2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வருமானத்துக்கு மீறிய செலவீனங்கள்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 ஜூலை 15 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்னதான், செலவுகளை மீதம் பிடித்தாலும், வரவுகளை சேமித்தாலும் போதாமலேயே இருக்கிறதென, யாரோ சொல்கின்ற குரலைத்தான் ஒவ்வொரு நாளும் கடந்துகொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு நாளுமே, ஏதொவொருவகையில் செலவீனப் பக்கங்கள் மட்டுமே நிரம்பிக்கொண்டுயிருக்க, வரவுகளை எதிர்பார்த்து விழிபிதுங்கி நிற்கும் சாமானியக் குடும்பச் சூழலைத்தான் பெரும்பாலானவர்கள் சந்தித்துக்கொண்டு இருக்கிறோம்.

அப்படியாயின், நாம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமலேயே கடந்துபோய் கொண்டு இருக்கிறோமா அல்லது இவற்றை எல்லாம் நிவர்த்திக்க எந்த வழியுமில்லை எனக் கடந்து போகின்றோமா?

உண்மையில், நாம் அன்றாடம் நமது செலவுகள் கைமீறி போகாதவண்ணம்,  நம் சேமிப்புக்களையும் வரவுகளையும் ஒருங்கிணைத்துச் செல்லவே முயன்று செய்துகொண்டிருக்கிறோம். ஆனால், அைத இன்னும் சற்றே வினைத்திறனாகத் திட்டமிட்டுச் செய்வதில்தான், கோட்டை விட்டுவிடுகின்றோம்.

உண்மையான நிதியியல் வெற்றி​யென்பது, எளிமையான ஒன்றாகும். அது, உழைப்பதைவிட குறைவாகச் செலவு செய்துகொண்டு, எதிர்காலத்தைத் கருத்தில்கொண்டு சேமிப்பதாகும். இதன்போது செய்கின்ற ஒவ்வொரு செலவுக்குமே கண்காணிக்கக் கூடியவகையில் ஒரு முறைமையைப் பயன்படுத்தினாலேயே இந்த நிதி வெற்றியை அடைவது எளிதாக்கிவிடுகிறது.

இதற்கு இலகுவாகக் கையாளக்கூடிய முறைமைகளிலொன்றுதான் பாதீடு ஆகும். அதாவது, ஒவ்வொரு வரவையும் செலவையும் முறையாகக் கண்காணிக்கும் வரவு-செலவுப் பட்டியலை மாதம்தோறும் தயார்செய்து அதன் பிரகாரம், நமது செலவீனங்களை கண்காணிப்பதே ஆகும்.

மீண்டும் முதலிலிருந்து தொடங்குதல்

உண்மையில் வரவு-செலவு பற்றி கணக்கு வைத்தும் அ​ைத சரியாகப் பராமரிக்க முடியாமல் உள்ளதா? அனைத்தையும் கண்காணிக்கின்றபோதிலும் செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளதா?

எல்லாவற்றுக்கு, ஒரே தீர்வுதான் இருக்கிறது. அது, எல்லாவற்றையும் மீண்டும் புதிதாக முதலிலிருந்து தொடங்குதல் ஆகும். அதற்காக, எதையும் பெரிதாகத் திட்டமிட்டுக் கொண்டு, ஆரம்பத்திலிருந்து செயற்படுத்த வேண்டிய அவசியமில்லை. மாறாக, எல்லாவற்றையும் எளிமைப்படுத்தினால் போதுமாகும்.

உதாரணத்துக்கு, செலவு என்றவகையில் உங்கள் கையினால் செலவு செய்கின்ற எல்லா பணத்தையும் ஒருசேர கணக்கு வைத்துகொள்வதை விட, ஒவ்வொன்றையும் சிறிது சிறிதாகப் பிரித்துகொண்டு, மின்சாரச் செலவு, நீர் கட்டணம், பொழுதுபோக்குச் செலவென கணக்கு வைத்துகொள்ளும்போது, எந்தச் செலவு அதிகமாக உள்ளதென அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.

ஒவ்வொரு ரூபாயும் பெறுமதியானது

நீங்கள் உழைக்கும் ஒவ்வொரு ரூபாயும், உங்கள் உழைப்பால் உருவானது என்ப​ைத மனதில் வைத்துகொள்ளுங்கள். காரணம், சில ரூபாய்களை செலவு செய்யும்போது, இது சிறுதொகைதானே எனும் போக்கில் செலவையும் செய்துவிட்டு, அ​தை  கணக்குக்குள் உள்வாங்காமல் போனால், பிற்காலத்தில் அப்படியான செலவுகள் சிறுகச் சிறுக அதிகரித்து, உங்களை நெருக்கடிக்குள் தள்ளிவிடும் என்பதில் ஜயமில்லை. 

எனவே, வருமானத்தில் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் எவ்வாறு செலவாகிறது என்ப​தை அறிந்துகொள்ள, அ​தைக்  கணக்கு வைத்துகொள்ளப் பழகுங்கள். பின்பு. ஒரு நேரத்தில் வருமானத்​தை  எப்படி எல்லாம் செலவு செய்யக்கூடாது என்பதனை நீங்களே தானாகவே உணர்ந்து கொள்ளுவீர்கள்.
எதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்?

வருமானம் கைக்கு வந்ததுமே, அ​தை எப்படி செலவு செய்யலாமெனத் திட்டமிடுபவர்கள் சிலர் என்றால், எப்படி செலவு செய்யாமல் சேமிக்கலாமென யோசிப்பவர்கள் பலர்.

உண்மையில், எதற்கு எவ்வாறு / ஏன் ? செலவு செய்ய வேண்டுமென தெரிந்திருக்க வேண்டும். இல்லையேல், செலவுகள் கைமீறிப் போவதுடன், தேவையான செலவுகளைச் செய்யக்கூட, கையில் பணமில்லாத நிலையே ஏற்படும். எனவே, எந்தவகை செலவுகளை உடனடியாகச் செய்ய வேண்டுமென்ப​தை அறிந்து வைத்திருத்தல் அல்லது அதற்கு முன்னுரிமை கொடுத்தல் அவசியமாகிறது. 

ஆடம்பர செலவுகளா, அத்தியாவசிய செலவுகளா, முக்கியமானதென்பது மூலம் எதிர்காலம் நோக்கி திட்டமிட முடியுமா, இல்லையா என்பதனை அறிந்துகொள்ள முடியும்.

கடனில்லா வாழ்க்கைக்கு முன்னுரிமை அளித்தல்

ஆடம்பர வாழ்க்கையை விட, கடனில்லாத வாழ்க்கையே நிம்மதியானதென பெரியோர்கள் சொல்லக்கேட்டு இருப்போம். அதுவே, உண்மையும் கூட. எத்தனைதான் ஆடம்பரமாக வாழ்ந்தாலும் கடன்காரன் எனும் பழிச்சொல் ஒருவரை தூற்றுதலுக்கு உள்ளாக்கிவிடும். எனவே, முடிந்தவரை கடனை தவிர்ப்பது அவசியமாகிறது.

வருமானத்தை மீறி செலவுகள் செல்லும்போது, கடன் வாங்குவதென்பது தவிர்க்க முடியாத விடயமாகும். ஆனாலும், அப்படியான கடன்களை முதலில் செலுத்தி முடிப்பதற்கு முயற்சிப்பதே எதிர்காலத்தில் கடனின் அளவு குறைவடைவதையும், சேமிப்புக்கு வழி ஏற்படுவதையும் உறுதிச்செய்வதாக அமையுமென்பதில் ஜயமில்லை. இல்லையேல், கடன் மாதம்தோறும் வருமானத்தின் மிகப்பெரிய பகுதியை முழுங்கிக்கொண்டு விடும். இது, நாளாந்த செலவுகளை செய்வதில்கூட சிக்கல்களை ஏற்படுத்தி விடக்கூடும்.

எனவே, சிறந்த வரவு-செலவு திட்டம் உள்ளபோது, எவ்வாறு உள்ள கடனை அடைத்துக்கொள்ள முடியுமென அறிந்துகொள்ள முடியுமோ, அதுபோல எதிர்காலத்தில் கடனை வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுமா இல்லையா  என்பதனையறிந்தும் செயல்பட முடியும்.

பாதீட்டை தொடருதல் அவசியம்

ஒவ்வொரு புத்தாண்டு உறுதியாக இம்முறை வரவையும் செலவையும் ஒழுங்குபடுத்தி கொள்ளுவேன் எனச்சொல்லிக்கொண்டு உறுதி பூண்டுவிட்டு பின்னர் அ​தை காற்றில் பறக்கவிடும் நிலைமையே அதிகம் பேரில் காணப்படுகிறது. 

குறிப்பாக, பலருக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு சில நிமிடங்களை செலவுசெய்து, வரவு-செலவை ஒழுங்குபடுத்திக் கொள்ளுவதில் ஒருவித தேக்கநிலையே காணப்படுகிறது. இதனாலேயே, பாதீட்டு ஒழுங்குகள் பாதிவழியிலேயே நின்றுபோய் விடுகின்றன.

எனவே, வரவு-செலவு கணக்குகளை ஒழுங்குபடுத்தும்போது, அதற்கு பொறுமையும் அவசியமாகிறது. எப்படி நிறைக் குறைப்பானது நீண்டகால பயிற்சியில் சாத்தியமாகிறதோ அதுபோல, செலவீனங்களை கட்டுபடுத்துவதேன்பதும் நீண்டகால முயற்சியில் மாத்திரமே சாத்தியப்படும். அதுவரை, பொறுமை அவசியமாகிறது.

தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதில் தவறில்லை

இன்று கைக்குள் அடங்கும் உலகமாக எல்லோரிடத்திலும் அலைபேசிகள் உள்ளன. அதில், மிக இலகுவாக வரவு-செலவுகளை கண்காணித்துக் கொள்ளவென பலவிதமான மென்பொருட்கள் உள்ளன. எனவே, அவற்றில் உகந்தவொன்றை பயன்படுத்தி கொள்ளுவதில் தவறில்லை. இன்னமும் எத்தனை காலம்தான், அப்பியாச கொப்பியில் கணக்கு வழக்கைக்  குறித்துக்கொண்டிருப்பதென நினைப்பவர்களுக்கு இந்த மென்பொருட்கள் வழியிலும் உங்கள் கணக்குகளை பராமரிக்க முடியுமென்பது ஒருவகை கால்கட்டே! 

மேலதிகமாக, வெவ்வேறு மூலங்களிலிருந்து பணம் வருவதையும், அவை செலவாகும் விதத்தினையும் அப்பியாசக் கொப்பியின் ஒவ்வொரு பக்கத்தில் குறித்துக்கொண்டிருப்பதை விட, மென்பொருட்களை பயன்படுத்தி இலகுவாக வேறுபடுத்திக்கொள்ள முடியும். இதுவும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் முன்னேறிச்செல்ல ஏதுவான காரணியாக இருக்கிறது. 

பலவீனங்களை அறிந்து கொள்ளுங்கள்

வரவு-செலவுகளை பராமரிக்கத் தொடங்கியதுமே, நீங்கள் உங்கள் செலவு தொடர்பிலான பலவீனங்களை அறிந்துகொள்ள முடியும். உதாரணமாக, உணவுக்கோ அல்லது ஆடம்பர பொருட்களுக்கோ தேவைக்கு அதிகமாக நீங்கள் செலவு செய்வதனை அறிந்தால், அதனை எப்படி குறைத்துக்கொள்ள முடியும் என்கிற வழியை அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இது பல சமயங்களில் உங்கள் நடத்தை கோலத்திலும் நன்மைகளை கொண்டுவருவதாக அமையும்.

ஒவ்வொருவருக்குமே நிச்சயமாக செலவீனங்கள் தொடர்பில் மேற்கூறியதுபோல பலவீனங்கள் இருக்கவே செய்யும். எனவே, அதுதொடர்பில் ஆரம்பத்திலேயே அக்கறை எடுத்துகொள்ளுவது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிதிப்பிரச்சனைகளுக்கு ஏதுவாக அமையும்.

தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள பழகுதல்

ஒவ்வொரு மாதமும் நமது வருமானம் பெரும்பான்மையாக மாற்றமடைவதில்லை என்கிற போதிலும், வெவ்வேறு காலங்களில் நமது செலவுகள் வெவ்வேறு விதமாக மாற்றமடையக் கூடியதாகவிருக்கும். உதாரணத்துக்கு, ஆடி மாதத்தில் தமிழர்கள் மத்தியில் சுபகாரியங்கள் இடம்பெறாமை காரணமாக, அது தொடர்பிலான செலவீனங்கள் குறைவாக இருக்ககூடும். ஆனால், அடுத்துவரும் மாதத்திலேயே சுபகாரியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து செலவுகள் அதிகரிக்கும் நிலை காணப்படும். இதற்காக, பாதீட்டை கடுமையாகக் கடைப்பிடிப்பதாக கருதி, குறித்த சுபகாரியங்களை தவறவிடுவதென்பது முட்டாள்தனமான செயல்பாடாகும்.

முறைமையை ஏற்படுத்தி கொள்ளுதல்

பாதீட்டை தொடர்ச்சியாக பேணுவதும், அதனை பராமரிப்பதும் கூட எளிமையான விடயமல்ல. அவற்றை கூட கடந்துவிட்டாலும், வரவு-செலவு கணக்கு ஏற்றவகையில், உங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ளுவதென்பது எல்லாவற்றையும் விட கடினமான செயலாகும். ஆரம்பத்தில், உங்களுக்கு பிடித்த பல விடயங்களை கட்டுபடுத்த வேண்டிய தேவையிருக்கும். அவற்றை, கடுமையாக அவசியம் கடைபிடியுங்கள், சில காலத்தில் அதற்கு நீங்களே பழகிக்கொள்ளுவீர்கள். காரணம், அது ஒரு முறைமை போல உங்களுடனேயே ஒட்டிக்கொள்ளும். பின்பு, அதனை மேம்படுத்துவதும், புதிய முறைகளை கையாள்வதும் உங்களுக்கே இலகுவாக இருக்கும். இதற்க்கு மேலாக, நீங்களே மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்ககூடிய அளவுக்கு திறன் கொண்டவர்களாக மாறிப் போனாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .