2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

’வடக்கு சுற்றுலாத்துறையை முன்னெடுப்பதில் நிதிப் பற்றாக்குறை பாரிய பிரச்சினை’

Editorial   / 2017 செப்டெம்பர் 25 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு சுற்றுலாத்துறையை முன்னெடுப்பதில் நிதிப் பற்றாக்குறை, பாரியதொரு பிரச்சினையாக காணப்படுகின்றது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு, யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில், நேற்று முன்தினம் (25) இடம்பெற்ற வட மாகாண சபையின் சுற்றுலா மாநாட்டின் வாழ்த்து செய்தியிலேயே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நாட்டில் நடைபெற்ற 30 ஆண்டு கால, நீண்ட யுத்தத்தின் விளைவாக, வட பகுதியின் சுற்றுலா தொடர்பான முன்னெடுப்புகள் அனைத்தும் முடக்கப்பட்டு, சுற்றுலாத் துறையின் வளர்ச்சி பூச்சிய நிலையில் காணப்பட்டது. இதனால் இப்பகுதிகளில் காணப்படும் இயற்கை எழில் கொஞ்சும் பல சுற்றுலா மையங்கள் கவனிப்பாரற்று கைவிடப்பட்ட நிலையில், இச்சுற்றுலா மையங்கள் பற்றி உள்ளூரில் வசிக்கின்ற மக்கள் கூட அறிந்திருக்காத நிலை ஏற்பட்டது.

வட மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளில், சுற்றுலா தொடர்பான பல வேலைத் திட்டங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக முன்னெடுத்திருக்கின்றோம். எனினும் இத்துறையை சீராக முறையான தந்திரோபாயத் திட்டங்களுடன் முன்னெடுத்துச் செல்வதற்கு நிதிப் பற்றாக்குறை ஒரு பாரிய பிரச்சனையாக எம்மிடையே காணப்படுகின்றது. இது தொடர்பாக நாம் மத்திய அரசாங்கத்தின் உதவிகளை பெற்றுக் கொள்வதற்கான பல திட்டங்களை தயாரித்து அவை தொடர்பான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றோம்.

வடபகுதியின் சுற்றுலாத்துறை தொடர்பான திட்டங்கள் ஒரு வரையறைக்குள் கொண்டுவரப்படாமையால் இச் சுற்றுலா நடவடிக்கைகள் இத்துறையுடன் சம்பந்தப்படாத பாதுகாப்பு தரப்புக்கள், வெளியில் இருந்து வந்துள்ள தனியார் என பலரின் கைகளில் இப்போது தவழ்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் எமது சுற்றுலா வருமானங்கள் குறிப்பிட்ட சிலரின் கைகளுக்கு அல்லது வேறு பிரிவினருக்கு மேலதிக வருமானமாகப் போய்ச் சேரும் ஒரு நிலை காணப்படுகின்றது. இவை தொடர்பான முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் எமக்கு பல்வேறு வகைகளிலும் உதவிகளைப் புரிவதற்கும் சர்வதேச நிறுவனங்களும் யாழ். பல்கலைக்கழகமும் இன்னும் துறைசார் விற்பன்னர்களும் முன்வந்திருப்பது மகிழ்வைத் தருகின்றது.

புத்திஜீவிகள் அடங்கிய இக் குழுவினரின் உதவி ஒத்தாசைகளுடனும் மத்திய அரசின் நிதி அனுசரணைகளுடனும் வடபகுதியின் சுற்றுலாத்துறை மிக விரைவில் நவீனமயப்படுத்தப்பட்டு வடபகுதி சிறந்த சுற்றுலா மையமாக மாறுகின்ற நாள் வெகு தூரத்தில் இல்லை” எனக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X