2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘முகாம்களும் இல்லாதுபோகும்’

Editorial   / 2018 ஜூலை 23 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாணத்திலுள்ள முகாம்களை அகற்ற, இப்போதைக்கு எந்தவோர் அபிப்பிராயமும் இல்லை. இருப்பினும், அனைவரும் ஒன்றிணையும் நேரத்தில், அவை இயல்பாகவே இல்லாமல் போய்விடுமெனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடக்கு என்பது, இலங்கையின் ஒரு பகுதியென்றும் இங்கு பயங்கரவாதம் காணப்பட்ட போதிலும், படிப்படியாகப் பயங்கரவாதம் இல்லாமல் போகும்போது, முகாம்களும் இல்லாமல் போகவேண்டுமெனக் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (22) ஆசிரியர் நியமனங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதமர் கூறியதாவது,

“யுத்தத்துக்கு முன்பு அதிகம் சிறந்த தியாக மனப்பான்மையுடைய ஆசிரியர்கள் வடக்கில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. யுத்தத்தால் அனைத்தும் சீரழிந்து விட்டதால், நாம் அதனை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். எதிர்வரும் காலங்களில், இவ்வாறான சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவதற்கான பயிற்சிகளை அளிக்கவேண்டும். இதற்கான வேலைத்திட்டத்தை, கல்வி அமைச்சர் அகில விராஜ் மேற்கொள்வார்.

“இதுதொடர்பில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை யாழ்ப்பாணத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இவர்களுக்குப் பயிற்சியளிக்க, வெளிநாடுகளில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களை இலங்கைக்கு வரவழைக்கும் நடவடிக்கையை, முதலமைச்சர், மாகாண மற்றும் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும்.

“வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை, 45 நாட்களுக்குள் அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, பத்திரிகையொன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில், வடக்கு முதலமைச்சர், இராணுவத் தளபதி, வடக்குக் கட்டளைத் தளபதி ஆகியோரிடம் கேட்டபோது, அவர்கள் அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கவில்லையெனக் கூறினர். அவ்வாறாயின், யார் அந்த உத்தரவைப் பிறப்பித்தது? யாழ்ப்பாணத்திலுள்ள படை முகாம்களில், சீர்திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றைக் கொண்டு, பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன” என்று, பிரதமர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X