2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஆடுகளைத் திருடியவர்கள் விளக்கமறியலில்

ரஸீன் ரஸ்மின்   / 2017 ஜூன் 26 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி, புதுக்குடியிருப்பு பிரதேத்தில் 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆடுகள் இரண்டைத் திருடிய குற்றச்சாட்டின் கீழ், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரை, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட பதில் நநீதிவான் எம்.எம்.இக்பால், உத்தரவிட்டார்.

கற்பிட்டி புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள கடற்தொழிலாளி ஒருவர் தனது வீட்டில் 15 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். குறித்த 15 ஆடுகளையும் மாலை 3 மணியளவில் மேய்ச்சலுக்காகத் திறந்து விடுவதாகவும் பின்னர் 6 மணியளவில் சகல ஆடுகளும் மீண்டும் வீட்டுக்கு திரும்புவதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற கடந்த வெள்ளிக்கிழமை, ஆட்டின் உரிமையாளர் தனது 15 ஆடுகளையும் மேய்ச்சலுக்காக பட்டியில் இருந்து  வெளியே திறந்துள்ளார்.

இவ்வாறு வெளியே சென்ற ஆடுகள், மாலை 6 மணியளவில் மீண்டும் வீட்டுக்கு வந்த போது அதில் இரண்டு ஆடுகள் காணாமல் போயுள்ளன. பின்னர் ஆட்டின் உரிமையாளர், காணாமல் போன இரண்டு ஆடுகளையும் தேடிச் சென்றுள்ளார்.

இதன்போது குறித்த இரண்டு ஆடுகளையும் இருவர் மேய்த்துக்கொண்டு செல்வதாக, பிரதேச மக்கள் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் ஆட்டின் உரிமையாளரான கடற்தொழிலாளி, குறித்த இருவரையும் பிடித்து, கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.

அத்துடன், கடத்திச் சென்றதாகக் கூறப்படும் இரு ஆடுகளும் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டன.

குறித்த இரு ஆடுகளையும் திருடினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், சனிக்கிழமை புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம்.இக்பால் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது சந்தேகநபர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் இரு ஆடகளையும் 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறும் பதில் நீதிவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .