2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘மாநகரசபை மக்களை முட்டாளாக்கியுள்ளது’

Editorial   / 2019 ஜூலை 15 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மாநகரசபை மக்களை முட்டாளாக்கியுள்ளது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் யாழ் மாநகரசபையும் சில பிரதேச சபைகளும் 5ஜி தொடர்பாடற் கம்பங்களை நிறுவுவதுக்கு அனுமதி வழங்கியிருப்பதாகப் பொதுமக்களிடையே சந்தேகங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், இக் கம்பங்களை அமைப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாகத் தமிழ்த் தேசியப்பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

செல்போன்களில் படம் பிடிக்கும் கமெராக்கள் மேலதிக வசதியாக இணைக்கப்பட்டுள்ளன. இதனைக் கமெராக்களில் செல்போன் வசதி செய்யப்பட்டிருப்பதாகச் சொல்ல முடியாது. செல்போன்களில் வானொலி கேட்க முடியும் என்பதற்காக அதனை வானொலியில் செல்போன் வசதி செய்யப்பட்டிருப்பதாகக் கூற முடியாது. அதே போன்றுதான் தொலைத்தொடர்புக் கம்பங்களில் மின்விளக்குகளைப் பொருத்தி விட்டு மின்விளக்குக் கம்பங்களில் மேலதிகமாகத் தொலைத்தொடர்பு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்ல முடியாது. ஆனால், அதி உயர்வேகத் தொலைத் தொடர்புக் கம்பங்களைச் சாதாரண மின் விளக்குக் கம்பங்களாகக் காட்டி யாழ்ப்பாணம் மாநகரசபை மக்களை முட்டாள்களாக்கியுள்ளது.

யாழ் மாநகரசபையின் எல்லைப் பரப்பினுள் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தொலைத்தொடர்புக் கம்பங்களை 5ஜி அலைக்கற்றைக்கம்பங்களாகக் கருதிப் பொதுமக்கள் பயங்கொள்வதையும், எதிர்ப்பு ஆர்பாட்டங்களில் ஈடுபடுவதையும் எவரும் பிழை என்று கூறமுடியாது. தவறு யாழ் மாநகர சபையிலும், இதனை அமைப்பது தொடர்பாக எடொக்ரோ என்ற நிறுவனத்துடன் அது செய்து கொண்ட ஒப்பந்தத்திலுமே உள்ளது. எடொக்ரோ தொலைத்தொடர்பு உட்கட்டுமானங்களை நிர்மாணித்துக்; கொடுக்கின்ற மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகின்ற ஒரு தனியார் நிறுவனம்.

இரண்டு தரப்புகளும் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில் திறன் விளக்குக் கம்பங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் என்றே தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் முதலில் விளக்குகள் பொருத்துவது பற்றியும், அடுத்து விளம்பரச்சாதனங்கள் பொருத்துவது பற்றியும் பின்னர் கண்காணிப்புக்  கமெராக்கள் பொருத்துவது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடைசியில், ஏதோ முக்கியத்துவம் இல்லாத ஒன்றைக் குறிப்பிடுவது போல சிறிய செலூலர் அன்ரெனாக்கள் பொருத்தப்படுவது பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உண்மையில், இதுவே பிரதானமானது. விளக்குகள், விளம்பரங்கள், கமெராக்கள் எல்லாம் இதனுடன் கொடுக்கப்படுகின்ற உதிரி இணைப்புகள். மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி அவர்களை ஏமாற்றும் நோக்கில் இவற்றை முன்னிலைப்படுத்தியிருப்பது பாரதூரமான தவறு ஆகும்.

ஒப்பந்தத்தில் சிறிய அலை ஈர்ப்பி என்று குறிப்பிடப்பட்டுள்ளேதே தவிர அது 4ஜி அல்லது 5ஜி தொடர்பாடலுக்கானதா என்பது பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. ஆனால், 5ஜி அலைக்கற்றைக்கான அன்ரெனாக்கள் மிகவும் சிறியவை என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு யாழ்ப்பாணச் சமூகம் அறிவிலிகள் அல்லர். டயலொக், மொபிரெல் நிறவனங்கள் 5ஜி அலைக்கற்றைகளை அண்மையில் பரீட்சார்த்தமாகப் பரிவர்த்தனை செய்துவிட்டு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையத்திடம் இருந்து வணிக ரீதியிலான அனுமதிக்காகக் காத்திருக்கின்றன. மொபிரெல் 5 ஜி வலையமைப்புக்கென 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்த ஆண்டில் செலவிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது.  இந்நிலையில் இந்தக்கம்பங்கள் 5ஜிக்கு உரியவை என்று பொதுமக்கள் கருதுவது நியாயமானதே.

5ஜிவலையமைப்பில் அன்ரெனாக்கள் அதிகம் என்பதால் நாம் என்றும் எப்போதும் மின்காந்தக் கதிர்வீச்சின்  தாக்குதலுக்கு ஆளாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இது மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தானது. இதனால், இதனை முழுமையாக அனுமதிப்பதில் மேற்குலக நாடுகள்   தயக்கம் காட்டி வருகின்றன. இதன் பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்கின்ற வரைக்கும்  தொலைத்தொடர்பாடலில் 5ஜி ஐப் பயன்படுத்துவதை நிறுத்திவைக்குமாறு 36 நாடுகளைச் சேர்ந்த 180 விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்கா 5ஜி வலையமைப்பின் ஊடாகச் சீனா உளவு பார்க்கலாம் என்ற அச்சம் காரணமாகச் சீனத் தயாரிப்பு 5ஜி செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்துவதற்கு அங்கு தடைவிதித்திருக்கிறது.

தொழில்நுட்ப நாடான சிங்கப்பூர் இன்று வரை 5ஜிஐ ஆரம்பிக்கவில்லை.  இந்நிலையில், அடிப்படைச் சேவைகளையே மக்களுக்குப் பூரணமாக வழங்க முடியாத நிலையில்  உள்ள யாழ் மாநகரசபையும், சில பிரதேச சபைகளும் 5ஜிக்கு அவசரம் அவசரமாகப் பச்சைக் கம்பளங்களை விரிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத, காலத்தால் முந்திய ஒரு செயல். அத்தோடு, யாழ் மாநகரசபை இது தொடர்பாக எடொக்ரோவுடன் செய்து கொண்ட ஒப்பந்தமும் முறையற்றது. மாநகரசபைகளுக்குரிய விதிகளின்படி ஒரு வருடத்துக்கு மேலான காலத்துக்கு ஒரு திட்டத்துக்கு அனுமதி வழங்கும் போது ஆணையாளரும், மாநகர முதல்வரும் கண்டிப்பாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும். ஆனால், பத்துவருடங்களுக்கு அனுமதி வழங்கியுள்ள இந்த ஒப்பந்தத்தில்  மாநகர முதல்வர் மட்டுமே கையெழுத்திட்டுள்ளார். மாநகர ஆணையாளர் என்ன காரணத்துக்காகவோ கையெழுத்து இடுவதைத் தவிர்த்துக் கொண்டார்.

இவற்றின் அடிப்படையில், திறன்; விளக்குக் கம்பங்கள் என்ற போர்வையில் அதிஉயர் வேகத் தொடர்பாடற் கம்பங்களை அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்துவதற்கு யாழ் மாநகரசபையும், பிரதேசசபைகளும் ஆவன செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .