2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புத்தளம் தள வைத்தியசாலை தொடர்பில் ராஜித கரிசனை

Editorial   / 2017 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின், எம்.யூ.எம். சனூன்

புத்தளம் தள வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் முழுமையான திட்ட வரைபு ஒன்றை ஒரு மாதகாலத்துக்குள் வழங்குமாறும், அதற்குத் தேவையான நிதியை விடுவிப்பதாகவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

புத்தளம் தள வைத்தியசாலையை சகல வசதிகளும் கொண்ட சிறந்த வைத்தியசாலையாக மாற்றியமைக்கத் தன்னால் முடியுமான பங்களிப்பை வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன புத்தளம் தள வைத்தியசாலைக்கு திங்கட்கிழமை மாலை விஜயம் செய்தார்.

புத்தளம் தள வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் என்.நகுலனாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வடமேல் மாகாண சுகாதார அமைச்சர் லக்‌ஷ்மன் வென்ட்ரூ, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் டி. பி. விக்ரமசிங்க மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் பரீத் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

புத்தளம் தள வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர்,  கர்ப்பிணி, சிறுவர் மற்றும் விபத்து ஆகிய வார்ட்டுகளை பார்வையிட்டதுடன், குறித்த வார்ட்டுகளுக்குப் பொறுப்பான வைத்தியர்களிடமும் தாதியர்களிடமும் குறைபாடுகளையும் கேட்டறிந்து கொண்டார்.

இதனையடுத்து, வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

வைத்தியர்கள், அதிகாரிகள், வைத்தியசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், பொதுமக்களின் பிரதிநிதிகள் மற்றும் வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினர், இக்கலந்துரையாடலில் பங்கேற்று, நோயாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வைத்தியசாலைக்குத் தேவையான ஆளணி மற்றும் பௌதீக வளங்கள் தொடர்பில்  எடுத்துரைத்தனர்.

இதன்போது, புத்தளம் வைத்தியசாலையில் தற்போது இடம்பெற்று வரும் நிர்மாணப் பணிகளான வைத்தியர் விடுதித் தொகுதி, தாதியர் விடுதித் தொகுதி, மருந்துக் களஞ்சியம் என்பவற்றுக்காக உடனடியாக தேவையான மேலதிக நிதியை விடுவிக்கும் படி, அதிகாரிகளுக்கு, சுகாதார அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

இதேவேளை, புத்தளம் வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சர் டொக்டர் என்.நகுலநாதன் சமர்ப்பித்துள்ள மகஜரில் உள்ள மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்த சுகாதார அமைச்சர், வைத்தியர்களும் தாதியர்களும் தனக்கு சுட்டிக்காட்டிய வைத்தியர்கள், தாதியர்கள் பற்றாக்குறையை நீக்கி வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதியளித்தார்.

மேலும், வைத்தியசாலையில் பல வருடங்கள் நிரந்தரமின்றி, வேதனமின்றி  சேவையாற்றும் ஊழியர்களை சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பதுடன்,  புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக சமர்ப்பித்த கடிதத்தில் உள்ள தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .