2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும்’

Editorial   / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம், அப்துல்சலாம் யாசீம், எம்.எஸ்.எம். ஹனீபா, ஏ.எச்.ஏ. ஹுஸைன், பைஷல் இஸ்மாயில்

“தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை  அரசாங்கம் மனிதாபிமான ரீதியில்  அணுகி, அவர்களின் விடுதலைக்கான  நியாயமான தீர்வை வழங்க வேண்டும்” என, கிழக்கு மாகாண முன்னாள்  முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் கோரிக்கை விடுத்தார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துவரும் உண்ணவிரதப் போராட்டம் குறித்து. ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“காலங்காலமாக தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுப்பதும் அவர்களுக்கு வாக்குறுதிகள் வழங்கப்படுவதும் வாடிக்கையாகியுள்ளது.

“இப்பிரச்சினை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டிய  தேவையுள்ளது.

“நாட்டில் யுத்தம் முடிந்து 8 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், அரசியல் கைதிகளின் விடுதலை, மீள்குடியேற்றம், காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் உட்பட  பல விடயங்கள் தொடர்பில் இதுவரை எவ்விதமான தீர்க்கமான தீர்வுகளும் வழங்கப்படவில்லை.

“நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமல் அனைத்து சமூகங்களும் புரிந்துணர்வுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும் என்பதே நாட்டு மக்களின் அவாவாகும்.

“அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவது வரவேற்கத்தக்கது என்ற போதிலும் தமிழ் அரசியல் கைதிகளுக்கான விடுதலையை மனிதாபிமான ரீதியில் அரசாங்கம் வழங்க முன்வரும் பட்சத்தில் அது அரசாங்கத்தின் பாரிய நல்லிணக்க சமிக்ஞையாக இலங்கை அரசை  சர்வதேச சமூகம் பார்க்கும் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்,

“விசாரணைகள் இன்றியும் தம்மீதான தண்டனைக் காலத்துக்கு அதிகமாகவும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உடனடி விடுதலை என்பது  சிறுபான்மையினர் மத்தியில் மேலும் அரசாங்கம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த உதவும்.

“தமது ஒட்டு மொத்த உறவுகளையும் பிரிந்து சிறையில் அவர்கள் படும்வேதனை மனிதாபிமான ரீதியில் நோக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்தின் சகவாழ்வு மற்றும்நல்லிணக்கத்துக்குப் பொறுப்பாக இருக்கின்ற அமைச்சர் மனோ கணேசன் போன்றோர் அரசாங்கத்துக்கு வலியுறுத்த வேண்டும்,

“நாட்டில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டுமானால் அது மக்கள் மனங்களூடாகவே கட்டியெழுப்பபட வேண்டும்,

“நம்பிக்கையிழந்த, பாதிக்கப்பட்ட மக்கள் மனங்களில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் நியாயமான தீர்வொன்று வழங்கப்பட்டு சிறுபான்மை மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கை விதைக்கப்படுவதன் ஊடாக மாத்திரமே நல்லிணக்கத்தை வளர்க்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .