2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கையில் டிஜிட்டல் அறிவு வளர்ச்சியில் திறன்பேசிகளின் பங்களிப்பு

Editorial   / 2020 ஜூலை 14 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

  இலங்கையில் இணையப் பாவனைக்காகத் திறன்பேசிகளைப் பயன்படுத்து வோரின் எண்ணிக்கை, அந்தத் தேவையை நிவர்த்தி செய்து கொள்வதற்கு மடிக்கணினி,  கணினி ஆகியவற்றைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை விட அதிகமானதாக அமைந்துள்ளது எனத் தொகை மதிப்பு புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தரவுகளின் பிரகாரம், கிராமிய மட்டத்தில் காணப்படுவோரும், நகரத்திலுள்ளவர்களை விட, திறன்பேசிகளினூடாக இணையப் பாவனையை அதிகளவு மேற்கொள்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.  

2019ஆம் ஆண்டுக்கான கணினி அறிவு தொடர்பான புள்ளிவிவரங்கள், இலங்கை தொகை மதிப்பு, புள்ளிவிவரத் திணைக்களத்தால் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இதில் ஐந்து முதல் 69 வயதுக்கிடையிலான 72.2% ஆன இலங்கையர்கள் திறன்பேசிகள்,  கணினிகளைப் பயன்படுத்தி, இணையத்தில் பிரவேசிப்பதாகவும் கணினி, மடிக்கணினி ஆகியவற்றைப் பயன்படுத்தி 24.1% பேரும், டப்லெட்களைப் பயன்படுத்தி 2% பேரும் இணைய வசதியைப் பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக 39.2% ஆண்களும், 33% பெண்களும் திறன்பேசிகளைப் பயன்படுத்துவதாகவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டிருந்தது.

குறிப்பிடப்பட வேண்டிய மற்றோர் அங்கமாக, நகர்ப் பகுதிகளைச் சேர்ந்த 19.8% பேர் மாத்திரமே, இணையத்தைப் பயன்படுத்த திறன்பேசிகளைப் பயன்படுத்தி இருந்ததுடன், கிராமியமட்டத்தில் இந்தப் பெறுமதி 51.1% ஆக அதிகரித்திருந்தது. 

15-29 வயதுகளுக்கு உட்பட்டவர்களிடையே திறன்பேசிப் பாவனை உயர்வாகக் காணப்பட்டதுடன், 40-49 வயதுக்கு உட்பட்டவர்கள் மத்தியிலும் இந்தப் பெறுமதி உயர்வாக அமைந்திருந்தது. 
இந்தக் கருத்தாய்வு தொடர்பில் தொகைமதிப்பு, புள்ளிவிவரத் திணைக்களம் குறிப்பிடுகையில், ‘தொழில்வாய்ப்பின்றிக் காணப்படுவோரில் 20 - 24 வயதுக்கு உட்பட்டவர்கள் மத்தியில் அதியுயர் கணினி அறிவு (74%) அவதானிக்கப்பட்டிருந்தது. இந்தப் பெறுபேறுகளின் போது, தொழில் வாய்ப்பின்றிக் காணப்படுவோர் மத்தியில், பலருக்கு ஏதேனும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் திறன் காணப்படுவது கண்டறியப்பட்டிருந்தது. 40 - 69 வயதுக்கு உட்பட்ட நபர்கள் மத்தியில், மூன்றில் ஒரு நபர் கணினி அறிவு படைத்தவராகக் காணப்பட்டார். 

டிஜிட்டல் அறிவைக் கவனத்தில் கொண்டால், 5 - 69 வயதுக்கு உட்பட்டவர்களிடையே இந்தப் பெறுமதி 46% ஆக அதிகரித்திருந்தது. டிஜிட்டல் அறிவு என்பது, கணினி அறிவை விட, உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாக கண்டறியப்பட்டிருந்தது’.  

2016 - 2019 வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த கருத்துக்கணிப்புகளில் 3.2% அதிகரிப்பை அவதானிக்க முடிந்தது. இல்லங்களைப் பொறுத்த வரையில், கணினி அறிவு நகரமட்டத்தில் உயர்வாகப் பதிவாகியிருந்தது. கிராமம், பெருந்தோட்டங்கள் ஆகிய இடங்களில்,  இது குறைவாகக் காணப்பட்டது. மேல் மாகாணத்தில் உயர்ந்த கணினி அறிவும், கிழக்கு மாகாணத்தில் குறைந்த கணினி அறிவும் பதிவாகியிருந்தது.

2018ஆம் ஆண்டில் 26.8% ஆகப் பதிவாகியிருந்த இணையப் பாவனை என்பது, கடந்த ஆண்டில் 30.3% ஆக உயர்வடைந்து இருந்ததுடன், மின்னஞ்சல் பாவனையும் 2018ஆம் ஆண்டில் பதிவாகியிருந்த 10.2% இலிருந்து 11.9% ஆக, கடந்த ஆண்டில் உயர்வடைந்திருந்தது. டிஜிட்டல் அறிவுத் திறன் பெருமளவில், பல்கலைக்கழக கற்கைகளைத் தொடரவும், பாடசாலை வேலைகளை முன்னெடுக்கவும் பயன்படுத்தப்பட்டிருந்தன. 

ஏனைய உயர் பாவனைகளில், தனியார் பயிற்சிகளை முன்னெடுப்பது, தொழில் செயற்பாடுகள், குடும்பத்தார், நண்பர்களுடன் இணைந்திருப்பதற்கான சுய பாவனை போன்றவற்றில் பதிவாகியிருந்தன.  இலங்கையில் கணினி அறிவைப் பெற்றவர்களில் 6% ஆனவர்கள் மாத்திரமே அரசாங்க நிலையமொன்றிலிருந்து பயிற்சிகளைப் பெற்றிருந்தனர்.

2019ஆம் ஆண்டில், நாட்டின் 22% இல்லங்களில் ஆகக்குறைந்தது ஒரு கணினியேனும் காணப்பட்டது. இதில் ஐந்தில் ஒரு வீட்டில் கணினி அல்லது, மடிக்கணினி ஒன்று காணப்பட்டன. 

மேல் மாகாணத்தில், அதிகளவு கணினியும் மடிக்கணினியும் காணப்பட்டதுடன், ஊவா மாகாணத்தில் குறைந்தளவு பதிவாகியிருந்தது. கணினி அறிவு படைத்தவர்களின் எண்ணிக்கை, படிப்படியாக அதிகரித்திருந்ததை இந்த ஆய்வுப் பெறுபேறுகளினூடாக அவதானிக்க முடிந்தது. 

2019ஆம் ஆண்டில் கணினி அறிவு 30.8% ஆகப் பதிவாகியிருந்தது. க.பொ.த உயர் தரத்தையோ, அதை விட உயர்ந்த தகைமையையோ கொண்டிருந்தவர்களிடையே உயர்ந்தளவு கணினி அறிவு காணப்பட்டது. அத்துடன், ஆங்கில அறிவு படைத்தவர்கள் மத்தியிலும் உயர்ந்தளவு கணினி அறிவு பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .