடம் சென்று பதவி ஏற்றதுடன், தனது குடும்பத்துடன் சென்று அவருடன் புகைப்படம் எடுத்திருந்தார். அப்படியானால் நீங்கள் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆளா?  நீங்கள் சந்திப்பது அரசியல் சாணக்கியம், ராஜதந்திரம் என்றால் நாங்கள் சந்தித்தால் கோட்டாவின் ஆள் என்று முத்திரை குத்துவீர்களா இது தான் உங்களின் நியாயமா?.

“நாம் இந்த மண்ணுக்காகப் போராடிய போராளிகள் எந்தத் தரப்பானாலும். எம்மை அழைத்து பேசுவதற்கான தகுதி எமக்குள்ளது. நீங்கள் இத்தேர்தலிலே இணைத்து போட்டியிடும் அணிகளை அவர்கள் வாசலுக்கு கூட எடுக்கமாட்டார்கள்.  தகுதிதராதரம், மக்கள் மீதான அபிமானம், மக்களுக்கு வழங்கும் சேவைகளை கருத்திற்கொண்டுதான் ஜனாதிபதியும், பிரதமரும் எவரையும் அழைத்து பேசுவார்கள் என்பதை கூறிக்கொள்கிறேன்” எனவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .