2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கையின் ஏற்றுமதி மேயில் வீழ்ச்சியடைவு

Editorial   / 2020 ஜூன் 24 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வணிகம் சார் ஏற்றுமதிகள், மே மாதத்தில் 602.44 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியிருந்தது. ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், 277 மில்லியன் அமெரிக்க டொலர் உயர்வடைந்திருந்த போதிலும், கடந்த ஆண்டின் மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 37 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தமையை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை வெளியிட்டிருந்த தரவுகளிலிருந்து அவதானிக்க முடிகிறது.   

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, தொழிற்சாலைகள் மூடப்பட்டமை, நாட்டின் எல்லைகள் மூடப்பட்டமை போன்ற காரணங்களால், இந்த ஏற்றுமதி வருமான வீழ்ச்சி ஏற்பட்டதாக, அந்தத் தரவுகள் அடங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்த அறிக்கையில், ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தவிசாளர் பிரபாஷ் சுபசிங்க பின்வருமாறு  குறிப்பிட்டுள்ளார். “ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாதத்தில் உறுதியான மீட்சியைக் காண்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம். ஏற்றுமதியில் ஈடுபடும் வியாபார நிறுவனங்கள், ஏற்றுமதி அபிவிருத்திச் சபையுடன் இணைந்து, மே மாத ஏற்றுமதிகள் வெற்றிகரமாக அமைவதற்குப் பெருமளவில் பங்களிப்பு வழங்கி இருந்தமைக்காக நன்றி தெரிவிக்கின்றேன். எதிர்வரும் மாதங்களிலும் இந்த வளர்ச்சியான பெறுபேறுகள் பதிவாகும் என எதிர்பார்க்கின்றேன்” என்றார்.   

கொவிட்-19 தொற்றுப் பரவுவதற்கு முன்னதாக, 2020ஆம் ஆண்டின் ஏற்றுமதி வருமான இலக்கு, 18.5 பில்லியன் அமெரிக்க டொலர் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 2019ஆம் ஆண்டில் பதிவாகியிருந்த 16.14 பில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், இந்தப் பெறுமதி 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் உயர்வானதாகும். 

ஆனாலும், ஏப்ரல் மாதத்தில் இந்தப் பெறுமதியை மீளாய்வு செய்து, 10.75 பில்லியன் அமெரிக்க டொலர் என நிர்ணயிக்கப்பட்டது.  இதில், 7.53 பில்லியன் அமெரிக்க டொலர் வணிகசார் சரக்கு ஏற்றுமதி ஊடாகவும் 3.21 பில்லியன் அமெரிக்க டொலர் சேவைகள் சார் ஏற்றுமதிகளின் ஊடாகவும் பெறுவதற்கு எதிர்பார்க்கப்பட்டது.  

“கொவிட்-19 தொற்றுப் பரவல் என்பது, உலகளாவிய தொற்று நிலை என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலக நாடுகளின் எல்லைப் பகுதிகள் மூடப்படுகின்றன என்பதை நாம் அறிந்து கொண்டோம். இதனால், ஏற்றுமதிகளுக்குப் பெரும் நெருக்கடி நிலை தோற்றும் என நாம் கணிப்பிட்டதுடன், விநியோகம், கேள்வி போன்ற சகல அம்சங்களையும் கவனத்தில் கொண்டு, நடப்பு ஆண்டுக்காக ஏற்றுமதி வருமான இலக்கை 10.75 பில்லியன் அமெரிக்க டொலராக நாம் மீளமைத்துள்ளோம்.ஜுன், ஜுலை மாதங்களில், ஏற்றுமதி வருமானங்கள் மேலும் வளர்ச்சியடையும் என நம்புகின்றோம். தொடர்ந்தும் சரிவான போக்கு பதிவாகுமானால், எமது இலக்கை நாம் மீண்டும் மீளாய்வு செய்வோம்” என்று, அந்த அறிக்கையில் பிரபாஷ் சுபசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

மே மாதத்தில், ஆடைகள் ஏற்றுமதி 48.23 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 219 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டில் இந்தப் பெறுமதி 422.73 மில்லியன் அமெரிக்க டொலராகப்  பதிவாகியிருந்தது. எவ்வாறாயினும், ஏப்ரல் மாதத்தில் பதிவாகிய 65 மில்லியன் அமெரிக்க டொலர் எனும் பெறுமதியுடன் ஒப்பிடுகையில், மே மாதத்தில் வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. குறிப்பாக, அமெரிக்க சந்தைகளுக்கு, பிரத்தியேக பாதுகாப்பு அங்கிகள், பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன.   

தேயிலை ஏற்றுமதி 14சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து, 108 மில்லியன் அமெரிக்க டொலராகவும் தேங்காய் உள்ளிட்ட தெங்கு உற்பத்திகள் ஏற்றுமதி ஒன்பது சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 25 மில்லியன் அமெரிக்க டொலராகவும் இறப்பர் உற்பத்திகள் ஏற்றுமதி 36 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 51.19 மில்லியன் அமெரிக்க டொலராகவும் பதிவாகியிருந்தன.  

மீன் உள்ளிட்ட கடல்சார் உற்பத்திகள் ஏற்றுமதி 39.29 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 12 மில்லியன் அமெரிக்க டொலராகவும் வாசனைத் திரவியங்கள், அத்தியாவசிய எண்ணெய் ஏற்றுமதிகள் 16 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 19 மில்லியன் அமெரிக்க டொலராகவும் பதிவாகியிருந்தன.  

ஆபரணங்கள், இரத்தினக்கற்கள் ஏற்றுமதியிலும் பெருமளவு வீழ்ச்சி பதிவாகியிருந்தது. உணவு, பானங்கள் ஏற்றுமதி 22 சதவீதத்தாலும், இரசாயனங்கள், பிளாஸ்டிக் பொருள்கள் 19.22 சதவீதத்தாலும், பெற்றோலியப் பொருள்கள் 12 சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்திருந்தன.  

அநேகமாக, சகல ஏற்றுமதித் துறைகளும் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் வளர்ச்சியைப் பதிவு செய்திருந்ததாக ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.  
இலங்கையின் ஏற்றுமதி வருமானம், முதல் ஐந்து மாதங்களில் 29 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 3,456 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியிருந்தது. 2019ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில், 4,845 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியிருந்தது. 2020ஆம் ஆண்டுக்காக மீளமைக்கப்பட்ட 10.75 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கில் 32 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை குறிப்பிட்டுள்ளது.   

அமெரிக்கா (905 மில்லியன் அமெ.டொலர்), ஐக்கிய இராட்சியம் (296 மில். அமெ.டொலர்), இந்தியா (221 மில். அமெ.டொலர்), ஜேர்மனி (196 மில். அமெ.டொலர்), இத்தாலி (136 மில். அமெ.டொலர்) ஆகிய நாடுகளுக்குப் பெருமளவு ஏற்றுமதிகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .