2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘வறுமையை ஒழிப்பதற்கு கூட்டு முயற்யே அவசியம்’

Editorial   / 2017 டிசெம்பர் 14 , மு.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், டி.விஜிதா

“பொருளாதார ரீதியாக நன்மை கிடைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து, நவீன தொழில்நுட்ப முறைகளை அறிமுகம் செய்து, வடமாகாணத்தின் பொருளதார அபிவிருத்தியின் ஊடாக வறுமையை ஒழிப்பதற்கான கூட்டு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்” என, வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 113ஆவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று (13) நடைபெற்றது. இதன்போது, 2018ஆம் ஆண்டுக்கான வரவு-  செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே​யே, அவர் ​மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“2018ஆம் ஆண்டு மீண்டுவரும் செலவீனத்துக்காக 880.80 மில்லியன் ரூபாயும் மூலதனச் செலவீனத்துக்காக 473.50 மில்லியன் ரூபாயும் எமது அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“வட மாகாணம் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது, வறுமை கூடிய மாகாணமாக உள்ளது. வறுமையைத் தணித்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய தார்மீக கடப்பாடு எம் அனைவரையும் சார்ந்ததாகும். மக்களின் வாழ்வாதார திட்டங்களை மேம்படுத்தக் கூடிய துறைகளான விவசாயம், கால்நடை வளர்ப்பு, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி ஆகிய துறைகள் எமது அமைச்சின் நிர்வாகப் பரப்பினுள் உள்ளன.

“பொருளாதார ரீதியாக நன்மை கிடைக்கக்கூடிய திட்டங்களை முன்னெடுத்து நவீன தொழில்நுட்ப முறைகளை அறிமுகம் செய்து பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களை உருவாக்க முடியும்.

“உள்நாட்டு சந்தை வாய்ப்பு வசதிகள் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கு எமது உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யவும் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துத வேண்டும்.

“வாழ்வாதார உற்பத்தி செயற்பாடுகளின் போது அரச மற்றும் தனியார்  பங்களிப்பு மற்றும் முயற்சியாண்மையாளர் பங்களிப்பு என்பவற்றைப் பெற்றுக் கொள்வதுடன், அமைச்சினூடாக உருவாக்கப்பட்டு வரும்  விவசாயம், கால்நடை, நீர்ப்பாசனம், சுற்றாடல் மற்றும் மீன்பிடி தொடர்பான நியதிச் சட்டங்கள் மூலம் துறை சார்ந்த கட்டமைப்புக்களை உருவாக்கி சட்டரீதியாக நிர்வாக கட்டமைப்புகளை பலப்படுத்தி, எமது மாகாணத்தின் அபிவிருத்தியை முன்னெடுத்தல் அவசியமானதாகும்.

“மேலும், எமது மாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான எம்மிடமுள்ள வளங்கள் பலவற்றை நாம் இன்னும் இனங்காண வேண்டியுள்ளது. அவற்றில் இருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய வருமான வழிவகைகளையும் உரிய ஆக்கபூர்வமான திட்டங்களை வகுத்து செயற்படுத்தவேண்டிய தேவையும் காணப்படுகின்றது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .