2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் அரசியல் உரிமையை ஏற்றமையை உணர்த்துகிறது’

Yuganthini   / 2017 ஜூலை 27 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு, ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றத்தால் எடுக்கப்பட்ட முடிவு, தமிழ் மக்களின் அரசியல் உரிமையை ஏற்றுக்கொண்டுள்ளமை உணர்த்துகிறது என, அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அமைப்பின் தலைவர் வணக்கத்துக்குரிய பிதா சக்திவேல் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நல்லூரில், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும், நீதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், கிளிநொச்சியில் போராட்டம் ஒன்றை இன்று (27) காலை முன்னெடுத்தனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் ஆலயம் முன்பாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில், அந்த உறவுகள், பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு, அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அப்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சக்திவேலிடம், விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பாகக் கேள்வியெழுப்பப்பட்டது. அப்போது அவர், இந்த விடயம் தொடர்பாக, இலங்கை அரசாங்கத்துக்குத் திருப்தி ஏற்படாத போதிலும், தமிழ் மக்களின் போராட்டத்துக்கான அங்கிகாரம் என்ற அடிப்படையில் பதிலளித்தார். அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், நீண்ட காலமாகப் போராடிக் கொண்டிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டமைக்கு, தமிழ் அரசியல் தலைமைகளே காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கருத்துத் தெரிவிக்கையில், நல்லூரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை, தமிழ் மகன் ஒருவரை ஏவி விட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்று எனக் குறிப்பிட்டனர். அத்தோடு, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X