2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இனிப்புகளுக்கும் சீனி வரி

Editorial   / 2019 ஜனவரி 17 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மென்பானங்களில் சீனி வரி நடைமுறையிலுள்ள நிலையில், இனிப்புத் தின்பண்டங்களிலும் சீனி வரியை உள்ளடக்குவதற்குச் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி முறைமை, எதிர்வரும் 2019 பாதீட்டில் உள்ளடக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

இலங்கை இனிப்புத் தின்பண்டங்கள் உற்பத்தியாளர் சம்மேளனத்துக்கு, இந்த வரி விதிப்பு அறிமுகம் செய்யப்படமாட்டாது எனும் உறுதிமொழி வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த வரி விதிப்பை நடைமுறைப்படுத்த, இலங்கை சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

இந்தச் செயற்பாட்டினூடாக, இனிப்புத் தின்பண்டத்துறையைச் சேர்ந்த 50,000 நேரடி மற்றும் 150,000 மறைமுக ஊழியர்களைப் பாதிக்கும் வகையில் அமைந்திருக்கும் என, இலங்கை இனிப்பு தின்பண்டங்கள் உற்பத்தியாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.  

இந்த வரி விதிப்பு அறிமுகம் செய்யப்பட்டால், முன்னணி இனிப்பு தின்பண்டங்கள் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளின் விலையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படும் என்பதுடன், இறக்குமதி செய்யப்படும் குறைந்த செலவிலமைந்த இனிப்பு பண்டங்களுடன் போட்டியிடுவதற்கு கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதன் காரணமாக, அந்நியச் செலாவணியும் பாதிப்படையும் எனவும் சம்மேளனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.  

சீனி வரி விதிப்பு மக்கள் மத்தியில் சீனி அடங்கிய இனிப்பு பண்டங்களின் பாவனையை குறைக்கும் நோக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதனூடாக தொற்றா நோயான நீரிழிவு போன்றவற்றின் பரவலைத் தடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டிருந்தது.  

ஆசியாவின் தனிநபர் இனிப்பு தின்பண்டங்கள் நுகர்வோர் நிலையில் உயர்ந்த மட்டத்தில் இலங்கை காணப்படுவதுடன், நபர் ஒருவர் நாளொன்றுக்கு சுமார் 4 கிலோகிராம் வரை சீனி அடங்கிய உணவுப் பொருட்களை உட்கொள்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சீனி பாவனையை குறைப்பது என்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.   

2018 பாதீட்டின் மூலமாக சீனி வரி விதிப்பினூடாக 5 பில்லியன் ரூபாய் வரை அரசாங்கம் வருமானமாகப் பெறும் என மதிப்பிடப்பட்டிருந்தது.  

பழரசங்கள், பழப்பானங்கள் மற்றும் நெக்டார் வகைகள் போன்றன இந்த சீனி வரி விதிப்புக்கு உட்பட்டுள்ளதுடன், 2018 ஜூலை 25 ஆம் திகதி முதல் இது நடைமுறையிலுள்ளது. ஆயினும் இந்த வரி விதிப்பிலிருந்து 52 நாள்கள் அரசியல் கொந்தளிப்புக் காணப்பட்ட காலப்பகுதியில் தாம் விடுபட்டிருந்ததாக மென்பானங்கள் உற்பத்தியாளர் நிறுவனமொன்றின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .