2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் சாத்தியம்?

Editorial   / 2018 நவம்பர் 20 , பி.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், டி. விஜிதா, எஸ்.குகன்

யாழ்ப்பாண மாவட்டத்தில், ஜனவரி மாதம் முதல் நேற்று (20) வரையான காலப்பகுதியில், 915 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிப் பதிவாகியுள்ளதாக, வளிமண்டளவியல் திணைக்களத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.பிரதீபன் தெரிவித்தார். 

அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில், மழை வீழ்ச்சியின் அளவு மேலும் அதிகரிக்கலாமெனவும் அவர் கூறினார். 

இது குறித்து, தொடர்ந்துக் கருத்துரை்த உதவிப் பணிப்பாளர், இந்த நவம்பர் மாதம் வரை, 611.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிப் பதிவாகியுள்ளதாகவும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் கடந்த திங்கட்கிழமை (20) வரை, 300.1 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இது, கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில், குறைந்த அளவாக உள்ளதாகத் தெரிவித்த அவர், நவம்பர் மாதம் முடிவடைவதற்கு, இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், மழை வீழ்ச்சியின் அளவு மேலும் அதிகரிக்கலாமெனவும் எதிர்வு கூறினார். 

மழை வீழ்ச்சி

நேற்று முன்தினம் (19) காலை 8.30 மணி முதல் நேற்று (20) காலை 8.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் பதிவாகிய மழைவீழ்ச்சிக்கு அமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இதற்கமைய, சாவகச்சேரியில் - 43.2 மில்லிமீற்றரும் அச்சுவேலியில் - 23.5 மீல்லிமீற்றரும், பருத்தித்துறையில் - 33.3 மில்லிமீற்றரும், நயினாதீவில் - 21.3 மில்லிமீற்றரும், நெடுந்தீவில் - 17.2 மில்லிமீற்றரும், யாழ்ப்பாணம் - கச்சேரி பகுதியில் - 22.9 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சிப் பதிவாகியுள்ளதாக, அவர் கூறினார். 

கடற்பிரதேசம்

இதேவேளை, கடலோரப் பிரதேசங்களது காற்றின் வேகம், மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசுமெனவும் கடல் கொந்தாளிப்பாகக் காணப்படுமெனவும், அவர் தெரிவித்தார். 

எனவே, மீனவர்கள், வளிமண்டளவியல் திணைக்களத்தில் அறிவுறுத்தலைக் கவனத்தில் கொண்டு செயற்படுமாறும், அவர் கேட்டுக்கொண்டார். 

டெங்கு நோய்த் தாக்கம்

அத்துடன், யாழ்ப்பாணக் குடாநாட்டில், கடந்த ஒன்றரை மாதக் காலப்பகுதிக்குள், 271 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு உள்ளனரென, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் பணிமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது மழைக் காலம் ஆரம்பித்துள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில், டெங்கு நோய் பரவுவதற்குரிய சாதகமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இந்நிலையிலேயே, கடந்த ஒன்றரை மாதக் காலப்பகுயில், 271 பேர் டெங்கு நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் குறிப்பாக, சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், 60 பேர் டெங்கு நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இனிவரும் காலங்களில், தொடர்ச்சியாக மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலும், டெங்கு நோய்த் தடுப்புச் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .