2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மானிப்பாய் குடிநீர் விவகாரம்; தடையீட்டு எழுத்தாணை மனு தள்ளுபடி

Editorial   / 2020 ஜூலை 27 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

மானிப்பாய் பிரதேசத்தில் இருந்து காரைநகர் பகுதிக்கு குடிநீர் எடுத்துச் சென்று விநியோகிப்பதைக் கட்டுப்படுத்தும் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தீர்மானத்துக்கு எதிராகவும் அந்தக் குடிநீர் சேவையைக் கொண்டு நடத்துவதை, பிரதேச சபை தடை செய்யக்கூடாது எனக் கோரியும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட் தடையீட்டு எழுத்தாணை மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.

காரைநகர் பயிரிக்கூடலைச் சேர்ந்த வேலுப்பிள்ளை நடராசா என்பவர், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையை எதிர்மனுதாரராகக் குறிப்பிட்டு, இந்த எழுத்தாணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

“மானிப்பாயில் இருந்து காரைநகருக்கு குடிநீர் வழங்கல் சேவையைத் தடுத்து நிறுத்தும் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் 2019 மார்ச் 19ஆம் திகதிய கடிதம் மூலமான தீர்மானத்தை இரத்துச் செய்யும் உறுதிகேள் எழுத்தாணை கட்டளையை வழங்குதல்.

“வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை தொடர்ந்தும் இந்தக் குடிநீர் சேவையினை கொண்டு நடத்துவதை எதிர்மனுதாரர்கள் அவர்களது முகவர்கள், ஏவலாட்கள், எவ்விதத்திலும் தடை செய்யக்கூடாது என தடையீட்டு எழுத்தாணை கட்டளையைப் பிறப்பித்தல்” உள்ளிட்ட நிவாரணங்களுடன் இடைக்கால நிவாரணத்தையும், மனுதாரர் கோரியிருந்தார்.

இந்த மனு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்தாண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை, நேற்று (26) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்தக் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“எழுத்தாணை கோரி நிற்கும் தரப்பானது, மிகவும் நேர்மையாக, உண்மையாக சுத்தமாக வேறு மாற்று நிவாரணங்கள் எதுவும் இல்லாத நிலையில் துரிதமாக, தேவையான அக்கறை, பொறுப்பு என்பவற்றுடன் தமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புத் தொடர்பில் ஒழிவுமறைவற்ற கோரிக்கையை முன்வைத்து நீதிமன்றிடம் நிவாரணம் பெறமுடியும்.

“மாறாக திட்டமிடப்பட்ட தீய நோக்கங்களுடன் தந்திரமாக மன்றில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் மன்றினால் முற்றாக நிராகரிக்கப்பட முடியும் என்பது முற்தீர்ப்புகளில் குறிப்பிடப்படுகின்றது.

“உறுதிகேள் எழுத்தாணை எனப்படும் பொழுது, குடிமக்களின் உரித்துகள் தொடர்பான பிணக்குகளைத் தீர்மானம் செய்யும் சட்ட அதிகாரமுள்ள நபர் சட்டப்படியாக செயற்படும் கடமையைக் கொண்டுள்ள வேளையில், சட்டப்படியான அதிகாரத்திற்கப்பால் செயற்பட்டு அதிகார வரம்பு மீறியிருந்தால் அது உறுதிகேள் எழுத்தாணை மூலம் கட்டுப்படுத்தப்படலாம் என்பது அடிப்படைக் கருவூலங்களாக அமைகின்றது.

“தற்றுணிவு நிவாரணமாகிய எழுத்தாணைக் கோரிக்கையின் பொழுது, அந்தக் கோரிக்கை நியாயமானதாக இல்லாதவேளையில், அதனை மறுக்க முடியும் என்பது சட்டவிளக்கமாக அமைகின்றது. மனுதாரரிடமுள்ள கீழ்த்தரமான நோக்கம் மனுதாரர் குறித்த நிலைமையை ஏற்படுத்துவதில் சம்மதித்து கையளித்தமை, மனுதாரர் தமது உரித்தைக் கைவிட்டுள்ளமை போன்ற பலகாரணங்களினால் உறுதிகேள் எழுத்தாணை விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் எனவும் தீர்ப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளாக அமைகின்றது.

“இந்த விண்ணப்பத்தில், எதிர்மனுதாரரான வலி.தென்மேற்கு பிரதேச சபையின் 19.03.2019ஆம் திகதிய தீர்மானத்தை இரத்து செய்யும் உறுதிகேள் எழுத்தாணை கோரப்பட்டுள்ளது.

“வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன், மனுதாரருக்கு அனுப்பிய கடித்தில் “எமது பிரதேச எல்லைக்குள் இருந்து காரைநகர் பகுதிக்கு நீர் வழங்குதல் தொடர்பாக எமது சபையால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைவாக காரைநகர் பிரதேச சபையினருடன் ஓர் ஒழுங்குமுறையான நடைமுறைக்கு நாம் வந்துள்ளோம். இதனடிப்படையில் காரைநகர் பகுதிக்கான நீர் வழங்கலினை காரைநகர் பிரதேச சபையினர் பொறுப்பேற்று கிரமமாக மேற்கொண்டு வருகின்றனர்.

“எமது பகுதியிலிருந்து கூடிய அளவு நீர் உறிஞ்சப்படுவதால் எமது பகுதி நீர் உவர்த்தன்மையுற்று வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் காரைநகர் பகுதிக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் குடிநீரை மட்டுமே எம்மால் வழங்க முடியும். எனவே இதற்கு மேலதிகமாக தங்களால் தனிப்பட்ட ரீதியிலும், எமது அனுமதியற்ற முறையிலும் நீர் பெற்றுக் கொள்வதற்கு எம்மால் அனுமதிக்க முடியாது.

“எனவே, எமது சபை எல்லைக்குள் இருந்து நீர் பெற்றுச் செல்வதனை உடனடியாக நிறுத்துமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றேன். இதற்கு மேலதிகமாக தாங்கள் இச்செயற்பாட்டில் ஈடுபடும் சந்தர்ப்பத்தில் தங்கள் மேல் உரிய சட்ட நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம் என்பதனையும் தங்களுக்கு அறியத் தருகின்றேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X