2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கை மத்திய வங்கி மக்களுக்காகவா? அரசியல்வாதிகளுக்காகவா?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 ஜூன் 24 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பொருளாதாரத்தின் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கின்ற, வெளியிடுகின்ற ஒரு ஸ்தாபனாக இருக்கக்கூடிய மத்திய வங்கி, 15ஆம் திகதி தங்களுக்கு ஏற்பட்ட களங்கத்தை எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.

நாட்டின் முதன்மை மனிதனாக அறியப்படுகின்ற ஜனாதியால், “என்னுடைய பொருளாதார கொள்கைகளை முன்கொண்டு செல்வதற்கு, நீங்கள் முட்டுக்கட்டையாக இருக்கிறீர்கள்” எனச் சொல்லும் அளவுக்கு, எங்கள் மத்திய வங்கியின் நிலை இருக்கிறதா? என்கிற கேள்வியை எல்லோரிடத்திலும் எழுப்பி இருக்கிறது. 

உண்மையில், இலங்கையின் மத்திய வங்கி வினைத்திறனற்று இருக்கிறதா? கொரோனா காலத்தில் நாட்டின் நலன்கருதி எதனையும் செய்யாமல் இருந்திருக்கிறதா? இதனாலேயே ஜனாதிபதியால் விமர்சனம் செய்யப்பட்டதா? இல்லை நாட்டின் அரசியல்வாதிகளின் இழுப்பார் கைப்பிள்ளையாக இல்லாததன் விளைவாக இந்த சேற்றை பூசும் முயற்சி பொதுவெளியில் நடத்தப்பட்டதா? என்பதை கொஞ்சம் ஆராய்ந்து அறியவேண்டியது அவசியமாகிறது.

ஒருநாட்டில், மத்திய வங்கியின் தேவை என்ன என்பதை அறிவதிலிருந்து,  கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதியின் குற்றஞ்சாட்டு வரை தெளிவான புரிதலுடன் அறிவதன் மூலமாக, நிறைய கசப்பான உண்மைகளை நாம் புரிந்துகொள்ள முடியும். 

இலங்கை மத்திய வங்கியின் தேவை என்ன ?

இலங்கைக்கு மட்டுமல்ல, எந்தவொரு நாட்டுக்கும் மத்திய வங்கியின் தேவை மிக அத்தியாவசியமானது. ஒரு நாட்டின் நிதியியல் செயற்பாடுகள் சுதந்திரமாகவும் சரியான முறையில் இயங்கவும், நாட்டிலுள்ள அனைத்து நிதி நிறுவனங்களும் முறையாக செயற்படுகின்றனவா? என்பதைக் கண்காணித்து அவற்றின் ஊடாக மக்களின் நிதியியல் ஸ்திரத்தன்மையை பேணவும் மத்திய வங்கி மிக முக்கியமானது.

இன்னும் இலகு வடிவில் சொன்னால், மத்திய வங்கி ஒரு தாய் போன்றவர். அப்பா வருமானத்தை துளைத்துக்கொண்டு வரலாம். பிள்ளைகள் வருமானம் உழைக்கலாம் அல்லது கல்வி பயிலலாம். அவர்கள் அனைவருக்குமே தனியான தேவைகள், விருப்பங்கள் இருக்கும். 

அதுபோல, அந்த வீட்டுக்கான ஒட்டுமொத்த தேவைகளும் தனியாக இருக்கும். இங்கே ஒட்டுமொத்த குடும்பத்தினதும் தனிநபரினதும் தேவைகளையும், விருப்பங்களையும் கவனத்திற்கொண்டு குடும்ப வருமானத்தை அடிப்படையாகக்கொண்டு தாய் முடிவுகளை எடுப்பார். இதன்போது, எல்லோருடைய தேவைகளும் நிறைவேற்றப்படும் என்பதற்கில்லை. ஆனால், குடும்ப நலனில்  முக்கியமானவை முன்னுரிமை வழங்கப்பட்டு நிறைவேற்றப்படும். அப்படித்தான்  மத்திய வங்கியும் செயற்படுகிறது.

இலங்கை மத்திய வங்கியை பொறுத்தவரை, அவர்களுக்கு மிக முக்கியமான இரண்டு இலக்குகள் இருக்கின்றன. முதலாவது, நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம், நாட்டு மக்களின் நிதியியல் ஸ்திரத்தன்மையை கட்டுக்குள் வைத்திருப்பதாககும். இன்னும் இதனை இலகுபடுத்தின், நாங்கள் 100 ரூபாய்க்கு வாங்கிகொண்டிருக்கும் பொருளின் விலை நாளாந்தம், மாதாந்தம், வருடாந்தம் தொடர்ச்சியாக அதிகரித்து அதனை வாங்கவே முடியாதநிலை வராமல் பார்த்துக்கொள்ளுகின்ற முறை என்று சொல்லலாம். இங்கே நீங்கள் வாங்கும் பொருளென்பது, அத்தியாவசிய பொருளையே குறிக்கிறது. காரணம் மத்திய வங்கி, தாய்போல ஒட்டுமொத்த நாட்டினதும் பொதுவான நலனையே முன்னிலைப்படுத்தி செயற்படும்.

இரண்டாவது, நாட்டிலிருக்கக்கூடிய நிதியியல் ஸ்தாபனங்களை கண்காணிப்புச் செய்து, அவற்றின் மூலமாக நிதியியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதாகும். இதனை இன்னும் இலகுபடுத்தினால், இலங்கையில் வங்கிகள், நிதி நிறுவனங்களுடன் தொடர்பே இல்லாமல் இருக்கின்ற யாரையும் பார்க்க முடியாது. அப்படி நீங்கள் ஒரு வங்கியில் உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுவோம். ஒரு நாள் உங்கள் பணத்தேவைக்காக வங்கியிலிருந்து பணத்தை எடுக்க போகிறீர்கள். ஆனால், ஒட்டுமொத்த வங்கியுமே மூடப்பட்டு விட்டது. உங்களால் பணத்தை எடுக்க முடியாதநிலை வருகிறது? இந்த சமயத்தில் நீங்கள் என்ன செய்ய முடியும்? உங்கள் பணத்தை எங்கே பெற முடியும் ? என்கிற பதைபதைப்பு வருகிறது அல்லவா? 

இந்த இடத்தில்தான் மத்திய வங்கியின் செயற்பாடு முக்கியமானது. உங்கள் பணத்துக்கு வங்கி மட்டுமல்ல மத்திய வங்கியுமே பொறுப்பான ஒருவர்தான். இதனால், உங்கள் வங்கி மூடப்படாமல் இருக்க என்ன தேவையோ அத்தனையையும் மத்திய வங்கி செய்து கொண்டே இருக்கும். அதையும் மீறி, வங்கி மூடப்படுகின்ற நிலை வருமானால், உங்கள் பணத்துக்கு உத்திரவாதம் வழங்கி அது கிடைப்பதை மத்திய வங்கியே உறுதி செய்யும். அதாவது, நாட்டில் நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலமாக மீண்டும் மக்களை பாதுகாக்கும் நிறுவனமாக இது இருக்கிறது.

அப்படியாயின் இத்தனை பொறுப்புகளுடன் இருக்கின்ற மத்திய வங்கி அத்தனையையும் இந்தக் கொரோனா காலத்தில் மறந்து விட்டதா? இல்லை ஜனாதிபதியின் நலனுக்குச் செயற்பட மறுக்கிறதா?

கொரோனா காலத்தில் மத்திய வங்கி செய்தது என்ன?

ஜனாதிபதியின் குற்றச்சாட்டுகள் உண்மையா, இல்லையா? என்பதை அறிவதற்கு, மூன்று மாதங்களில், அதாவது கொரோனா காரணமாக இலங்கை முடங்கியிருந்த நிலையில், இலங்கை மத்திய வங்கி என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டியது அவசியமாகிறது.

உலகிலிருக்கும் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் மத்திய வங்கிகளுடன் ஒப்பிடுமிடத்து, இலங்கை மத்திய வங்கிதான் கொரோனாவின் தாக்கம் நாட்டினுள் அதிகரிக்க முன்னமே ஏற்பாடுகளை செய்த ஒரு வங்கியாக இருக்கின்றது. உதாரணத்துக்கு, பெப்ரவரி ஆரம்பத்திலேயே வட்டி வீக்கத்தில் மாற்றமொன்றை செய்திருந்தது மத்திய வங்கி. இந்த மாற்றம், எப்படி எங்களுக்கு நன்மையானது என உங்களில் பலர் கேட்கலாம். அத்தனையும் இலகுமுறையில் பார்ப்போம்.

மத்திய வங்கி, வங்கிகளுக்கெல்லாம் வங்கி. நமது நிதியியல் தேவைக்கு எப்படி வணிக வங்கிகளை நாம் நாடுகிறமோ? அதுபோல, அரச மற்றும் வணிக வங்கிகள், தங்களின் நிதித்தேவையை பூர்த்திசெய்ய நாடுகின்ற ஓர் இடமே மத்திய வங்கி. அவர்களும் தங்களுடைய செலவுகளை ஈடுசெய்யக் கூடியவகையில் வங்கிகளுக்குத் தேவையான நிதியை கடனாக வழங்குவார்கள். இதற்கு வட்டியும் அறவிடுவார்கள். எனவே, அதற்கு மேலதிகமாக வணிக வங்கிகள் வட்டியை நிர்ணயம் செய்து அதனை பொதுமக்களுக்கு வழங்குவார்கள். 

உதாரணத்துக்கு மத்திய வங்கி 9% வட்டியில் 100வை வணிக வங்கிக்கு வழங்கினால், அதனை தனிநபருக்கு அல்லது நிறுவனத்துக்கு வழங்கும்போது 11%க்கு வணிக வங்கி வழங்கும். எனவே, வணிக வங்கிகளுக்கு வழங்கும் வட்டி குறையும்போது, அது நிறுவனம் மற்றும் தனிநபருக்கான கடன் வட்டியிலும் குறைவை செய்யும். இது அவர்களுக்கு மேலதிக நிதியை பெற்று வணிகத்தை நடத்த உதவி புரியும். அதாவது, எங்கள் கைகளில் பணத்தின் நிரம்பல் அதிகரிக்க அதை நாங்கள் கொள்வனவு செய்ய பயன்படுத்துவோம். இதனால், நாட்டில் பணபாச்சல் சீராக இருக்கும். இது பொருளாதாரம் தடையின்றி நடக்க ஒருவகையில் உதவியாக இருக்கும்.

இலங்கை மத்திய வாங்கி, கொரோனா உச்சமான காலம் முழுவதுமே தன்னுடைய வட்டி வீதங்களை பரிசீலனை செய்து குறைத்தே வந்திருக்கிறது. ஆனால், அவர்களாலும் இதனை ஒட்டுமொத்தமாகக் குறைக்க முடியாது. உதாரணத்துக்கு, மத்திய வங்கி வணிக வங்கிக்கு எந்த வட்டியும் வாங்காமல் கடனை கொடுக்கிறது. வணிக வங்கி உங்களுக்கு எந்த வட்டியும் அறவிடாமல் உங்களுக்கு கடனை தருகிறது என வைத்துகொள்ளுங்கள். என்ன நடக்கும்? நாட்டில் எல்லோரிடத்திலும் பணம் கையிலிருப்பில் வர தொடங்கும். ஆனால, கொரோனா காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி உட்பட ஏனைய விடயங்கள் முடங்கிக் கிடக்க, பொருள்கள் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும்.

உங்களிடம் பணம் இருக்கிறது. ஆனால், சந்தையில் அதனை பயன்படுத்தி வாங்க போதுமான பொருள்கள் இருக்காது. இது சந்தையில் கேள்வி அதிகமாகவும், நிரம்பல் குறைவாகவும் உள்ளநிலை. இதனால், பொருள்களுக்கான விலை சடுதியாக அதிகரிக்கும். கொரோனா காலத்தில் மஞ்சளுக்கு விலை அதிகரித்ததைப் போன்ற நிலையாகும். இதனால், பணவீக்கம் அதிகரிக்கும். அதாவது, 100 ரூபாய்க்கான பொருளை நீங்கள் 1,000 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியதாக இருக்கும். 

எனவேதான் ஜனாதிபதியே, “இன்னும் வட்டியை குறையுங்கள்” என்றாலும், மத்திய வங்கி அதனை செய்வதில்லை. காரணம், அது தற்காலிக அரசியல்வாதிகளுக்காக இயங்கும் அமைப்பு அல்ல. அது நாட்டுக்கும் மக்களுக்குமாக செயற்படும் ஒரு சுயாதீன அமைப்பாகும்.

இதற்கு அடுத்ததாக, கொரோனா காலத்தில் இலங்கை மத்திய வங்கி பண அச்சடிப்பை நிகழ்த்தி, அதன்மூலமாக பணவெளியீட்டை செய்கிறது என்பதை அறிந்திருப்பீர்கள். இதற்காக, மத்திய வங்கியை திட்டியவர்களும் அதிகம் உண்டு. அப்படியாயின், இப்போது மட்டும் மக்களின் நலனில் மத்திய வங்கி அக்கறையோடு செயற்படவில்லையா என்கிற கேள்வி வரும். அத்தனையும் இலகுபடுத்தப்பட்ட  முறையில் பார்ப்போம்.

கொரோனா காலத்தில், இலங்கை அரசுக்கு வருமானம் என்பதே இல்லை என்று சொல்ல முடியும். விவசாயத்துறைத் தவிர்த்து வேறு எந்த மூலங்களின் மூலமாகவும் வருமானம் இல்லை என்பதே உண்மை. ஆனால், அந்த மூன்று மாத காலப்பகுதியிலும் இலங்கை அரசானது, அரச ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். வருமானமற்றத் தரப்பினருக்கு தலா 5,000 ரூபாய் நிவாரண நிதியை வழங்க வேண்டும். கொரோனா கால வைத்திய செலவுகளுக்கு நிதியை ஒதுக்க வேண்டும். இதற்கெல்லாம் பணம் வேண்டும். 

இந்தப் பணத்துக்கு என்ன வழி?

வழமையாக அரசு தனக்கு பணம் தேவையாக இருக்கின்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும், தங்களுடைய கடன்பத்திரமான முறிகளை விற்பனை செய்து பணத்தை திரட்டி கொள்வார்கள். அதாவது, வட்டிக்கு பணம் வாங்குவது போல ஒரு முறை. இப்போது நீங்கள் அரசுக்கு பணம் கொடுத்தால் வட்டியுடன் சில காலத்துக்கு பின் அரசு அதனை உங்களுக்கு வழங்கும். ஆனால், இந்தக் கொரோனா காலமானது, உலகநாடுகளையே முடக்கி போட்டிருப்பதால், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளைப் பெற முடியாது. இங்கேதான் மத்திய வங்கி, அரசுக்கு போதுமான உதவியை செய்கிறது. அரசின் முறிகளை வாங்கிக்கொண்டு அரசுக்கு பணத்தை கொடுக்கிறது.

அப்படியாயின் மத்திய வங்கிக்கு எங்கிருந்து பணம் வருகிறது ? அதைத்தான் அவர்கள் அச்சடிக்கிறார்கள். இதனால், அரசுக்கு தேவையான நிதி தேவை தற்காலிகமாக பூர்த்தி செய்யப்படுகிறது. ஆனால், கொரோனா நிலைமை சீரடையும்போது மத்திய வங்கி தன்னிடமுள்ள முறிகளை விற்பனை செய்து பணத்தை சம்பாதிக்க வேண்டும். இல்லாவிட்டால், புதிதாக அச்சடித்த பணம் மக்களின் கைகளில் இருக்கும். நிலைமை சீரானதன் பின்பு, முடங்கியிருக்கும் பணமும் வெளியே வர தொடங்க, முன்பு சொன்னதுபோல பணவீக்கம் வந்துவிடும்.

இதனால்தான், மத்திய வங்கி சரியாக கணிப்பீடு செய்து நாணய அச்சடிப்பை செய்கிறது. ஆனால, சில சமயங்களில் அரசு அழுத்தம் மிக அதிகமாக இருக்கின்றபோது கணிப்பீடுகளை தாண்டியும் இந்த அச்சடிப்பை செய்கிறது. அதற்காக, எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த அழுத்தத்தை தாங்கிக்கொண்டு இதையே தொடர்ந்தால், மக்கல்நிலைதான் பரிதாபமாக ஆகும். இங்கேதான் ஜனாதிபதியும் மத்திய வங்கியும் முரண்பட்டுக் கொண்டார்கள். யார் குறுங்கால நலனுடனும் யார் நீண்டகால நலனுடனும் நாட்டுக்காக செயற்படுகிறார்கள் என்பதை இது தெளிவாக்கியிருக்கிறது.

இதற்கு அடுத்து, அரச வங்கிகள், தனியார் வங்கிகள் வணிகங்கள் பாதிக்கப்படாமல் இருக்க நித்திக்கடன்களை வழங்குகிறார்கள். இந்தக் கடன்களுக்கான பணமும் மத்திய வங்கியிடமிருந்தே வருகிறது. அந்தப் பணமும் கூட அச்சடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆகவே, இலங்கையின் மத்திய வங்கி முடிந்தவரை நிதியியல் கொள்கை அடிப்படையில் செயற்பட்டிருக்கும் போது, ஏன் ஜனாதிபதி இத்தனை விமர்சனங்களை முன் வைக்கிறார்.
எங்கே தவறு நடந்து இருக்கிறது ?

இந்தப் பத்தியை இதுவரை வாசித்தவர்களாக இருந்தால், எந்தவித அரசியல் இலாபங்களுக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் மத்திய வங்கி செயற்பட வேண்டியதன் முக்கியத்தை உணர்ந்து இருப்பீர்கள்.

நாட்டில் ஜனாதிபதி, அரசியல்வாதிகள் என எல்லோருமே வருவார்கள், போவார்கள். ஆனால், நாடும் அதன் மக்களுமே அந்த நாட்டின் உயிர்நாடியாக இருப்பார்கள். அவர்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படுவதாக, சுயாதீன நிறுவனமாக இலங்கை மத்திய வங்கி இருக்கிறது. இருக்க வேண்டியது அவசியமாகிறது.

அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்ளடங்காமல், நாட்டின் நலனைக் கொண்டு மத்திய வங்கி செயற்படும்போது, நாட்டின் ஜனாதிபதியே ஒரு விடயத்தை முன்மொழிந்தால், அதனை பரிசீலனை  செய்ய முடியுமா? முடியாத? என்கிற முடிவை சொல்ல வேண்டியப் பொறுப்பு, மத்திய வங்கியிடம் இருக்கிறது. முடியுமாயின், அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் அவர்களுக்கும் இருக்கிறது.

ஆனால், தேர்தல் நெருங்கிவரும் காலத்தில், அரசியல் இலாபங்களுக்காக குறுகியகால திட்டங்கள் மூலமாக மக்களை கவர்வதற்காக நடைமுறைபடுத்துங்கள் என்கிற திட்டத்தை எல்லாம் நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டுமா என்கிற கேள்வி வருகின்றபோது அதற்கான பதிலை நாம் இங்கே பிரத்தியேகமாக சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இலங்கை மத்திய வங்கி போன்ற அமைப்பின் மீது, நிறைவான விமர்சனங்கள் எனக்கும், உங்களுக்கும் உண்டு. திறைசேரி முறி விவகாரம் அதற்கு மிகச்சிறந்த உதாரணம். மக்களுக்காக மத்திய வங்கி என்கிறநிலையை மறக்கின்ற நிலையால் இடம்பெற்ற வரலாற்றின் மிகப்பெரும் தவறு அது. ஆனால், அதுபோன்ற இன்னுமொரு பொருளாதார வீழ்ச்சிக்கு உந்துதல் வருகின்றபோது, அதனை மத்திய வங்கி நடைமுறைப்படுத்த தயங்குகின்றபோது அதற்கான ஆதரவும் மக்களின் பக்கமாக வரவேண்டியது அவசியமாகிறது.அப்போதுதான் எந்த அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள்ளும் சிக்கிக்கொள்ளாத ஒரு நிறுவனமாக மத்திய வங்கியால் செயற்பட முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .