2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘பிரேமதாசவுக்குப் பின்பு எங்களை யாரும் கண்டு கொள்வதில்லை’

Editorial   / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மறைந்த ஜனாதிபதி ரணசிங்ஹ பிரேமதாசவின் மறைவின் பின்பு எங்களை யாரும் கண்டு கொள்வதில்லை. இதுவரையில் ஆட்சி செய்த எந்த அரசாங்கமும் எங்களுக்கு எதையும் செய்யவில்லை” என, அநுராதபுரம், நீராவி பகுதியில் வசிக்கின்ற பொதுமக்கள், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனிடம் கவலை தெரிவித்தனர்.

அநுராதபுரம், நீராவி பகுதிக்கு கல்வி இராஜங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், அண்மையில் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போதே, பொதுமக்கள் இவ்வாறு கவலை தெரிவித்தனர்.

இதன்போது நீராவி பகுதியில் வசிக்கும் சந்திரன் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“நாங்கள் பல வருடங்கள் முன்பு இந்தியாவில் இருந்து இங்கு வந்தவர்கள். எங்களுடன் மலையக பகுதிகளில் இருந்து இங்கு வந்தவர்களும் இப்பகுதியில் இருக்கின்றார்கள். நாங்கள் பல்வேறு சிரமங்கள் மத்தயில் வாழ்ந்து வருகின்றோம்.

“மறைந்த ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சி காலத்தில் எங்களுக்கு வீடுகளை அவர் கட்டிக் கொடுத்தார். அவருக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில், நாங்கள் இன்றும் ஜக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களித்து வருகின்றோம். ஆனால், எந்த ஒரு அமைச்சரும் எங்களைக் கண்டு கொள்வதில்லை.

“எங்களுக்குப் பாடசாலை, வீடு, போக்குவரத்து உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருக்கின்றன. இங்குள்ள படித்த இளைஞர்களுக்கு சரியான தொழில் வாய்ப்புகள் இல்லை.

“நாங்கள் தற்பொழுது சுமார் 500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றோம். எங்களுடைய சிறிய வீட்டில் மூன்று தொடக்கம் நான்கு குடும்பங்கள் வாழந்து வருகின்றன. இனியாவது எங்களை இந்த அரசாங்கம் கண்டு கொள்ள வேண்டும்” என்றார்.

இதற்குப் பதிலளித்த கல்வி இராஜாங்க அமைச்சர், “உங்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக உங்களைப் பிரதிநித்துவம் செய்கின்ற மக்கள் பிரதிநிதிகளிடம் கதைக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் ஊடாகவே உங்களுக்கான வசதிகளையும் அபிவிருத்திகளையும் செய்ய வேண்டும். நான் இது தொடர்பாக அவர்களிடம் மிக விரைவில் பேசுகின்றேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .