2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பிரித்தானியாவின் பிரச்சினையும் இலங்கையின் நிலையும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பொருளாதார ரீதியாகப் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், பிரித்தானியாவுக்கு இது, மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. ‘தவறி விழுந்தவனை, மாடேறி மிதித்தது’ என, ஊர்களில் சொல்வதுபோல, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகி, தங்களுடைய பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள நினைத்தவர்களை, கொரோனா வைரஸ் மிகப்பெரும் பிரச்சினையில் சிக்க வைத்திருக்கிறது. இது நேரடியாகவோ, மறைமுகமாகவோ நம் நாட்டுப் பொருளாதாரத்துக்கும், நம்மவர் வாழ்வாதாரத்துக்கும் கூடப் பிரச்சினையாக வருகின்ற வாய்ப்புகளைக் கொண்டிருப்பது இன்னும் அபாயமானது.  

2020ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல், கொரோனா வைரஸ் தொற்றானது, மனித உயிர்களுக்கு மட்டுமல்ல, உலகப் பொருளாதாரத்துக்கே அச்சுறுத்தலான ஒன்றாக இருந்துவருகிறது. இந்தக் கொரோனா வைரஸுக்குத் தற்போது, ரஷ்யாவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உயிர்களுக்கான பாதுகாப்பை இன்னும் சில மாதங்களில், ஒரு வருடத்திலாவது உறுதி செய்துகொள்ள முடியும். 

ஆனால், இந்தக் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் பொருளாதாரப் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்குக் குறைந்தது 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரை, காத்திருக்க வேண்டுமென உலக பொருளியல் நிபுணர்கள் அறிவித்து இருக்கிறார்கள். இந்த அறிவிப்பு, உலகநாடுகளுக்கு மிக மோசமான செய்தியாக இருந்தாலும், எல்லோரையும்விடப் பிரித்தானியாவுக்கு இன்னும் அதிகமான சோக செய்தியாக மாறியிருக்கிறது.  

 கடந்த 11 வருடங்களில் இல்லாத மிகப்பெரும் பொருளியல் பின்னடைவை, பிரித்தானியா தற்போது சந்தித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல், உலகம் முழுவதையும் ஒரு நிதியியல் நெருக்கடி ஆட்கொண்டு இருந்ததை நாம் அறிந்திருப்போம். (இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவந்த நாடுகளை, அந்த உலக பொருளாதார நெருக்கடி மிகப்பெரும் அளவில் பாதித்திருக்கவில்லை) அதன்போது கூட, பிரித்தானிய பொருளாதாரம்,  இந்த வீழ்ச்சியை அடைந்திருக்கவில்லை.   

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதத்தில் மாத்திரம், பிரித்தானிய பொருளாதாரம் சுமார் 20.4% மாகக் குறைவடைந்து இருக்கிறது. கொரோனா வைரஸின் பாதிப்பு, இந்தக் காலப்பகுதியில் அங்கு தீவிரமாக இருந்ததாலும், உயிரிழப்புகள் மிக அதிகமாக இருந்ததன் காரணமாகவும் இந்தநிலை ஏற்பட்டிருந்தது. மக்களின் நிலையைக் கவனத்தில் கொண்டு, சுமார் 260 மில்லியன் பவுண்ட்ஸுக்கும் மேலதிகமான நிவாரணப் பொதியை அரசாங்கம் அறிவித்திருந்தாலும், இந்தப் பொருளாதாரச் சரிவிலிருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்ற முடியாதநிலையை, பிரித்தானியா எதிர்நோக்கி இருக்கிறது.  

இதுவரை, பிரித்தானிய அரசாங்கம் அறிவித்திருக்கும் நிவாரணப் பொதியின் அனுகூலத்தை 2.7 மில்லியன் பேர் பெற்று இருக்கிறார்கள். இதன் அர்த்தம், அந்த நாட்டில் பெரும்பாலானோர் கொரோனா வைரஸின் பரவுகை காரணமாகத்  தங்களுடைய தொழில்வாய்ப்பை இழந்துள்ளார்கள். இவர்களின் எதிர்கால வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.   

பிரித்தானிய அரசாங்கம், தன்னுடைய தொழில் நிறுவனங்களுக்கு, தொழிலார்களை வேலை நீக்கம் செய்வதை பார்க்கிலும், அவர்களை வேலையில் வைத்திருப்பதற்கு அதிகளவிலான நிவாரணப் பொதிகளை வழங்குகின்றபோதும் இந்த நிலையில் மாற்றம் பெரிதாக இல்லாமை பிரச்சினையாக மாறியிருக்கிறது. உதாரணமாக, கொரோனா வைரஸ் காரணமாக, தொழிற்றுறைக்கு 100% பங்களிப்பை வழங்க முடியாத தொழிலாளர்களுக்கு, 60% - 80% ஊதியம் வழங்க அரசாங்கம் நிவாரணம் வழங்குகின்றது; வரி ரீதியான சலுகை வழங்குகிறது. தொழிலைக் கொண்டு நடத்த, வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. இத்தனை இருந்தும், பொருளாதாரச் சரிவை ஈடுசெய்வதில் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.  

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதன் காரணமாக, பிரித்தானியாவும் அதன் பிரஜைகளும் பாரிய வரப்பிரசாதங்களை இழந்து இருக்கிறார்கள். இதனால், பிரித்தானிய அரசாங்கம் அறிவித்து வருகின்ற நிவாரணப் பொதிகளை, அதனுடைய நிதியிலிருந்து வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறதே தவிர, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வழமையாகக் கிடைக்கும் நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுவும் பொருளாதாரச் சரிவுக்குக் காரணமாகச் சொல்லுகிறார்கள். பிரித்தானிய பொருளாதார வல்லுநர்களின் எதிர்ப்பார்க்கையின் பிரகாரம் வேலையின்மையின் சதவீதமானது எதிர்வரும் 2021ஆம் ஆண்டில் 3% த்திலிருந்து 7%மாக மாற்றமடைய வாய்ப்பிருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். 

உலக பொருளாதாரத்தில் 2019ஆம் ஆண்டு, இறுதிக் காலாண்டிலிருந்து 2020ஆம் ஆண்டின் முதலிரண்டு காலாண்டுகளையும் இணைத்து ஒப்பீடுகளை மேற்கொள்ளுகின்றபோது, பிரித்தானியப் பொருளாதாரம் உலகின் இரண்டாவது மோசமான பொருளாதாரமாக அறியப்பட்டிருக்கிறது. சுமார் 22.1% பொருளாதாரச் சரிவை, ஆறு மாதங்களில் எதிர்கொண்டு இருக்கிறார்கள்.    

இந்தநிலை, இலங்கை பொருளாதாரத்தையும் நம்மவர்களையும் எப்படிப் பாதிக்கும்?   
இலங்கையைப் பொறுத்தவரையில், வெளிநாட்டு நேரடி முதலீடு என்பது, பொருளாதாரத்தில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதற்கடுத்து, வெளிநாடுகளில் தொழில் செய்யும் இலங்கையர்கள் அனுப்புகின்ற வெளிநாட்டு வருமானம், பணம் ஆகும். இதற்கு அடுத்து, மூன்றாம் இடத்திலிருப்பது சுற்றுலாத்துறை மூலமாக  வருகின்ற வருமானம் ஆகும். இந்த மூன்று வழி வருமானமும் 2020இல் இலங்கைக்கு இல்லாமல் போகின்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இது, இலங்கைப் பொருளாதாரத்தை மட்டுமல்ல, இலங்கை வாழ் தமிழர்களின் பொருளாதாரத்திலும் பாதிப்பைச் செலுத்துவதாக அமையும்.  

உதாரணத்துக்கு, தற்போது நல்லூர் கந்தனின் உற்சவம் யாழில் ஆரம்பித்திருக்கிறது. இதுவே, சாதாரண பருவகாலமாக இருப்பின், வெள்ளவத்தை வீதியோரங்கள் தொடக்கம், யாழ். நல்லூர் கோவிலின் வளாகம் வரை, வெளிநாட்டுத் தமிழர்களால் நிறைந்திருக்கும். அதில், பெரும்பான்மையானவர்கள் பிரித்தானியா வாழ் தமிழர்களாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். இவர்கள் நாட்டுக்குள் கொண்டுவருகின்ற வெளிநாட்டு நாணயத்தின் புழக்கமும் மிக அதிகம். இவர்களை நம்பி, வாகனம் ஓட்டுபவர்கள், விடுதிகளை நடத்துபவர்கள், உணவகங்கள் நடத்துபவர்கள் எனப் பலரும் பெற்றுக்கொள்ளுகின்ற வருமானம் அதிகம். ஆனால், இந்த ஆண்டு இந்த நிலையில் மிகப்பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது.  

இந்தப் பருவகாலத்தில், வெளிநாட்டிலிருந்து வருகின்ற வெளிநாட்டவர்களை இலக்காகக் கொண்டு, 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் புதிய வாகனங்களை வாங்கியவர்கள் நிலையை யோசித்துப் பாருங்கள். வருமானம் இல்லாமல் மாதாந்த லீசிங் பணத்தை எவ்வாறு கட்ட முடியும்? ஓகஸ்ட் மாதத்துக்காக 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மிகப்பெரும் செலவில் மீளத்தயாரான விடுதிகளின் நிலை? அவர்கள் எப்படி மாதாந்தக் கடனைக் கட்ட முடியும்? இப்படித் தொடர் நிகழ்வாக, ஒட்டுமொத்த இலங்கைப் பொருளாதாரத்தையும் குறிப்பாக, நம்மவர் பொருளாதாரத்தையும் பாதிக்கும்.  

உலகமயமாக்கலின் மிக முக்கியமான தீமையாக, இதைப் பார்க்க முடியும். திறந்த பொருளாதாரக் கொள்கையின் விளைவாக, உலகின் ஒவ்வொரு நாடும், மக்களும் தெரிந்தோ தெரியாமலோ ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப்பிணைந்து இருக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால்தான், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் செய்தி வருகின்றபோது, இலங்கையின் பொருளாதாரத்துக்கு என்ன நன்மை இருக்கிறது, என்ன தீமை இருக்கிறது எனக் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. 

அமெரிக்காவில் ஏதேனும் தீவிரவாத சம்பவம் நடந்தால், இலங்கையின் பங்குசந்தையில் அதன் தாக்கம் இருக்குமா, இல்லையா எனக் கவலைகொள்ள வேண்டியதாக இருக்கிறது.  

அதேபோலத்தான், இலங்கையுடன் மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கும் பிரித்தானிய பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற சரிவானது, இலங்கையில் வாழும் தமிழர்கள், ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பிலும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .