2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தனியார்துறை நிறுவனங்களின் மீட்சிக்கு அரசாங்கத்தின் கொள்கை ரீதியான உதவிகள் அவசியம்

ச. சந்திரசேகர்   / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் துறையில் பணப்பாய்ச்சல், முதலீட்டுத் தடைகள், வேலை இழப்புகள் போன்ற மூன்று விதமான தாக்கங்களை, கொவிட்-19 தொற்றுப் பரவல் ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை தொழில் வழங்குநர்கள் சம்மேளனம் (EFC) அறிவித்துள்ளது.  

ஏப்ரல் 15ஆம் திகதி முதல் மே 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், 100 நிறுவனங்களை (மொத்தமாக 125,000 ஊழியர்களைக் கொண்டவை) உள்வாங்கி, முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் போது, மேற்படி விடயங்கள் இனங்காணப்பட்டிருந்ததாக, இலங்கை தொழில் வழங்குநர்கள் சம்மேளனம் (EFC) அறிவித்துள்ளது.  

இந்தக் கருத்தாய்வில் உள்வாங்கப்பட்ட துறைகளில் விவசாயத்துறை, உற்பத்தி, நிர்மாணம், சேவைகள் போன்ற துறைகள் அடங்கியிருந்தன.  

உபதுறைகளான உற்பத்தி, மொத்த- சில்லறை வியாபாரம், விருந்தோம்பல்,  உணவுத்துறை, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், நிதி, காப்புறுதி போன்றனவும் உள்ளடங்கியிருந்தன.  

 இந்தக் கருத்தாய்வின் போது, சுமார் அரைப்பங்கான நிறுவனங்கள் பாரதுரமான நிதிப்பாய்ச்சல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருந்ததாகவும் 18 சதவீதமான நிறுவனங்கள் ஒரு மாத காலப்பகுதிக்கு மாத்திரம் போதுமான நிதி இருப்பைக் கொண்டிருந்ததாகவும் மேலும் 39 சதவீதமான நிறுவனங்கள் மூன்று மாத காலப்பகுதிக்குப் போதுமான நிதி இருப்பைக் கொண்டிருந்ததாகவும் கண்டறியப்பட்டிருந்தது. 

இந்த மூன்று மாத காலப்பகுதி என்பது, மார்ச் முதல் மே வரையான காலப்பகுதி என்பதை, இலங்கை தொழில் வழங்குநர்கள் சம்மேளனம் உறுதி செய்திருந்ததுடன், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 100 நிறுவனங்கள், தற்போது பாரிய பணப்பாய்ச்சல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளமை கண்டறியப்பட்டு உள்ளது.  

நாட்டில் கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மார்ச் மாதம் பிற்பகுதி முதல் மே மாதம் நடுப்பகுதி வரை நாடு முடக்கப்பட்டிருந்த நிலையில், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிறுவனங்களில் மூன்றல் ஒன்று, தமது செயற்பாடுகளை முற்றிலும் இடைநிறுத்தி இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தன. 

மேலும், ஏற்றுமதிச் செயற்பாடுகளில் ஈடுபடும் நிறுவனங்களும் பாரதுரமான சிக்கல்களை எதிர்நோக்கி இருந்ததுடன், உணவு, விவசாயத் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் அத்தியாவசிய சேவைகள் எனப் பட்டியலிடப்பட்டமை காரணமாக, ஓரளவு சிறப்பாக இயங்கியிருந்தன.   

 ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்களில் நான்கில் ஒன்று தமது ஊழியர்களைத் அவர்தம் வீடுகளிலிருந்து பணியாற்றுவதற்கு அனுமதித்திருந்தன. கண்டிப்பாக, களத்திலிருந்து பணியாற்ற வேண்டிய நிலையிலிருந்த ஊழியர்கள், தொழில்கள் பாதிப்பை எதிர்நோக்கி இருந்தன. 

உற்பத்தித்திறன் வருமானம், ஏற்றுமதி வருமானம், முதலீடுகள், தங்குமிடம், உணவுச் சேவைகள் போன்றவை அதிகளவு பாதிப்பை எதிர்நோக்கியிருந்தன. சிறியளவிலான நிறுவனங்கள் உற்பத்தி, வருமானம் இழப்பு போன்றவற்றை எதிர்நோக்கி இருந்தன.  

250க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள், தமது சகல வருமானங்களையும் இழந்திருந்ததாக இலங்கை தொழில் வழங்குநர்கள் சம்மேளனம் குறிப்பிட்டிருந்தது. ஏற்றுமதியில் கொவிட்-19 தாக்கத்தை இது உணர்த்தியிருந்தது. 

பாரியளவிலான நிறுவனங்கள், தமது மொத்த ஏற்றுமதி வருமானத்தில், 95சதவீதம் தங்கியிருக்கும் நிலையில், வியாபாரத்தைச் சீராகப் பேணுவது, பெரும் சிக்கலாக அமைந்திருந்தது. தொழில் நிலையில் தாக்கத்தை உணரக்கூடியதாக இருந்ததுடன், சகல துறைகளிலும் நிறைவேற்று அதிகாரம், நிறைவேற்று அதிகாரமற்ற நிலைகளில், எதிர்காலத்தில் தொழில் இழப்புகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம் எனவும் இலங்கை தொழில் வழங்குநர்கள் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.  

 நிதி, காப்புறுதித்துறையைச் சேர்ந்த நிறுவனங்களில் நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களின் பணி இழப்புகள், அதிகளவில் பதிவாகியிருந்தன. நிறைவேற்று அதிகாரிகளின் பணி இழப்பு, அதிகளவில் உற்பத்தித் துறையில் பதிவாகியிருந்தது.   

நாட்டில், கொவிட்-19 பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து ஏற்பட்ட முடக்க நிலையின் காரணமாகத் தமது அங்கத்துவ நிறுவனங்களில் ஏற்பட்ட இடர்நிலை, அதற்கு எவ்வாறு குறித்த நிறுவனங்கள் முகங்கொடுத்திருந்தன என்பது தொடர்பில் ஆராயும் வகையில், இந்தக் கருத்தாய்வு முன்னெடுக்கப்பட்டிருந்ததாக, இலங்கை தொழில் வழங்குநர்கள் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க வீரசிங்க தெரிவித்தார்.  

“மிக முக்கியமாக, இந்த இடர்களுக்கு முகங்கொடுத்துள்ள நிறுவனங்களுக்கு, அவசியமான உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்குக் கொள்கை வடிவமைப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டிய இடையீடுகள் தொடர்பில் அறிவிக்கும் வகையில் இந்த ஆய்வை, இலங்கை தொழில் வழங்குநர்கள் சம்மேளனம் முன்னெடுத்திருந்தது” என்றார். இந்த அறிக்கையைத் தயாரிப்பதில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுனில் சந்திரசிறி, கலாநிதி ரமணி குணதிலக ஆகியோர் பங்களிப்பு வழங்கியிருந்தனர்.  

இந்த ஆய்வுக்குப் பதிலளித்திருந்த சகல நிறுவனங்களும் தமது பணியாளர்களின் பாதுகாப்புத் தொடர்பில் அதிகளவு அக்கறை செலுத்தியிருந்தன. வீட்டிலிருந்து பணியாற்றுவது என்பது தொடர்பிலும் அதிகளவு கவனம் செலுத்தியிருந்தன. சேவைத் துறையைச் சேர்ந்த அலுவலக அடிப்படையிலான செயற்பாடுகளைக் கொண்டிருந்த நிறுவனங்கள், இது தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்தியிருந்தன.  

குறைந்த வருமானமீட்டும் பணியாளர்களுக்கு வருமான உதவிகளை வழங்குவது தொடர்பிலும் இந்நிறுவனங்கள் கவனம் செலுத்தியிருந்தன. அத்துடன், வீட்டிலிருந்து பணியாற்றுதல், டிஜிட்டல் மயமாக்கத்தை ஊக்குவித்தல் போன்றன, சிறியளவிலான நிறுவனங்கள் மத்தியில் அதிகளவு முக்கியத்துவம் பெற்றிருந்தன.   

பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு உதவிகளை வழங்குவது,  மீட்சிக்குப் பங்களிப்பு வழங்குவது தொடர்பில், அரசாங்கத்தால் பின்பற்றப்பட வேண்டிய கொள்கை வழிமுறைகள் தொடர்பிலும் இந்தக் கருத்தாய்வின் போது கவனம் செலுத்தப்பட்டிருந்தது. 

ஊழியர் சந்தை தொடர்பான கொள்கைகள், இதன் போது அதிகளவு முக்கியத்துவம் பெற்றிருந்தன. இது போன்ற தொற்றுப் பரவல் நிலைகளின் போது, இலங்கையில் எவ்வாறான ஊழியர் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது தொடர்பான சட்ட விதிமுறைகள், நாட்டின் சட்டங்களில் காணப்படவில்லை, இதனால், இதுபோன்றதொரு பாரதுரமான நெருக்கடி நிலைகளின் போது, எவ்வாறு நிறுவனங்களுக்குக் கருமமாற்ற வேண்டும் என்பது தொடர்பில், சட்ட ரீதியிலான தெளிவுபடுத்தல் இல்லை.  

இவ்வாறு அரசாங்கத்தால் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்களாக, வீட்டிலிருந்து பணியாற்றுதலை ஊக்குவித்தல், நெகிழ்ச்சித் தன்மையுடனான பணியாற்றும் நேரம், சம்பளம், இதர கொடுப்பனவுகள் (குறிப்பாக பெருந்தோட்டத்துறையில்) குறைந்தளவிலான அரசாங்கத்தின் தலையீடு, அரசாங்கத்தின் அனுசரணையில் அமைந்த கொடுப்பனவுத் திட்டங்களின் அறிமுகம், முடக்கநிலை காரணமாகப் பணியாற்றாத நாள்களை ஊழியர்களின் விடுமுறை தினங்களிலிருந்து அறவிடல், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றுக்குச் செலுத்தப்பட வேண்டிய பங்களிப்பைத் தாமதித்தல், ஏற்கெனவே காணப்படும் ஊழியர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளல் போன்றன குறிப்பிடப்பட்டிருந்தன.  

வியாபாரங்களை மீள ஆரம்பிப்பதற்கு அவசியமான பணப்பாய்ச்சலை உறுதி செய்வதில் அரசாங்கத்தின் தலையீடு காணப்பட வேண்டும் என நிறுவனங்கள் கருத்தளித்திருந்தன. குறிப்பாக, குறைந்த வட்டி வீதங்களில் கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், கடன் மீளச் செலுத்தல் சலுகைக் காலத்தை நீடித்தல், கடன் மற்றும் இதர நிதி உதவிகளைப் பெற்றுக் கொடுத்து, வியாபாரங்களை மீள ஆரம்பிக்க உதவுதல் போன்றன தொடர்பில் நிறுவனங்கள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தன.  

அத்துடன், வியாபாரச் செயற்பாடுகளில் கொள்கை இடையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருந்தது. அதாவது, ஏற்றுமதி, இறக்குமதி உற்பத்திப் பொருள்கள், மூலப்பொருள்கள் மீது அறவிடப்படும் வரிகளில் நிவாரணங்களை வழங்கல், CESS,  இதர வரிகளை நீக்கல் போன்றன தொடர்பான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.  

 சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் பங்காளர்களும் இந்த இடர்நிலையைப் பயன்படுத்தி, பரந்த பொருளாதாரக் கொள்கைகளையும் செயற்பாடுகளையும் மீளமைத்து, ஏற்றுமதிச் சந்தைகளுக்குப் பொருத்தமான பரந்தளவு உற்பத்திகளை மேற்கொள்ள ஊக்கமளிப்பதை உறுதி செய்ய வேண்டும். அதனூடாகச் சகல இலங்கையர்களுக்கும் சுபீட்சமானதும் நிலைபேறானதுமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியதாக இருக்கும் என, ஆய்வுகளிலிருந்து கண்டறிந்த விடயங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் இலங்கை தொழில் வழங்குநர்கள் சம்மேளனம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .