2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கொச்சைப்படுத்தாதீர்’

Editorial   / 2018 ஏப்ரல் 22 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

முள்ளிவாய்க்கல் நினைவேந்தலுக்கு வருவோரில் கட்டுப்பாடுகளை விதித்து, அந்நாளைக் கொச்சைப்படுத்த வேண்டாமெனக் கோரியுள்ள, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி. கிருஷ்ணமேனன், இந்நிகழ்வில் அனைவரும் மக்களோடு மக்களாகக் கலந்துகொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்பாக, அண்மைய நாட்களில் ஏற்பட்டிருந்த சர்ச்சை தொடர்பாக விளக்கமளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"முள்ளிவாய்க்காலுக்கு அவர் வரக்கூடாது, இவர் வரக்கூடாது என்று கூறி, அந்த நாளைக் கொச்சைப்படுத்தாதீர்கள். இந்த நிகழ்வில் அனைவரும் மக்களோடு மக்களாகக் கலந்துகொள்ளுங்கள். மற்றவர்களைக் குறைகூறி, மக்களின் கண்ணீரில் அரசியல் செய்து கதாநாயகனாகும் எண்ணங்களை விட்டுவிடுங்கள்" என, கிருஷ்ணமேனன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை, அனைத்துத் தமிழ் மக்களும் ஒன்றிணைந்து, ஒரே நிகழ்வாக, தமிழ்த் தேசியத்தை மீளெழுச்சி கொள்ளச் செய்யும் நிகழ்வாகக் கடைப்பிடிக்க வேண்டுமென, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால், சில நாட்களுக்கு முன்னர் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், இது தொடர்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தனது சந்தேகத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தார். "பிழையான சிலருக்கும் அவர்களுடைய பிழைகளுக்கும் வெள்ளையடிப்பதற்கான ஒரு முயற்சியாக இது இருக்குமோ என நாங்கள் சந்தேகிக்கிறோம்" என, அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக, கஜேந்திரகுமாருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நேற்று (21) இடம்பெற்றது. இதன் போதும், இரு தரப்புகளுக்கும் இடையில் கருத்தொற்றுமை ஏற்பட்டிருக்கவில்லை எனத் தெரிகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .