2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ரவிகரன், சிவாஜி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Editorial   / 2020 நவம்பர் 30 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணியை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக வட மாகாண சபை உறுப்பினர்களான முன்னாள் துரைராசா ரவிகரன், எம்.கே.சிவிஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணை, 2021ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை,  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இன்று (30) எடுத்துக்கொள்ளப்பட்டது.

2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், வட்டுவாகல் பகுதியில் காணி அபகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன், முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலையாகியிருந்தார்.

இதேவேளை, வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன் பிணை கோரி, சட்டத்தரணி ஊடாக பிணையில் வெளிவந்தார்.

அதனைத் தொடர்ந்து இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர் அ.பீற்றர் இளஞ்செழியன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன நிரவாக உறுப்பினர் அன்னலிங்கம் சண்முகலிங்கம் ஆகியோரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் நால்வர் மீதும் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகள், இரண்டரை வருடங்களுக்கு மேலாக இடம்பெற்றுவரும் நிலையில், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில், நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இன்று மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது, நில அளவைத் திணைக்களத்தால் குற்றஞ்சாட்டப்பட்ட மேற்படி நால்வரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இதனையடுத்து, சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து இந்த வழக்குடன் தொடர்புடைய அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறாமையால், வழக்கின் விசாரணைகள் 2021ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதிக்கு தவணையிடப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X