2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஆர்பிகோ பினான்ஸ் - AMF ஒன்றிணைவு உறுதி

Johnsan Bastiampillai   / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்பிகோ பினான்ஸ் கம்பனி பிஎல்சி (AFC) மற்றும் அசோசியேட்டட் மோட்டர் பினான்ஸ் கம்பனி பிஎல்சி (AMF) ஆகியவற்றின் ஒன்றிணைப்புச் செயற்பாடுகள், வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் 69 வருட கால நம்பிக்கையையும் பாதுகாப்பையும் மேலும் உறுதி செய்யும் வகையில், இந்த நடவடிக்கை அமைந்திருக்கும்.   
கொடுக்கல் வாங்கலினூடாக, சிறந்த மூலோபாயத் திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், வைப்பாளர்களுக்குப் பாதுகாப்பானதும் உறுதியானதுமான நிறுவனமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஏதுவானதாக அமைந்திருக்கும் எனவும் கருதப்படுகின்றது. இவற்றின் தற்போதைய மூலதன நிலையை மேம்படுத்த வழியேற்படுவதுடன், ஒழுங்குபடுத்தல், அதிகார அமைப்புகளின் இலக்குகளை எய்தும் வகையிலும் இது அமைந்திருக்கும்.  
இந்த ஒன்றிணைவினூடாக, செயற்பாட்டு உட்கட்டமைப்புகளை சிறந்த வகையில் நிர்வகிப்பதும் பங்காளர்களுக்கு அதிகளவு பெறுமதி சேர்ப்பதும் ஒன்றிணைந்த நிறுவனத்தை, இலங்கையின் நிதித் துறையில் பலம் வாய்ந்த நிறுவனமாகக் கட்டியெழுப்புவதும் அடையக்கூடிய இலக்குகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  
இது தொடர்பில், ஆர்பிகோ பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி, சந்திரின் பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில், “இரண்டு நிறுவனங்களுக்கும் இடையிலான ஒன்றிணைக்கும் செயற்பாடுகள், வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இரு நிறுவனங்களும் செயலாற்றக்கூடிய பணிச் சூழல் என்பது, சட்டபூர்வ ஒன்றிணைவு என்பதற்குத் தயாராகவுள்ளதுடன், அந்தச் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன” என்றார்.  
“மூலதனம் மற்றும் ஒழுங்குபடுத்தல் பின்பற்றல் தொடர்பில், இந்த முன்னெடுப்பு உறுதியான நிறுவனத்தை உருவாக்கும்; வைப்பாளர்களுக்கும் மேலும் பாதுகாப்பை வழங்கும். AFC உடனான ஒன்றிணைவு வெகு விரைவில் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கின்றோம். இரண்டு நிறுவனங்களின் பிரதான வலிமைகளையும் ஆற்றல்களையும் இது மேலும் மேம்படுத்துவதாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை” என அசோசியேட்டட் மோட்டர் பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி, ரி.எம்.ஏ. சாலை கருத்துத் தெரிவித்தார்.  
AFC நிறுவனத்தின் 94 சதவீதமான பங்குகளை 2014 ஒக்டோபர் மாதம் AMF கைவசப்படுத்தியது. நாட்டில் இயங்கும் இரண்டு பழைமையான நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களாக இவை கருதப்படுகின்றன. சவால்களும்  தளம்பல்களும் நிறைந்த உறுதியற்ற சூழ்நிலைகளின் போதும், தொடர்ச்சியான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தன. இலங்கையில் நீண்ட காலமாக இயங்கும், நிதிச் சேவைகளை வழங்கும் அனுமதி பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக AFC தொடர்ந்தும் திகழ்வதுடன், AMF அதைப் பின்தொடர்ந்து நான்காம் இடத்தில் உள்ளது.  
1951 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஆர்பிகோ பினான்ஸ் கம்பனி பிஎல்சி, ஏழு தசாப்த காலமாக, இலங்கையில் உறுதியாகச் செயலாற்றும் நிறுவனமாகத் திகழ்கின்றது. 10 கிளைகளைக் கொண்டு நிறுவனம் இயங்குவதுடன், நிறுவனத்தின் பிரதான வர்த்தக செயற்பாடுகளில், நிதிக் குத்தகை, அடமானக் கடன்கள், பிரத்தியேகக் கடன்கள், கால அடிப்படையிலான சேமிப்பு வைப்புகள் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன.  
அசோசியேட்டட் மோட்டர் பினான்ஸ் கம்பனி பிஎல்சி, 1962 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதுடன், நாடு முழுவதிலும் பரந்தளவு விநியோகத்தர் வலையமைப்பைக் கொண்டு, லீசிங் சேவைகளை வழங்குகின்றது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X