2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

அடுத்த ஆறு மாதங்களில் 459,000 சிறுவர், தாய்மார் பின்விளைவை எதிர்கொள்வர்

ச. சந்திரசேகர்   / 2020 ஜூன் 28 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியா அடங்கலாக, பாரிய நாடுகளில் கொவிட்-19 தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், தெற்காசியாவில் சுமார் 600 மில்லியன் சிறுவர்களின் ஆற்றலை இந்நோய் மட்டுப்படுத்தி, அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கச் செய்யும் எனக் கணிப்பிடப்பட்டு உள்ளது. 

நாட்டினுள் தொற்றுப் பரவலை இலங்கை அரசாங்கம் வினைத்திறன் வாய்ந்த வகையில் கட்டுப்படுத்தியுள்ள போதிலும், இந்தத் தொற்றுப் பரவல் காரணமாக எழுந்துள்ள சிக்கல் நிலைகளுக்குத் தீர்வுகளை வழங்க வேண்டிய அரசாங்கத்தின் பொறுப்புகள், நாளாந்தம் அதிகரித்த வண்ணமுள்ளன.

யுனிசெப் அமைப்பினால், இந்த வாரத்தின் முற்பகுதியில் வெளியிடப்பட்டிருந்த பிராந்திய அறிக்கையில், நோய்த்தடுப்பு, போஷாக்கு மற்றும் இதர முக்கியத்துவம் வாய்ந்த சுகாதாரச் சேவைகள் போன்றன, இந்த வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாகத் தடைபட்டுள்ளதாகவும் இதனால், அடுத்த ஆறு மாதங்களில், இலங்கையில் சுமார் 459,000 சிறுவர்களும் தாய்மார்களும், பாரிய பின்விளைவுகளை எதிர்நோக்க​ நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதில் முக்கிய விடயமாக, உணவுப் பாதுகாப்பு நலிவடைவது குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மே மாதத்தில் இலங்கையில் யுனிசெப் அமைப்பு முன்னெடுத்திருந்த ஆய்வின் போது, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்த சுமார் 30 சதவீதமான குடும்பங்கள், தமது உணவு உள்ளெடுப்பைக் குறைத்துள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. இதில், சுமார் 80 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள், இறைச்சி, மீன், முட்டை மற்றும் பாலுணவுகளை உண்பதைக் குறைத்துள்ளனர் என்றும் கண்டறியப்பட்டிருந்தது. 

பழங்கள் மற்றும் மரக்கறிகளை உண்பதைக் குறைத்துக் கொண்டவர்கள், சுமார் 54 சதவீதமாகக் காணப்பட்டனர். கொவிட்-19 தொற்றுப் பரவ ஆரம்பிக்கும் முன்னர், இரும்புச் சத்து அடங்கிய உணவுகளை, சுமார் 39 சதவீதமான சிறுவர்கள் உட்கொள்ளவில்லை எனக் கண்டறியப்பட்டிருந்தது. 

கொவிட்-19 தொற்றுப் பரவலுடன், இந்த நிலை மேலும் மோசமடைந்து, சிறுவர்கள் மத்தியில் மந்தபோஷாக்கு நிலை ஏற்பட்டு, வாழ்நாள் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துவிடக்கூடும். பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையால், உலகளாவிய ரீதியில் 430 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள், தமது வசிப்பிடங்களிலிருந்து இணையவழியில் பயிலும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையில், பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த பல வீடுகளில், மின்சார வசதி, இணைய வசதி போன்றன காணப்படாமை, அவர்களின் நிலையை மேலும் மோசமடையச் செய்துள்ளது. 

இவ்வாறு வசதி வாய்ப்பின்றிய நிலையில் காணப்படும் சிறார்கள் பலர், பாடசாலைக் கல்வியிலிருந்து இடைவிலகக்கூடிய ஓர் அபாய நிலையும் தோன்றியுள்ளது. கொவிட்-19 தொற்றுப் பரவ ஆரம்பிக்கும் முன்னர், சுமார் 32 மில்லியன் சிறுவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தமது வீடுகளில் முடக்கப்பட்டிருக்கும் காலப்பகுதியில், சிறுவர் துன்புறுத்தல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகின்றமை தொடர்பான தொலைபேசி உதவிச் சேவைக்குக் கிடைக்கும் அழைப்புகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சின்னமுத்து, போலியோ போன்ற நோய்களுக்கு எதிரான உயிர் காக்கும் தடுப்பூசிகள் வழங்கும் செயற்பாடுகள், கண்டிப்பாக மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், தெற்காசிய பிராந்தியத்தைச் சேர்ந்த சுமார் 7.7 மில்லியன் சிறுவர்களுக்கு உதவுவதற்கு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

போதியளவு கை கழுவும் வசதிகள் மற்றும் இதர சமூக தூரப்படுத்தல் முற்காப்புச் செயற்பாடுகளுடன், பாடசாலைகள் இயலுமானவரை துரிதமாக மீளத்திறக்கப்பட வேண்டும். தெற்காசியப் பிராந்தியத்தைச் சேர்ந்த சிறுவர்கள், அண்மைக் காலங்களில் நிலவிய சுபீட்சமான சூழல் காரணமாக, சுகாதாரம், கல்வி மற்றும் இதர வசதிகளை அனுபவிக்கக் கூடியதாக இருந்தது. பாடசாலையை விட்டு இடைவிலகிய சிறுவர்கள் மற்றும் சிறுவர் திருமணங்கள் போன்றவற்றில் வீழ்ச்சி ஏற்பட்டமை காரணமாக, சிசு மரணம் மற்றும் கர்ப்பகால சிசு மரண வீதங்களில் வீழ்ச்சி பதிவாகியிருந்தது.

ஆனாலும், கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியான சூழல், தெற்காசிய பிராந்தியத்தைச் சேர்ந்த நாடுகளில் வசிக்கும் குடும்பங்களை ப்பெருமளவு பாதித்துள்ளது. தொழில் இழப்புகள் மற்றும் சம்பளக் குறைப்புகள் போன்றவற்றுடன், வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்தின் வீழ்ச்சியுடன், சுற்றுலாத்துறை மூலமான வருமானமும் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், இதன் தாக்கம் உயர்வாகக் காணப்படும். 

அடுத்த ஆறு மாதக் காலப்பகுதியில், சுமார் 120 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள், வறுமை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை அச்சுறுத்தலுக்கு தள்ளப்படக்கூடும் என யுனிசெப் எதிர்வு கூரியுள்ளது. ஏற்கெனவே 240 மில்லியன் சிறுவர்கள் வறுமை நிலையில் வசிப்பதாகப் பட்டியலிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குடும்பங்களில் ஏற்படும் தாக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்காக, சிறுவர் அனுகூலம் மற்றும் பாடசாலைப் போஷாக்கு உணவுத் திட்டம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில், அரசாங்கங்கள் உடனடியாக வளங்களை ஈடுபடுத்தி, தமது கவனத்தைச் செலுத்த வேண்டும் என, இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், தற்போதைய சூழலில், இலங்கை அரசாங்கத்தல் இவ்வாறாதொரு திட்டத்தை முன்னெடுப்பதற்குப் போதியளவு நிதி ஒதுக்கீடுகள் காணப்படுகின்றனவா என்பது ஒரு புதிராக அமைந்துள்ளது. இந்த வருடத்திலும் அடுத்த வருடத்திலும் தொடரக்கூடிய ஒரு பிரச்சினையாக இது அமைந்திருக்கும். 

வலுக்குறைந்த பாரிய பொருளாதார அடிப்படைகளைக் கொண்ட நாடுகள், தமது பொருளாதாரத்தை உறுதியான நிலையில் பேணுவதற்கான வழிமுறைகளை இனங்காணுவதில் ஈடுபட்டுள்ளதுடன், சமூக நலன்புரித் திட்டங்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்திய வண்ணமுள்ளன. 

அரச உரிமையாண்மையில் இயங்கும் நிறுவனங்களின் இழப்புகளைக் குறைப்பதற்கான பொருளாதார மீளமைப்புகளை ஏற்படுத்தி, நிதி ஒதுக்கீட்டு ஒழுக்கத்தை மேம்படுத்துவதினூடாக, சிறுவர்கள் போன்ற ஊறுபடத்தக்க குழுவினருக்கு, நலன்புரி உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான சிறந்த வழிமுறையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .