2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இலங்கையில் தொடக்கநிலை வணிகங்களின் நிலை

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தொடக்கநிலை வணிகங்களானவை, இன்னும் சில வருடங்களில், நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரும் பங்களிப்பையும் தாக்கத்தையும் செல்லுத்துவனவாக, வளர்ந்து நிற்கப்போகின்றன.   

2012ஆம் ஆண்டுக்குப் பின்னரான பொருளாதார வளர்ச்சியில், தொடக்கநிலை வணிகங்களின் ஆரம்பமும் அதற்கான பங்களிப்புகளுமே, இந்த வணிகங்களின் இன்றைய வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளன.   

சுமார் ஆறு ஆண்டுகால செயற்பாடுகளுக்குப் பின்னர், இவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ள தொடக்கநிலை வணிகங்களின் நிலையைத் தற்போது நாம், மறுமதிப்பீடு செய்ய வேண்டும். ஏனெனில், எதிர்காலத்தில் இந்தத் துறையில் கால்பதிக்க நினைக்கும் எவருக்கும், எத்தகைய ஆயத்தங்களுடன், எத்தகைய வணிகப் பிரிவில் கால்பதிக்க வேண்டுமென்ற தெளிவும் புரிதலும் கிடைக்கப் பெறும்.   

தொடக்கநிலை வணிகங்களின் நிதி மூலம்   

இலங்கையில் தொடங்கப்படும் துணிகர வணிக முயற்சியில், பெரும்பாலானவை உரிமையாளர்களின் சொந்த முதலீட்டில், அதாவது அவர்களின் சொந்தச் சேமிப்பில்தான் ஆரம்பிக்கப்படுகின்றன. குறிப்பாக, 51%மான வணிகங்கள், இத்தகைய உரிமையாளர்களின் 100% சொந்த முதலீட்டில் ஆரம்பிக்கப்படுவதுடன், 19%மான வணிகங்கள், தமது குடும்பங்கள்,  நண்பர்களின் முதலீட்டு உதவியுடன் ஆரம்பிக்கப்படுகின்றன.   

பொதுவாக, வணிகமொன்றை ஆரம்பித்து, வெற்றிகரமாக நடத்திச் செல்லும்போதே, மூன்றாம் தரப்பு முதலீட்ளாளர்கள் என அழைக்கப்படும் Angel Investors, வணிகத்தில் முதலீடு செய்ய முன்வருவார்கள். ஆயினும், வணிகத்தின் திட்டமானது, வெற்றியடையுமென உறுதியாக நம்புகின்றபோது, இவர்களே வணிகத்தை ஆரம்பிப்பதற்கான முதலீட்டைச் செய்வதற்கு முன்வருவார்கள். 

அந்த வகையில், 12%மான வணிகங்கள், இத்தகைய முதலீட்டாளர்களின் முதலீட்டு உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இவற்றைத் தவிர்த்து, அண்மைக் காலங்களில், அரசாங்கம் அறிவித்துள்ள கடன் திட்டங்களின் விளைவாக, 8%மான வணிகங்கள் வங்கி கடன் உதவியுடன், ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  

இவற்றுக்கு மேலதிகமாக, சந்தையில் வெற்றிகரமாகவுள்ள தொடக்கநிலை வணிகங்களில், 36%மான வணிகங்கள், முதலீட்டு உதவியுடன் தொடர்ந்தும், தனித்துவமாகச் சந்தையில், தம்மை விரிவுபடுத்திக்கொள்ளவே எதிர்பார்க்கின்றன. இதன்மூலமாக, எதிர்காலத்தில் இலங்கையில் மிகப்பெரும் நிறுவன‍ங்களாக உருவெடுக்கும் திட்டத்தை, அவை கொண்டுள்ளன.  

 இவற்றைத் தவிர்த்து, 14%மான வணிகங்கள், சொற்ப காலத்தில் தமது வணிகத்தைப் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதன் மூலமாக, பொதுமக்களிடமிருந்து மூலதனத்தைத் திரட்டி, தம்மைக் கூட்டிணைக்கப்பட்ட பொது நிறுவனமாக, விரிவுபடுத்த எண்ணியுள்ளன.   

இவற்றுக்கு மேலதிகமாக, 23%மான வணிக உரிமையாளர்கள், தமது வணிகத்தை வெற்றிகரமாகக் கொண்டு நடத்துவதன் மூலமாக, அவற்றுக்கான பெறுமதியை அதிகரித்து, இலங்கையில் தற்போதுள்ள பல்தேசிய, பெரிய நிறுவனங்களுக்குத் தமது வணிகத்தை விற்பனை செய்யும் நடவடிக்கையில் உள்ளன.   

இத்தகைய வணிகங்களுக்கு, மிகச் சிறந்த முன்னோடியாக, உதாரணமாக Anything.lk நிறுவனத்தைக் குறிப்பிடலாம். இந்த நிறுவனம், வெற்றிகரமான நிலையை அடைந்தபோது, dilaog நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்பட்டு, wow.lk எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.   

தொடக்கநிலை வணிகங்களின் வருமான மூலம்   

தொடக்கநிலை வணிகங்களின் நிதி மூலமானது, பல்வேறு வகைகளில் ஈட்டிக்கொள்ளப்பட்டதாக இருந்தாலும், வருமான மூலமானது, உள்நாட்டு, வெளிநாட்டு வருமானம் எனக் கண்டறியப்படும், இரண்டு வருமான மூலங்களைச் சார்ந்ததாகவே இருக்கின்றன.  

இலங்கையில் தொழிற்படும், தொடக்கநிலை வணிகங்களை பொறுத்தவரையில் 56%மான வணிகங்கள், 100%மான வருமானத்தை உள்நாட்டிலேயே பெற்றுக்கொள்கின்றன. 

அதுபோல, வெறும் 5% மான வணிகங்களே, 100% வெளிநாட்டு வருமானத்தில் இயங்கும் வணிகங்களாகச் செயற்படுகின்றன. பெரும்பாலான வருமானத்தை வெளிநாட்டு வருமானமாகக் கொண்டதாக 16% வணிகங்களும், பெரும்பாலான உள்நாட்டு வருமானத்தை கொண்டதான வணிகங்களாக 14% வணிகங்களும் செயற்படுகின்றன.   

தொடக்கநிலை வணிகங்களின் பல்வகைமை   

இலங்கையில் தொழிற்படும் தொடக்கநிலை வணிகங்களில் 92%மானவை, மேல் மாகாணத்தை மய்யமாகக் கொண்டே தொழிற்படுகின்றன. இதற்கு அடுத்து, ஆச்சரியமாக, கிழக்கு மாகாணத்தில் 2%மான வணிகங்களும், ஏனைய மாகாணங்களில் 1%மோ அல்லது அதற்குக் குறைவான சதவீதத்திலோ வணிகங்கள் செயற்பட்டுக் கொண்டுள்ளன. 

இதற்கு மிகப்பிரதான காரணம், தொடக்கநிலை வணிகங்களுக்கான போதிய உட்கட்டமைப்பு வசதிகளும் சந்தைவாய்ப்புகளும் மேல்மாகாணத்திலேயே அதிகமாக உள்ளமையாகும்.   

பெரும்பாலும் செயற்படுகின்ற துணிகர வணிக முயற்சிகளில், 54%மான வணிகங்கள், 2-5 தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் சிறு வணிகங்களாக உள்ளன. இதன் மூலமாக, இத்தகைய வணிகங்கள், தமது தொழிற்பாட்டு செலவீனங்களைக் குறைத்துக் கொள்ளுவதுடன், அதன் மூலமாகத் தமது இலாபத்தை உச்சப்படுத்தும் வகையில் செயற்படுகின்றன.   

குறைந்தது 20 தொழிலாளர்களைக் கொண்ட வணிகங்கள் 20%மாகவுள்ளதுடன், 20க்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட பெரும் வணிகங்கள், 16%மாக இருக்கின்றன. 

பெரும்பாலும், தொடக்கநிலை வணிகங்களாக உள்ளவை, ஆரம்ப காலத்தில் முதலீட்டுப் பிரச்சினை,  இலாப நோக்கு என்பவற்றைக் கருத்திற்கொண்டு, தமது வணிகச் செயற்பாடுகளை, மிகச் சிறிய அணியுடனே ஆரம்பித்து, நடத்திச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது.   

தொடக்கநிலை வணிகங்கள் முகம்கொடுக்கும் சவால்கள்   

இலங்கையில் ஆரம்பிக்கப்படும் தொடக்கநிலை வணிகங்கள், எதிர்கொள்ளாத சவால்களே இல்லையென்று சொல்லலாம். ஆனால், அவற்றை எதிர்கொண்டு, வெற்றி பெறுகின்றன வணிகங்களே, அனைவராலும் மிக முக்கியமானதாக உற்றுநோக்கப்படுகிறது.   

எனினும், பல்வேறு தடங்கல்கள் காரணமாக, வெற்றிபெற முடியாமல்ப் போகின்ற வணிகங்களின் நிலை, எதிர்கால வணிகங்களுக்கும் ஏற்படாத வண்ணம் முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ள, தொடக்கநிலை வணிகங்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளை, ஆராய வேண்டியது அவசியமாகிறது.   

இலங்கையில் தற்போது தொழிற்பாட்டு நிலையிலுள்ள, தொடக்கநிலை வணிகங்களின் பார்வையில், வணிகத்தைக் கொண்டு நடத்திச்செல்ல, மிகப்பெரும் தடையாக இருப்பது அரசாங்கத்தின் ஆதரவின்மை ஆகும். 

குறிப்பாக, 49% மான தொடக்கநிலை வணிக உரிமையாளர்கள், இதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.   

குறிப்பாக, அரசாங்கத்தின் ஆவணப்படுத்தல், செயற்பாட்டிலுள்ள தாமதம், அதிகரித்துச் செல்லும் வரிவிதிப்புகள், புதிய வணிகங்களுக்குச் சந்தையில் நிலைத்து நிற்பதற்கு வாய்ப்பளிக்காத வணிகக் கொள்கைகள், இதற்குக் காரணங்களாக அமைந்துள்ளன.   

இதற்கு அடுத்ததாக, வணிகத்துக்கான நிதியைத் திரட்டிக்கொள்ளுவதில் சவால்கள் உள்ளனவென 34%மான வணிக உரிமையாளர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். பெரும்பாலான வணிகங்கள் புதுமையாகவும் புதிதாகவும் உள்ள பட்சத்தில், அத்தகைய வணிகங்கள் சந்தையில் தங்களை நிரூபித்துக்கொள்ளாத நிலையில், முதலீட்டாளர்களிடமிருந்தும், வணிக வங்கிகளிடமிருந்தும் நிதியை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியாதநிலை காணப்படுகிறது. இதன் காரணமாகவும், வணிகத்தின் வெற்றிநிலை பல்வேறு சந்தர்ப்பங்களில் தடைப்படுகிறது.   

இவற்றுக்கு அடுத்ததாக, 25% மான வணிக உரிமையாளர்களின் கருத்தின்பிரகாரம், தொடக்கநிலை வணிகங்களை விரிவாக்கம் செய்வதில் காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகளிலான சிக்கல்களை மேற்கோள் காட்டுகிறார்கள். இதன் விளைவாகவே, பல்வேறு தொழில்நுட்ப தொடக்கநிலை வணிகங்கள், தங்களை விரிவுபடுத்திக்கொள்ள முடியாத சூழ்நிலை இலங்கையில் உள்ளது.   

இதற்கு அடுத்ததாக, 23%மானவர்கள் பொருத்தமான திறன்கொண்ட ஊழியப்படையைத் தெரிவு செய்வதில், சிக்கல்களை எதிர்கொள்வதையும் 21%மானவர்கள் பொருத்தமான, தரமான, சிக்கனமாக விலைப்பெறுமதி கொண்ட வேலைத்தளத்தைப் பெற்றுக்கொள்ளுவதில் சிக்கல்நிலையை எதிர்கொள்வதாகத் தெரிவித்து இருக்கிறார்கள்.   

குறிப்பாக, இலங்கையின் தொழிற்படையில் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களின் வெளியேறுகை அதிகமாக இருப்பது, திறன்கொண்ட ஊழியப்படையைப் பெற்றுக்கொள்ளுவதிலுள்ள சிக்கல்களுக்கு காரணமாக உள்ளது.   

அதுபோல, இலங்கையில் பெரும்பாலான தொடக்கநிலை வணிகங்கள், மேல்மாகாணத்தை அண்டியதாகவே உள்ளன. இங்கே அதிகரித்துச் செல்லும் வாடகையானது, புதிதாக ஆரம்பிக்கப்படும் சிறிய வணிகங்களுக்கு, மேலதிக செலவீனத்தை ஏற்படுத்துவதும் காரணமாக அமைந்துள்ளது.   

மேலும், சர்வதேச கொடுப்பனவுச் செயன்முறைகளை இலங்கைக்குள் கொண்டுவருகின்ற சிக்கல்தன்மை, தொடக்கநிலை வணிகங்களுக்கு பொருத்தமான வழிகாட்டிகளைாத் தேர்ந்தெடுப்பதிலுள்ள நடைமுறைச் சிக்கல், தொழில்நுட்ப, நிதியியல் ரீதியான சவால்கள் என்பனவும் குறிப்பிடப்படுகின்றது.   

இத்தகைய பிரச்சினைகள் ஒப்பீட்டளவில் மிகச்சிறிய பிரச்சினைகளாக இருந்தாலும், எதிர்காலத்தில் இவையும் தொடக்கநிலை வணிகங்களின் வளர்ச்சியில் தாக்கத்தை செலுத்துபவையாகவே இருக்கப்போகின்றன.  

 மேற்கூறிய சவால்களைச் சீர்படுத்தும்போதுதான், எதிர்காலத்தில் தொடக்கநிலை வணிகத்தைக் கொண்டு நடத்துவதற்கு ஏதுவான சூழ்நிலை சிறப்பாக அமையும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .