2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆசியாவின் வளர்ச்சி 2020ஆம் ஆண்டில் 0.1% ஆகும் -ஆசிய அபிவிருத்தி வங்கி

Editorial   / 2020 ஜூன் 24 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, 2020ஆம் ஆண்டில் அபிவிருத்தி அடைந்து வரும் ஆசியாவின் வளர்ச்சி 0.1% ஆக அமைந்து இருக்கும் என, ஆசிய அபிவிருத்தி வங்கி கணிப்பிட்டுள்ளது.   

தொற்றுப் பரவல் காரணமாக, பொருளாதாரச் செயற்பாடுகள் வீழ்ச்சியடைவது, வெளியகக் கேள்விகள் மந்தமடைவது போன்ற காரணிகளால், இந்த வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டதாக அமைந்திருக்கும் என, வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   

1961ஆம் ஆண்டைத் தொடர்ந்து, பிராந்தியத்தில் பதிவாகும் மிகவும் குறைந்த வளர்ச்சி வீதம் இதுவாக அமைந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 2021ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி வீதம் 6.2% ஆகப் பதிவாகும் எனவும் 2021ஆம் ஆண்டுக்காக மொத்தத் தேசிய உற்பத்தி என்பதும், தொற்றுப் பரவலுக்கு முன்னர் கணிப்பிடப்பட்ட பெறுமதியை விடக் குறைவானதாக அமைந்திருக்கும் எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது.   

புதிதாகத் தொழிற்றுறை  மயப்படுத்தப்பட்ட பொருளாதாரங்களான ஹொங்கொங், சீனா, கொரியா, சிங்கப்பூர், போன்ற நாடுகள் தவிர்த்து, அபிவிருத்தியடைந்து வரும் ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் இந்த ஆண்டு 0.4% ஆகவும் 2021 ஆம் ஆண்டில் 6.6% ஆகவும் பதிவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.   

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதம பொருளாதார வல்லுநர் யசுயுகி சவதா கருத்துத் தெரிவிக்கையில், “ஆசியா, பசுபிக் பிராந்தியங்களின் பொருளாதாரங்கள், கொவிட்-19 தொற்றுப் பரவல் தாக்கம் காரணமாக, இந்த ஆண்டில் பெருமளவு பின்னடைவை எதிர்கொள்ளும். சில நாடுகளில், தற்போது முடக்க நிலை தளர்த்தப்பட்டு, வழமைக்குத் திரும்பிய நிலை ஏற்பட்ட வண்ணமுள்ள நிலையில், இந்தப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி மந்தமானதாக அமைந்திருக்கும்” என்றார்.   

அவர் தொடர்ந்து, கருத்துத்தெரிவிக்கையில், “2021ஆம் ஆண்டில், பிராந்தியத்தில் உயர் வளர்ச்சி வீதத்தை, நாம் கணிப்பிட்டு உள்ளதுடன், இந்த ஆண்டில் பதிவாகியிருந்த மிகவும் மந்தமான பெறுமதிகள் காரணமாக, இந்த உயர் பெறுமதி, பதிவு செய்யப்படும் என நாம் கருதுகின்றோம். கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, ஏற்பட்டுள்ள தாக்கங்களைக் குறைத்துக் கொள்வதற்கு, அரசாங்கங்கள் தமது பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்” என்றார்.   

பொருளாதாரத்துக்கான இடர் இன்னமும் தணியவில்லை. கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, எதிர்வரும் காலங்களில் இறையாண்மைசார் கடன், நிதி நெருக்கடிகள் ஏற்படக்கூடும். அத்துடன் ஐக்கிய அமெரிக்கா, சீனா இடையில், புதிதாகப் பொருளாதார ரீதியான நெருக்கடிகளும் தோன்ற வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.  

கிழக்கு ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது, இந்த ஆண்டில் 1.3% ஆகப் பதிவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில் 6.8% பெறுமதி வளர்ச்சியைப் பதிவு செய்யும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளதுடன், சீனாவின் பொருளாதார வளர்ச்சி, இந்த ஆண்டில் 1.8% ஆகவும் 2021 ஆம் ஆண்டில் 7.4%ஆகவும் பதிவாகும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.   

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாகப் பெருமளவு தாக்கத்தை எதிர்நோக்கிய தெற்காசியப் பிராந்தியம், நடப்பு ஆண்டில் 3.0% சரிவைப் பதிவு செய்யும் எனவும், 2021ஆம் ஆண்டில் 4.9% வளர்ச்சியைப் பதிவு செய்யும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தியாவைப் பொறுத்தமட்டில் வேகமாகத் தொற்றுப் பரவல் ஆரம்பித்துள்ள நிலையில், நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 4.0% ஆகச் சரிவடைந்து, அடுத்த ஆண்டில் இது 5.0%ஆக உயர்வடையும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.   

தென்கிழக்காசியாவைப் பொறுத்தமட்டில், நடப்பு ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 2.7% ஆக வீழ்ச்சியடையும் எனவும், அடுத்த ஆண்டில் 5.2% ஆக அதிகரிக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகள் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ளும் எனவும் வியட்நாமைப் பொறுத்தமட்டில் பொருளாதாரச் சரிவு, பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது, தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் வேகமான வளர்ச்சியை பதிவு செய்யக்கூடிய நாடாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது.   
மத்திய ஆசியாவைப் பொறுத்தமட்டில், நடப்பு ஆண்டில் பொருளாதாரச் சரிவு 0.5% ஆகப் பதிவாகும் எனவும், அடுத்த ஆண்டில் 4.2% வளர்ச்சியைப் பதிவு செய்யும் எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது. வியாபாரத் தடங்கல்கள், குறைந்த எரிபொருள் விலை போன்றன இதில் தாக்கம் செலுத்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

பசுபிக் பிராந்தியத்தைப் பொறுத்தமட்டில், வணிகச் செயற்பாடுகளில் கட்டுப்பாடுகள், சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி போன்றன பொருளாதார வீழ்ச்சிக்கு பங்களிப்பு வழங்கியுள்ளன. இந்தப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு ஆண்டில் 4.3% ஆக வீழ்ச்சியடைவதுடன், 2021ஆம் ஆண்டில் 1.6% ஆக வளர்ச்சியடையும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.   

2020ஆம் ஆண்டில் ஆசியாவின் பணவீக்கம் 2.9% ஆகப் பதிவாகும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் 2.4% இது குறையும் எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது.   

 1966ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆசியா, பசுபிக் பிராந்தியத்தின் வறுமையை இல்லாமல் செய்து, நிலைபேறாண்மையை ஊக்குவிப்பதை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றிய வண்ணமுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .