2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உலக, இலங்கை பொருளாதாரங்களில் தாக்கம்

Editorial   / 2020 மார்ச் 19 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேகமாக பரவி வரும் COVID-19 வைரஸ் தொற்று காரணமாக, இலங்கையின் பொருளாதாரத்துக்கு, பல்வேறு துறைகளினூடாக பாதிப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர். குறிப்பாக உள்நாட்டு கேள்வியில் வீழ்ச்சி, சுற்றுலாத்துறை, வியாபாரம், பிரயாணம், ஏற்றுமதிகள், வெளிநாட்டு பண அனுப்புகைகள், தொழிற்றுறைசார் தாக்கங்கள் போன்றன பதிவாகும் எனக் குறிப்பிட்டுள்ளனர். 

COVID-19 வைரஸ் தொற்று பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சீனா, இத்தாலி, ஸ்பெய்ன் போன்ற நாடுகளின் நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு, அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை ஆராயும் போது, இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் காரணமாக, பொருளாதாரத்தில் எந்தவகையான பின்னடைவு ஏற்படும் என்பதை உடனடியாக தெரிவிக்க முடியாது என திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனாலும், இலங்கைக்கு மட்டும் இந்தப் பொருளாதார பின்னடைவு ஏற்படாது என்பதுடன், இந்த நிலை உலகளாவிய ரீதியில் காணப்படுவதால் முழு உலகுக்கும் பொருளாதார ரீதியில் பின்னடைவை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.  

எதிர்பார்க்கப்படும் பொருளாதார பின்னடைவு, மொத்த தேசிய உற்பத்தியில் 0.1 அல்லது 0.2 இழப்பை ஏற்படுத்தும் என்றும், இதன் பெறுமதி அமெரிக்க டொலர்கள் 9.1 பில்லியன் முதல் 18.2 பில்லியன் வரை அமைந்திருக்கும் எனவும் எதிர்வுகூறப்பட்டிருந்தது. 

சீனாவுடனான இலங்கை கொண்டுள்ள பொருளாதார தொடர்புகள் நேரடியாகப் பாதிக்கப்படும் என்பதுடன், பெருமளவான நுகர்வோர் பொருள்கள், முதலீட்டு பொருள்கள், இடையீட்டு மூலப்பொருள்கள் போன்றவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

இலங்கையில் காணப்படும் மொத்த நிறுவனங்களில் அரைப்பங்குக்கும் அதிகமானவை, இதனால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் விற்பனைகள் 20 - 60 சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். 

தொலைத்தொடர்பாடல்கள், வலு அடிப்படையிலான உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்த நிலை இதுவரையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, ஏனெனில் செலவு கட்டுப்பாடு, சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சி போன்றன இதற்கு ஏதுவாக அமைந்திருந்தன. 

2019 நவம்பர், 2020 ஜனவரி மாதங்களில் வரிக்குறைப்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நுகர்வோர் மத்தியில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. 

வேகமாக பரவும் COVID-19 ஐ அரசாங்கத்தால் வெற்றிகரமாக விரைவாக கட்டுப்படுத்த முடிந்தால், அவர்களால் மத்திய கால அடிப்படையில் பொருளாதார மீட்சியை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். தனியார் நிறுவனங்களை பொறுத்தமட்டில் அரசாங்கத்தால் விடுமுறை அறிவிக்கப்பட்ட காலப்பகுதியிலும், பெரும்பாலான நிறுவனங்கள் தமது ஊழியர்களை வீடுகளில் இருந்தவாறே பணியாற்றுமாறு பணித்துள்ளன. இதனால் வெளியிடங்களில் நடமாட்டத்தை குறைக்க முடியும் என்பதுடன், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்பது அந்நிறுவனங்களின் எதிர்பார்ப்பு என்பதுடன், வியாபார நடவடிக்கைகளையும் தடங்கலின்றி முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என கருதுகின்றன. 

உலகளாவிய ரீதியில் பொருளாதாரம் மந்தமடைவதுடன், இலங்கையின் ஆடைகள், சேவைகள் ஏற்றுமதித் துறை,  அதனுடன் தொடர்புடைய சரக்கு கையாளல் துறை போன்றவற்றை பாதிக்கும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் பொருளாதாரம் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளன என்பதை அந்நாடுகளின் பங்குச்சந்தைகளின் மூலமாக அவதானிக்க முடிகின்றது. அனைத்து பங்குச்சந்தைகளும் சரிவான பெறுமதியை பதிவு செய்துள்ளன. இலங்கையில் கடந்த வாரம் மூன்று தடவைகள் பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் இடை நிறுத்தப்பட்டதுடன், இவ்வாரம் பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்தக் கொடிய கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, அடுத்த காலாண்டில் இலங்கையின் ஏற்றுமதி 25 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக ஆடை ஏற்றுமதி 2020இன் இரண்டாம் காலாண்டில் 750 மில்லியன் அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சியடையும் என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையால் மதிப்பிடப்பட்டுள்ளது. 

ஏற்​ெகனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ள மூலப்பொருள்கள் இரு மாதங்களுக்கு மாத்திரமே போதுமானவையாக அமைந்துள்ளதாக ஏற்றுமதித் துறை ஏற்ெகனவே அறிவித்திருந்தது. 

போதியளவு இறக்குமதி மூலப்பொருள்கள் கையிருப்பில் இன்மை,  கொள்வனவாளர்களிடம் இருந்து போதியளவு கேள்வி இன்மை போன்ற காரணங்களால் தமது தொழிற்சாலைகளை உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மூடியவண்ணமுள்ளனர் என, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்தின் அளவும் இந்த வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்படும். குறிப்பாக இலங்கையர்கள் அதிகளவில் பணியாற்றும் தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் இந்த வைரஸ் தாக்கம் மோசமாக அமைந்துள்ளது. இதனால் அந்நாடுகளிலும் தடைகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,அங்கு பணியாற்றுவோரும் சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் இலங்கைக்கு உடனடியாக பணத்தை அனுப்பக்கூடிய நிலையில் இருக்கமாட்டார்கள் என அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார். 

திறைசேரியின் ஆரம்பகட்ட மதிப்பீடுகளின் பிரகாரம், இலங்கைக்கு 2019ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்களால் அனுப்பப்பட்ட தொகை 6.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. 

இலங்கையின் சுற்றுலாத் துறை தனது வருமானத்தில் 30 சதவீதம் வரை இழக்கக்கூடும் என திறைசேரி மதிப்பிட்டுள்ளது. COVID-19 பரவல் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பெருமளவு வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இலங்கையின் பிரதான சுற்றுலா நாடுகளாக சீனா மற்றும் ஐரோப்பா போன்றன காணப்படும் நிலையில், இந்த இரு நாடுகளும் வைரஸ் தாக்கத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்நாடுகளைச் சேர்ந்தவர்கள் தமது சுற்றுலா திட்டங்களை உடனடியாக திட்டமிடமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

உள்நாட்டு ஆடைத்தொழிற்துறை வருமானம் சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சியடையக்கூடும்.  

தேயிலை ஏற்றுமதியை பொறுத்தமட்டில் ஈரான், சீனா ஆகிய நாடுகள் இலங்கையின் பிரதான தேயிலை இறக்குமதி நாடுகளாக திகழ்ந்த நிலையில், வைரஸ் தாக்கம் காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளாக இந்த இரு நாடுகளும் திகழ்கின்ற நிலையில், இந்த இரு நாடுகளும் இலங்கையின் தேயிலை இறக்குமதியை இடைநிறுத்தியுள்ளன. இதன் காரணமாக தேயிலை விலைகள் சுமார் 40 சதவீத சரிவை பதிவு செய்துள்ளன. மேலும், தேயிலை ஏற்றுமதி வருமானத்தில் 520 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .