2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’வேற்றுமை உணர்வை இல்லாதொழிக்க வேண்டும்’

Editorial   / 2017 மே 26 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

"எம்மிடையே வேற்றுமை இல்லை. மாறாக சிந்தனைத் தெளிவு உண்டு. இந்த நாட்டின் இனங்களுக்கிடையே காணப்படுகின்ற வேற்றுமை உணர்வுகளும் சச்சரவுகளும் அரசியல்வாதிகளாலும் பிற்போக்கு சிந்தனையாளர்களாலும் விதைக்கப்பட்ட ஒரு நச்சு விதையாகும்" என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று (26) தெரிவித்தார்.

"இதனை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். இதற்காக நாம் அனைவரும் இன, மத, மொழி பேதமின்றி ஒன்றாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து முன்னெடுக்க வேண்டும். தவறான சிந்தனைகள் மாறினால் நாட்டின் அரசியல் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்று நான் நம்புகின்றேன்" எனவும் குறிப்பிட்டார்.

ஆழிக்குமரன் ஆனந்தனின் நினைவாக, வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில், 75 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள நீச்சல் தடாகத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா, இன்று (26) நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், " சிறுவயதில் இருந்தே எந்தவொரு காரியத்தை முன்னெடுத்தாலும் அதில் வெற்றிபெற வேண்டும் அதன் மூலம் சாதனைகள் படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் ஆனந்தன் செயற்பட்டார்.

கின்னஸ் புத்தகத்தில் குறைந்தது பத்து பதிவுகளையாவது உட்புகுத்த வேண்டும் என்பது அவரின் இளவயதுக் கனவாக இருந்தது.   

இலண்டன் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான இளமானிப் பட்டம் பெற்று அதன்பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சட்ட இளமானிப்பட்டம் பெற்று சட்டத்தரணியாக சித்திபெற்று சிறிது காலம் சட்டத்தரணியாக பணியாற்றிய போதும் அத்துறையில் நாட்டம் இல்லாத காரணத்தினால் அதனைக் கைவிட்டு விட்டுவணிகத்துறையில் கால் பதித்தார்.

1971இல் வல்வெட்டித்துறையில் இருந்து பாக்கு நீரிணை வழியாக இந்தியாவில் இருக்கும் கோடிக்கரை எனும் ஊருக்கு அவர், நீந்திக் கரை சேர்ந்தார். இவருக்கு முன் இதே ரேவடி கடற்கரையில் இருந்து 1954ஆம் ஆண்டில் அமரர் நவரத்தினசுவாமி அவர்கள் பாக்கு நீரிணையை முதன் முதலாக நீந்திக் கடந்து சாதனை படைத்திருந்தார்.

அதனைப்புரிந்த குமார் ஆனந்தனுக்கு 'ஆழிக்குமரன் ஆனந்தன்' என்ற சிறப்புப் பெயரும் வழங்கப்பட்டது. அதற்கும் மேலாக கோடிக்கரையில் இருந்து மீண்டும் வல்வெட்டித்துறைக்கு திரும்பி வந்த போது பல்லாயிரக்கணக்கான மக்கள் அக்கால அரசியல் தலைவர் தந்தை செல்வாவின் தலைமையின் கீழ் கடற்கரையில் நின்று அவரைக் கௌரவித்து வரவேற்பதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டமை அவரின் பெருமையை உலகறியச் செய்தது.

ஆழிக்குமரன் ஆனந்தன், 20க்கும் மேற்பட்ட சாதனைகளைப் புரிந்த போதும் அவற்றில் 07 சாதனைகள் மட்டுமே கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டன. எனினும், முதலாவது சாதனையாக 1963இல் வல்வெட்டித்துறையில் இருந்து கோடிக்கரை வரை நீந்திக் கடந்த சாதனை, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவில்லை.

1.          முதன்முதலாக தலை மன்னாரில் இருந்து இந்தியாவில் உள்ள தனுஷ்கோடிக்கு 1971ஆம் ஆண்டில் நீந்திச் சென்று, அங்கு பத்தே நிமிடங்கள் ஓய்வு எடுத்த பின் (சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப) மீண்டும் அங்கிருந்து, தலை மன்னாருக்கு மொத்தம் 51 மணித்தியாலங்கள் 35 நிமிடங்களில் அவர் நீந்திக் கடந்தார்.

2.         1979ஆம் ஆண்டு மே மாதம், கொழும்பு விகாரமாதேவிப் பூங்காவில் 187 மணித்தியாலங்கள் சைக்கிளில்  தொடர்ந்து இடைவிடாது பிரயாணம் மேற்கொண்டார்.

3.         1979ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில், 136 மணித்தியாலங்கள் 28 நிமிடங்கள் பந்தொன்றை தொடர்ந்து கைகளால் அடித்து சாதனை படைத்தார். (Non Stop Ball Punching)

4.         1980ஆம் ஆண்டு மே மாதத்தில், 165 Sit ups களை 2 நிமிடங்களில் செய்து ஒரு புதிய சாதனையை நிலைநாட்டினார்.

5.         1979ஆம் ஆண்டு மே மாதத்தில் 33 மணித்தியாலங்கள் தொடர்ந்து ஒற்றைக்காலில் நின்று சாதனை புரிந்தார்.

6.         1980ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் உயர உதைத்து (High Kicks) 9,100 உதைவுகளை 7 மணித்தியாலம் 51 நிமிடங்களில் நிறைவு செய்தார்.

7.          1981ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், சென்னை அண்ணா நீச்சல் தடாகத்தில் தொடர்ந்து 80 மணித்தியாலங்கள் பாதங்களால் தவளை போல் நீரை உதைத்துக் கொண்டிருந்தும்(Treading in Water) சாதனை படைத்தார்.

மேற்கூறிய 07 சாதனைகளும் கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கு மேலதிகமாக கொழும்பு காலி முகத்திடலில் 128 மணித்தியாலம் 16 நிமிடங்கள் இடைவிடாது Twist நடனமாடிச் சாதனை புரிந்தபோது அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, நேரில் சென்று பாராட்டியிருந்தார்.

ஆங்கிலக் கால்வாயை மூன்று தடவைகள் நீந்திக்கடக்க முயன்ற போது கடும் குளிர் காரணமாகவும் உடல்நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டு ஹைப்பர்தேர்மியா என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு குருதி அழுத்தம் மிகவும் குறைந்து சுவாசம் தடைப்படுகின்ற வேளையிலும் வைத்தியர்களின் தொடர் அறிவுறுத்தல்களை மீறி நீந்திக் கொண்டிருக்கும் போது, மயக்கமுற்ற நிலையில், உடனடியாக ஹெலிகொப்டர் மூலம் அவசரமருத்துவப் பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் 1984ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆறாம் திகதியன்று அவரது உயிர் பிரிந்தது.

துன்பம் என்னவெனில், ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதற்கு இளமைக் காலத்தில் இருந்தே முயற்சி செய்த போதும் அக்கால பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்துக்கு தடை விதித்திருந்தமையால் காலம் கடந்தே அவரின் முயற்சி மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது.

சீதோஷ்ண நிலை சீராக இருக்கக்கூடிய காலங்களில் செலவினங்கள் மிக அதிகம் என்ற காரணத்தினால் பணத் தட்டுபாட்டின் நிமித்தம் ஓகஸ்ட் மாதத்திலேயே தனது நீச்சல் முயற்சியை ஏற்பாடு செய்திருந்தார். அக்காலத்தில் கடல்நீரின் கடுமையான குளிரே இவரின் இனிய உயிரை காவு கொண்டது.

இத்துணை சிறப்புக்களும் உடைய ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக இந்த நீச்சல் தடாகத்தை அமைப்பதற்காக முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய நிதி அமைச்சருமாகிய மங்கள சமரவீர கொழும்பில் இருந்து இங்கே வருகை தந்திருக்கின்றார்.

ஆழிக்குமரன் ஆனந்தனின் மனைவியார் திருமதி மானெல் ஆனந்தன், மங்கள சமரவீரவின் கிட்டியஉறவினர் என்பது இங்கிருக்கும் பலருக்கும் தெரியுமென்று நினைக்கின்றேன்.

இந்த நீச்சல்தடாகம் சிறப்புற அமைய வேண்டும். இங்குள்ள மக்களும் சுற்றுலாப்பயணிகளும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும்இதனைபயன்படுத்துவதற்கு ஏற்ற ஒரு நிலையமாக பராமரிக்கும் பணி வல்வெட்டித்துறை பிரதேசசபையினால் மேற்கொள்ளப்படும்என்று நம்புகின்றேன். பராமரிப்பின்றேல் எல்லாமே வீணாகி விடும்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X