2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வடக்கின் குடிநீர்ப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை

Editorial   / 2019 மார்ச் 27 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாணத்தின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்ப்பதுக்குரிய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் அலுவலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் குடிநீர்ப்பிரச்சனை முக்கிய சவாலாக இருக்கிறது. நாட்டில் 25 மாவட்டங்கள் இருக்கின்ற போதும் ஒரு ஆறும் நதியும் ஓடாத ஒரேயொரு மாவட்டம் என்றால்; யாழ் மாவட்டம் மட்டும் தான். ஆகையால் யாழ் மக்களை பொறுத்த வரையில் வாழ்வுக்கு அடிப்படையான கேள்வியாக நீர்ப்பிரச்சனை மாறிக்கொண்டிருக்கின்றது.

இதற்கமைய யாழ் மாவட்டத்திலுள்ள குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு 6 திட்டங்கள் தற்போது இருக்கின்றன. அவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இப்போது வடமராட்சியிலிருந்து கடல் நீரை எடுத்து குடிதண்ணீராக்குவது தொடர்பிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறன. அதற்கான இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. இதற்குப் பின்னராக ஆறுமுகம் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் பாலியாறு, பறங்கியாறு ஆகிய திட்டங்களுடன் மத்திய மற்றும் சப்ரகமுவ மாணங்களில் இருந்தநிலத்திற்கு அடியில் குழாய் நீரைக் கொண்டு வரும் திட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

இறுதியாக ஆறாவது திட்டமாக இரணைமடுத் திட்டத்திற்கும் செல்லலாமென நினைக்கின்றோம். ஏனெனில் இரணைமடு தொடர்பில் சில குழப்பங்களும் பயமும் இருக்கின்றது. ஆகையினால் அதனை இப்போது நாம் செய்யவில்லை. ஆனாலும் இது தொடர்பிலான பேச்சு வார்த்தைகளும் நடக்கின்றன. ஆகையினால் அதற்கும் அனைவரும் விரும்பினால் அத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தலாம்.

குறிப்பாக இரணைமடுகுளத்திலிருந்து கடலுக்குச் செல்லும் தண்ணீரை பணம் கொடுத்து வாங்குவதற்கு நாம் தயார். அந்த பணம் கிளிநொச்சி விவசாயிகளுக்கு உரித்துடையாதாக இருக்கட்டும். காரணம் இன்று போத்தல் தண்ணீரை பெருமளவு பணம் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றோம். அந்தநிலை இல்லாமல் இரணைமடு விவசாயிகளுக்கு பணம் கொடுத்து வாங்குவதற்கு நாம் தயார். நாளையும் கூட விவசாயிகள் தயாராக இருந்தால் நாளைக்கும் நாங்கள் அதனைசெய்யலாம்.

இவ்வாறான நிலையில் இங்கு நீரைப் பராமரிக்க அல்லது முகாமைத்தவப்படுத்தாமலும் இருக்கிறோம். அதுதான் இன்றைக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. வடக்கின் 5 மாவட்டத்திலும் 250 குளங்களைக் கண்டுபிடித்திருக்கிறோம். அவற்றைத் திருத்த நடவடிக்கை எடுக்க உள்ளோம். இவ்வாறு இங்கு நீரைப் பாதுகாத்து சேமிக்கின்ற நடவடிக்கைகள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் குடிநீரைக் கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .