2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘ரணிலை தேசிய தலைவராக கொண்டுவர வேண்டும்’

Editorial   / 2019 ஜூலை 06 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சரியான ஒருவரை தேசியத் தலைவராக கொண்டு வர வேண்டும். அதற்கு இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவராக இருப்பார் என, ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான விஐயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்.பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தும் ஆரம்ப நிகழ்வு, பலாலி விமான நிலைய வாளகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், கடந்த காலங்களில் இயங்கிய இந்த விமான நிலையம் யுத்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்டு, மீண்டும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றமை இந்த மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். இதனுடாக சிறந்த உறவுப்பாலத்தை அமைக்க முடியும். இதற்கு அனைவரும் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதே போன்று இந்த மக்களுக்கு தேவையான பல அபிவிருத்திப் பணிகளை எமது அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இதற்கமையவே இந்த விமான நிலையமும் அபிவிருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இவ்வாறு மக்களுக்கு தேவையான அபிவிருத்திப் பணிகள் ஒருபுறம் முன்னெடுக்கப்பட்டாலும், கடந்த கால நிலைமைகளால் இங்கிருந்து இடம் பெயர்ந்து தொடர்ந்தும் அகதிகளாக மக்கள் வாழ்ந்து வருகின்றமை வேதனையாகவே உள்ளது.

ஆகவே கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்கின்ற இந்த மக்களின் காணிகள் மீள வழங்கப்பட்டு அவர்களும் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். மேலும் காணிகள் வீடுகள் இல்லாமலும் மக்கள் உள்ளனர். ஆகவே அவர்களுக்கு காணிகளையும் வீடுகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமானது.

மேலும், இந்த விமான நிலைய விஸ்தரப்புக்கு மக்களது காணிகள் எடுக்கின்ற போது, அவர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்குவதுடன் நஸ்டஈடுகளையும் வழங்க வேண்டும். அதிலும் தேவைக்கு ஏற்ப காணிகளை எடப்பதுடன் தேவைக்கு அதிகமாக காணிகளை எடுத்தக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

மேலும், விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் சில வீதிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் இருப்பதால் பெரும் சரிமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அகவே காணிகளை விடுவிப்பது போன்று இந்த வீதிகளையும் விடுவிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நாட்டுக்கு அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவர் தேசியத் தலைவராக வர வேண்டும். அதற்கும் எமது கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவராக இருப்பார். ஆகவே அத்தகையதொரு தேர்தல் வருகின்ற போது, அந்த நேரத்தில் இதைக் குறித்து அறிவிப்பதே பொருத்தமானதாக இருக்கும். அந்த நேரத்தில் மக்கள் ஏற்றுக் கொள்கின்ற அல்லது விரும்புகின்ற ஒருவரை நாங்கள் தேசியத் தலைவராக நாங்கள் கொண்டு வருவருவோம்.

இதே வேளை பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் இருந்து நீண்ட காலத்தின் பின்னராக ஆரம்பிக்கப்படுகின்ற இந்த விமான சேவைகளுக்கு குறைந்தளவிலான அறிவீடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .