2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மீள்குடியேற்றப் பிரதேசங்களில் அதிக அக்கறை தேவை

Editorial   / 2019 ஏப்ரல் 09 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பிரதேசங்களில் அரசாங்கம் அதிக அக்கறை எடுத்துச் செயற்படவேண்டுமென வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மாவட்டத்தில் மீள்குடியேற்ற பிரதேசங்களாக வலிகாமம் வடக்கு மட்டுமல்லாமல் இன்னும் பல பிரதேசங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஆகியோரின் இணைத் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (08) நடைபெற்றது. இதன்போது மீள்குடியேற்றம் தொடர்பான விடயம் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராசா, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது பகுதிகளில் மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்துமாறும் மீள்குடியேற்றப் பிரதேசங்களில் அதிக அக்கறையெடுத்து அதிகளவிலான நிதியை ஒதுக்க வேண்டும். இந்த விடயங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் நாங்கள் பேசிவருகின்றோம்.

குறிப்பாக வலிகாமம் வடக்கில் மக்கள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நிலையில் தற்போது மீளக் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்தப் பிரதேசங்களில் அரசாங்கம் அக்கறையெடுத்துச் செயற்பட வேண்டியது அவசியமானது. ஆகவே இந்த மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றார்.

இதன் போது கருத்து வெளியிட்ட சுமந்திரன், மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பிரதேசமாக வலிகாமம் வடக்கை மட்டும் தான் அரசாங்கம் கவனத்திலெடுக்கின்றது. ஆனால் உண்மையில் மாவட்டத்தில் இன்னும் பல இடங்கள் மீள்குடியேற்றப் பிரதேசங்களாக இருக்கின்றன. ஆகையினால் இந்த மீள்குடியேற்ற விடயத்தில் அரசாங்கம் கவனமெடுத்துச் செயற்பட வேண்டும். மேலும் மீள்குடியேற்றத்தையும் துரிதப்படுத்தி அந்த மக்களுக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்றும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .