2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படுவதில் குளறுபடிகள்

எம்.எல். லாபீர்   / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (18) இடம்பெற்றது.  இக்கூட்டத்தை, இணைத் தலைவர்களான, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தலைமையேற்று நடாத்தினர். அங்கு விசேட பிரேரணையாக, யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுக்கான வீட்டுத் திட்டம் சார்ந்த விடயங்களை வட மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் முன்வைத்திருந்தார்.

குறித்த விடயம் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, “1990களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் 3,417 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்தார்கள் என யாழ். மாவட்டச் செயலகத் தரவுகள் தெரிவிக்கின்றன. 2009களுப்பின் பின்னர் அந்த எண்ணிக்கை அதிகரி த்திருக்கும், ஆனால் இன்று வரை 1,000 முஸ்லிம் குடும்பங்களுக்காவது வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படவில்லை, இதனை ஒரு பாரிய பாரபட்சமான நடவடிக்கையாகவே மக்கள் நோக்குகின்றார்கள். வீட்டுத் திட்டம் குறித்து நாம் பேசும்போதெல்லாம் போதிய வீட்டுத் திட்டங்கள் எம்மிடம் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றார்கள். இந்திய அரசாங்கத்தோடு பேசி 300 வீட்டுத்திட்டங்களை நாம் கொண்டுவந்தோம் பொதுவான நடைமுறைகளை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடித்த அதிகாரிகள் 50க்கும் குறைவான வீடுகளையே முஸ்லிம் மக்கள் பெற்றுக்கொள்ள வழிவிட்டார்கள்.

இப்போது விசேட மீள்குடியேற்ற செயலணியின் மூலம் 200 வீடுகள் முஸ்லிம் மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. அதற்கு அமைச்சரவை அங்கிகாரமும் வழங்கப்ப்பட்டிருக்கின்றது. ஆனால், அதிலும் இதே அதிகாரிகள் பொதுவான நடைமுறை என்ற பெயரில் முஸ்லிம் மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.

இப்போது ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்ற 200 வீடுகளுக்குமான பயனாளிகளாக முஸ்லிம் குடும்பங்களை உள்வாங்குவதற்கு விஷேட வேலைத்திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படல் வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும். அத்தோடு பறச்சேறிவயல் காணிகளில் வீடுகளை நிர்மானிப்பதற்கான அனுமதிகளையும் உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அஸ்மின் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், இணைத் தலைவர்கள், முஸ்லிம் மக்களுக்கு தனியான விசேட நடைமுறைகளை ஏற்படுத்த முடியாது, ஆனால், முடியுமானவரை மனிதாபிமான அடிப்படையில் இந்தப் பிரச்சினைகளை அணுகுவதற்கு முயற்சிக்கவேண்டும், குறிப்பாக அதிகாரிகள் வீட்டுத் திட்டங்களை வழங்குவதற்கு ஏதுவாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமே தவிர அவற்றை இல்லாமல் செய்வதற்காக நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு பறச்சேறிவயல் பிரதேசத்தில் வீடுகளை அமைக்க விரும்பும் காணி உரிமையாளர்கள் உரிய முறையில் விண்ணப்பங்களை வழங்கினால் அவர்களுக்கு குறித்த காணிகளில் வீடுகளை நிர்மானிக்க அனுமதி வழங்கப்படும் என்று அரசாங்க அதிபர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .