2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பெருநாளன்று ஏற்படவிருந்த முறுகல் முடிவு

Editorial   / 2017 ஜூன் 27 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர், ஹிரான் பிரியங்கர ஜயசேகர

புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெருக்குவட்டான் கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள கருமாடுப் பகுதியில், இரு சமூகங்களுக்கிடையே, கடந்த ரமழான் பெருநாளன்று (26) ஏற்படவிருந்த முறுகல்நிலை, அரசியல்வாதிகளதும் அதிகாரிகளதும் தலையீட்டினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

குறித்த பகுதியிலுள்ள கொத்தாந்தீவு பள்ளிவாசலுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் காணியில், சம்பவ தினத்தன்று காலை 11.30 மணியளவில் பெருநாள் விளையாட்டுக்களை நடத்துவதற்கு, இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

எனினும், அக்காணிக்கு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தினர் சிலர், விளையாட்டுக்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இடம் அரச காணி எனக்கூறி, அதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தனர். அத்துடன், இது தொடர்பில் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கும் தகவல் வழங்கியதையடுத்து, இப்பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்குமாறு, முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மேற்குறிப்பிட்ட காணியில் பெருநாள் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான அனுமதியை, பொலிஸார் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், கறுவாமடு பகுதியைச் சேர்ந்த சில பெரும்பான்மையினத்தினர், அவ்விடத்தில் ஒன்றுகூடினர். அவர்கள், போட்டிகளை ஏற்பாடு செய்த இளைஞர்களுக்கு இடையூறு விளைவித்ததோடு, இளைஞர் ஒருரைக் கத்தியால் குத்தி பலத்த காயத்தை ஏற்படுத்தியதையடுத்து, இரு தரப்புக்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இது பாரிய பிரச்சினையாக உருவெடுக்க இருந்த நிலையில், பொலிஸார் அங்கு வரவழைக்கப்பட்டனர். நிலைமை மோசமடைந்த நிலையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான எஸ்.ஆப்தீன் எஹியா, ஏ.எச்.எம்.றியாஸ், கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சேகு அலாவுதீன் மற்றும் புத்தளம் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அலி சப்றி ரஹீம் உட்பட ஏராளமான அரசியல்வாதிகளும், சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

இதேவேளை, சம்பவ இடத்தில் பெருவாரியகக் குவிந்த முஸ்லிம் மக்களுடன், மேற்குறிப்பிட்ட அரசியல்வாதிகளும் பொலிஸ் உயரதிகாரிகள் கலந்துரையாடினர்.

குறிப்பிட்ட கலந்துரையாடலில், முஸ்லிம் இளைஞரைக் கத்தியால் வெட்டிக் காயப்படுத்திய சந்தேகநபரைக் கைதுசெய்வதாகவும் காணி சம்பந்தமான பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத்தருவதாகவும் பொலிஸார் உத்தரவாதம் வழங்கியதையடுத்து, அங்கிருந்தவர்கள் களைந்து சென்றதுடன், முறுகல் நிலையும் தணிந்தது.

பின்னர் அவ்விடத்துக்கு வருகை தந்த புத்தளம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பிக்க சிறிவர்தன, நிலைமையைக் கேட்டறிந்த பின்னர், அப்பிரதேசங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், விசேட அதிரடிப் படையினர் மற்றும் மேலதிகமாக பொலிஸாரை வரவழைத்து, அப்பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X