2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘வர்த்தக நடவடிக்கைகளின் தரத்தை உயர்த்த வேண்டும்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 12 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வட பகுதியில், வர்த்தக நடவடிக்கைகளின் தரத்தை, தேசிய மற்றும் சர்வதேச தரத்துக்கு ஒப்பானதாக தரமுயர்த்த நீங்கள் அனைவரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான வருடாந்த கண்காட்சி,  சங்கிலியன் பூங்கா மைதானத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போதெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“இவ்வாறான பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் மத்தி, மாகாணம் என்றோ மாவட்டச் செயலகம், அமைச்சர் செயலகம் என்றோ நாங்கள் இனம் பிரித்துப்பார்ப்பதில்லை. எமது மக்களின் வருங்காலமே எம் எல்லோருக்கும் முக்கியம். அதை நாடியே மாவட்டச் செயலக நடவடிக்கைகளும் எமது அமைச்சர்களின் செயற்செயற்பாடுகளும் முன்னேறிச் செல்கின்றன.

“வர்த்தகம் என்பது வெறுமனே கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் கிடைக்கப் பெறுகின்ற பொருட்களை கொள்வனவு செய்து அதனை வாடிக்கையாளர்களுக்கு இங்கு கொண்டுவந்து விற்பனை செய்வது மட்டுமல்ல. மாறாக, எமது பகுதிகளில் காணப்படுகின்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்வதும் அவற்றைச் சந்தைப் படுத்துவதும் வர்த்தகத் துறையின் மிக முக்கியமான நடவடிக்கைகளாகும்.

“நாம் மேற்கொள்ள இருக்கின்ற தொழில் முயற்சிக்கு போதிய சந்தை வாய்ப்புக்கள் இருக்கின்றனவா, தொழில் முயற்சிக்கான மூலப்பொருட்களை தடையின்றி தொடர்சியாக பெற்றுக்கொள்ள முடியுமா, உற்பத்திச் செலவீனம் எமது கட்டுப்பாட்டுக்குள் இருக்குமா, அவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் கூடுதல் சந்தை வாய்ப்பை பெறக்கூடிய வகையில் தரமானதாக இருப்பனவா போன்ற பல விடயங்களை தொழில் முயற்சியை ஆரம்பிப்பதற்கு முன்னரே எம்மால் மதிப்பீடு செய்து கொள்ளப்பட வேண்டும்.

“இவை அனைத்துக்கும் மேலாக, வாடிக்கையாளர்களை திருப்திப் படுத்துகின்ற நிகழ்வு, மற்றைய எல்லா நடவடிக்கைகளையும் விட முக்கியத்துவம் பெறுகின்றது. ஒரு உற்பத்திப் பொருளை அல்லது உபகரணம் ஒன்றை கொள்வனவு செய்ய வருகின்ற வாடிக்கையாளர் அது பற்றிய பல மேலதிக தரவுகளை அறிந்து கொள்ள விரும்புவர்.

“அவ்வாறான சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளரை திருப்தியடையச் செய்யும் வகையில் நீங்கள் வழங்குகின்ற தகவல்கள் உங்கள் விற்பனை நிலையத்தின்பால் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தும். மாறாக உங்களுடைய பொருட்கள் எவ்வளவு தரம் மிக்கதாக இருந்தபோதும் நீங்கள் வாடிக்கையாளரை திருப்திப்படுத்தாது விடின், உங்கள் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்படுவன.

“பொதுவாகவே ஒரு கருத்து மேலோங்கி இருக்கின்றது. அதாவது வடபகுதி இளைஞர் யுவதிகள் அரச சேவைகள் தவிர்ந்த வேறு எந்த வேலைகளிலும் ஈடுபட மாட்டார்கள் அல்லது வேறு தொழில்கள் தெரியாது என்று கூடக் கூறப்படுகின்றது. இந்நிலை மாற்றப்பட வேண்டும். வளர்ச்சியென்பது ஓர் இரவில் ஏற்படுவதல்ல. என்ன தொழிலாக இருந்தாலும் உறுதியானதும் படிப்படியானதுமான வளர்ச்சியே நிரந்தரமானது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .