2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவு நாயாறு நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை திறப்பு

Editorial   / 2019 ஜனவரி 24 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு நாயாறு நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அமைக்கபட்டு வந்த புத்தர்சிலை பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினரின் உதவியுடன் நேற்று (23) அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவிலுக்கு கடந்த 14 ஆம் திகதி அன்று அப்பகுதித் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளுக்காக சென்றவேளை அப்பகுதியில் குடியிருக்கும் பௌத்த துறவிக்கும் மக்களுக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியிருந்ததோடு வழிபாட்டுக்கு சென்ற மக்களுக்கு பௌத்த பிக்குவாலும் தென்பகுதியிலிருந்து சென்ற பெரும்பான்மையினத்தவராலும் தடைகள் ஏற்படுத்தபட்டது .

இந்நிலையில் இந்த முறுகல் நிலை தொடர்பாக அமைதிக்கு பங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வகையில் எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு இருதரப்பினருக்கும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் அழைப்புவிடுத்திருந்தது.

எனினும் குறித்த புத்தர் சிலையினை விரைவில் திறக்க பௌத்த மதகுரு முற்படுவதை உணர்ந்து  அவசர நிலைமையாக கருதி ஆலய நிர்வாகத்தினர் மற்றும், தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வி.நவநீதன் ஆகியோர் நகர்த்தல் பத்திரம் ஒன்றினை தாக்கல் செய்ததன் மூலம் அது தொடர்பான வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (22) விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

வழக்கு விசாரணைகளில், குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்பது, தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கிராமமக்களின் சார்பில் ஆஜரானவர்களினால் வெளிப்படுத்தப்பட்டது. அத்தோடு கடந்த பொங்கல் வழிபாட்டின் போது குறித்த பிக்குவால் வழிபாடுகளுக்கு சென்ற தமிழ்மக்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தபட்டிருந்தமையும் புகைப்படங்கள் ஆதார மூலம் காண்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் இன்று (24) இருதரப்பினரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு மன்று கட்டளை பிறப்பித்திருந்தது .

இந்த நிலையில் நேற்று (23) பொலிஸார் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினரின் பூரண  ஆதரவுடன் பெரததெனியா பல்கலைகழக பேராசிரியர் கலாநிதி கபில குணவர்த்தன மற்றும் புல்மோட்டை அரிசிமலை பகுதியில் விகாரை அமைத்து தங்கியுள்ள பிக்குகளின் பங்குபற்றலுடன் சட்டவிரோதமான வகையில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை  திறந்து வைக்கபட்டுள்ளது .

இதேவேளை குறித்த இடத்திற்கு விரைந்த முன்னாள் வடமாகாணசபை  உறுப்பினர் து.ரவிகரன்,மற்றும் கிராம மக்களை அங்கிருந்த பௌத்த துறவிகள் மற்றும் தென்னிலங்கையில் இருந்து வருகை தந்தவர்கள் சிலரும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதுடன் அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களுடன் அடாவடித்தனங்களில் ஈடுபட்டனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .