2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

Formula Student 2018 பந்தயக் கார் அறிமுகம்

Editorial   / 2018 ஜூலை 01 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

Diesel & Motor Engineering PLC (DIMO), மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் எந்திரவியல் பொறியியல் பீடத்தின் மாணவர்களுடன் இணைந்து, உலகில் இடம்பெறுகின்ற மாணவர்களுக்கான மிகப் பாரிய மோட்டார் வாகன விளையாட்டுப் போட்டியான Formula Student 2018 இல் பங்குபற்றுவதற்காக பல்கலைக்கழக மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட DI-MORA P2 என்ற பந்தய மோட்டார் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.  

 ஐக்கிய இராச்சியத்தில் 2018 ஜூலை 11 முதல் 15 ஆம் திகதி வரை Formula Student 2018 போட்டி இடம்பெறவுள்ளதுடன், 26 நாடுகளிலுள்ள 90 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களிலிருந்து 3,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள், 5,000 வரையான பங்குபற்றுநர்கள், 250 தொழிற்துறை சார்ந்தவர்கள் இதில் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.   

எந்திரவியல் பொறியியலாளர்கள் சங்கத்தால் (Institution of Mechanical Engineers) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டியானது, ஐரோப்பாவிலேயே மிகவும் உச்சமான கல்வியல் சார்ந்த மோட்டார் விளையாட்டுப் போட்டியாக விளங்குவதுடன், தொழிற்துறை மற்றும் பிரபல பொறியியலாளர்களின் பக்கபலமும் இதற்கு உண்டு.   

பந்தயக் கார் தொடர்பான தமது புரிந்துணர்வை வெளிப்படுத்தி, அதன் செயற்திறனை பரீட்சார்த்தம் செய்யும் வகையில் நிலையான மற்றும் வலுவான போட்டிகளில் கலந்துகொண்டு போட்டியிடுவதற்காக ஒரு வருட காலத்தில் ஒற்றை ஆசனத்தைக் கொண்ட பந்தயக் காரொன்றை வடிவமைத்து, கட்டமைப்புச் செய்யுமாறு உலகெங்கிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் பொறியியல் மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் இப்போட்டி அமைந்துள்ளது.  

 Formula Student போட்டிகளில் பங்குபற்றியுள்ள டசின் கணக்கான போட்டியாளர்கள் Formula 1 போட்டியில் கலந்துகொள்ளும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளதுடன், மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் எதிர்கால கார்களை பொறியமைத்து, வடிவமைப்புச் செய்யும் பொறியியலாளர்களாக உலகிலுள்ள மாபெரும் மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களில் தற்போது பணியாற்றி வருகின்றனர்.   

உலகெங்கிலுமுள்ள பல்கலைக்கழகங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களிலிருந்து பிரித்தானிய மோட்டார் விளையாட்டின் தாயகமான, புகழ்பூத்த Silverstone Circuit பந்தயத் திடலில் போட்டியிடுவதற்காக 92 அணிகள் தமது ஸ்தானத்தை வெற்றிகரமாக உறுதிப்படுத்தியுள்ளன. மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் TeamSHARK அணியும் அந்த 92 அணிகளுள் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.  

 TeamSHARK அணிக்கான முழுமையான அனுசரணையை DIMO நிறுவனம் வழங்குவதுடன், காரை வடிவமைத்து, பரீட்சார்த்தம் செய்தல், அணி ஐக்கிய இராச்சியத்துக்குப் பயணிக்கும் செலவுகள் மற்றும் போட்டிக்காக பந்தயக் காரை விமானம் மூலமாக ஐக்கிய இராச்சியத்துக்குக் கொண்டு செல்வது உட்பட ஒட்டுமொத்த இடப்பெயர்வு செலவுகளையும் உள்ளடக்கும் வகையில் அதன் அனுசரணை அமைந்துள்ளது.   
TeamSHARK அணி பந்தயக் காரை வடிவமைத்து தயாரிக்கும் ஒவ்வொரு படிமுறையிலும் DIMO நிறுவனம் தனது நிபுணத்துவ ஆலோசனை மற்றும் வழிகாட்டலை வழங்கியுள்ளதுடன், காரை வடிவமைப்பதற்காக DIMO நிறுவனத்தின் தொழிற்சாலையை முழுமையாக உபயோகிப்பதற்கும் இடமளித்திருந்தது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .