2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

உள்நாட்டு மருந்துப் பொருட்கள் தேவையில் 50% ஐ உள்நாட்டில் உற்பத்தி செய்யத் திட்டம்

S.Sekar   / 2021 மார்ச் 05 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் உள்நாட்டு மருந்துப் பொருட்கள் தேவையில் 50% ஐ உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் (SLPMA) தெரிவித்துள்ளது. 300 க்கும் அதிகமான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதனூடாக வருடாந்தம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகையை சேமிப்பதற்கும், 100 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானமீட்டவும், 2030 ஆம் ஆண்டளவில் வருடாந்தம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அந்தப் பெறுமதியை அதிகரிக்கவும் உள்நாட்டு மருந்து உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இலங்கையின் முதலாவது மருந்துப் பொருட்கள் உற்பத்தி நிலையம் 1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்நாட்டு மருந்துப் பொருட்கள் உற்பத்தியில் 65 வருட பூர்த்தியை இலங்கை கொண்டாடுகின்றது என ஸ்ரீ லங்கா மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் (SLPMA) அண்மையில் அறிவித்துள்ளது. தற்போது SLPMA அங்கத்துவத்தைப் பெற்ற பத்து உள்நாட்டு தனியார் துறை மருந்து உற்பத்தியாளர்கள் சுகாதார அமைச்சின் உத்தரவாதமளிக்கப்பட்ட கொள்வனவு திட்டத்தின் கீழ் மருந்துகளை உற்பத்தி செய்வதுடன், அரச வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுகளுக்கான மருந்துகளின் 24% தேவையை இந்த உற்பத்திகள் மூலம் பூர்த்திசெய்கின்றனர். இதனூடாக இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகையில் 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருடாந்தம் சேமித்துக் கொள்ளக்கூடியதாக உள்ளது.

2014 ஆம் ஆண்டில் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின்கீழ் சுகாதார அமைச்சு மற்றும் தொழிற்துறை அமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்ட உத்தரவாதமளிக்கப்பட்ட கொள்வனவு திட்டத்தின் (GBBA) கீழ் 88 அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் தற்போது உள்நாட்டு மருந்துப் பொருட்கள் உற்பத்தியாளர்களினால் உற்பத்தி செய்யப்படுவதுடன், உள்நாட்டு அத்தியாவசிய மருந்துத் தேவையின் 15%க்கு அதிகமான பகுதியை நிவர்த்தி செய்கின்றது. 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதி வாய்ந்த மருந்துப் பொருட்களை வருடாந்தம் ஏற்றுமதியும் செய்கின்றன.

சுகாதார அமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்ட முதலாவது அரச-தனியார் பொதுப் பங்காண்மையாக இந்த கொள்வனவுத் திட்டம் அமைந்துள்ளது. இந்தப் பங்காண்மையினூடாக, 6 வருட காலப்பகுதியில், தேசத்துக்கு நேர்த்தியான பெறுபேறுகள் கிடைத்துள்ளது. உத்தரவாதமளிக்கப்பட்ட கொள்வனவு திட்டத்தினூடாக, உள்நாட்டு மருந்துப் பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு தமது ஆய்வு மற்றும் அபிவிருத்தி செயன்முறைகளை மேம்படுத்திக் கொள்ள ஊக்கம் கிடைத்துள்ளதுடன், புதிய தயாரிப்புகளை தொடர்ச்சியாக புத்தாக்கம் செய்யும் வகையிலும் அமைந்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு பங்களிப்பு செய்யும் சகல உற்பத்திப் பகுதிகளும் தேசிய மருந்துப் பொருட்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் (NMRA) வழங்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் சிறந்த உற்பத்தி சான்றிதழைப் (GMP) பெற்றுள்ளதுடன், சில உற்பத்திப்பகுதிகள் EU GMP – ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறந்த உற்பத்தி செயன்முறை சான்றிதழை பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. இதனூடாக இலங்கையின் மருந்து உற்பத்திகள் ஐரோப்பிய சந்தைகளுக்கு பிரவேசிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .