2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஊழியர் சேமலாப நிதியப் பணத்தை பங்குச்சந்தையில் முதலிடச் சம்மதம்

Editorial   / 2018 நவம்பர் 28 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊழியர் சேமலாப நிதியத்தின் பணத்தை, கொழும்பு பங்குச்சந்தையில் தொடர்ந்தும் முதலீடு செய்வது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளும் சந்திப்பொன்று அண்மையில் தொழிற்சங்கங்கள், தேசிய ஊழியர் ஆலோசனை சம்மேளனம், இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் மத்தியில் இடம்பெற்றது.   

கொழும்பு பங்குச்சந்தையில், ஊழியர் சேமலாப நிதிய பணத்தை முதலீடு செய்வது தொடர்பில் முழுமையாக விளக்கங்களை பெற்றுத்தருமாறு கோரி, மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கத் தலைவர் வசந்த சமரசிங்க மேற்கொண்டிருந்த கோரிக்கைக்கிணங்க, இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி. இந்திரஜித் குமாரசுவாமி கலந்து கொண்டு, ஊழியர் சேமலாப நிதியத்தின் பணத்தை முதலீடு செய்வது பற்றிய விளக்கங்களை வழங்கியிருந்தார்.  

சாதாரணமாக ஊழியர் சேமலாப நிதிய பணம் அரசாங்க முறிகளில் பெருமளவு முதலீடு செய்யப்படுகிறது. சிறிதளவு தொகை மாத்திரமே பங்குச்சந்தையிலும் வங்கிகளின் நிலையான வைப்புகளிலும் மேற்கொள்ளப்படுகிறது.

ஆனாலும், 2010 - 2013 வரையான காலப்பகுதியில் கொழும்பு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நட்டமீட்டும் நிறுவனங்களின் பங்குகளின் மீது மேற்கொள்ளப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக கொழும்பு பங்குச்சந்தையில் ஊழியர் சேமலாப நிதிய பணத்தை முதலீடு செய்வது இடைநிறுத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கொழும்பு பங்குச்சந்தையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு பங்குச்சந்தை நிர்வாகிகள் கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.  

கொழும்பு பங்குச்சந்தை முதலீடுகள் கவர்ச்சிகரமானவையாக அமைந்துள்ளன. கடுமையான விதிமுறைகளும் நடைமுறையில் உள்ளன. குறிப்பாக S&P Top 20 சுட்டியைச் சேர்ந்த பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளலாம் என, கொழும்பு பங்கு முகவர்கள் சம்மேளனத்தின் தலைவர் 
ஆர். அபேவர்தன தெரிவித்தார்.  

இருந்த போதிலும், தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கொழும்பு பங்குச்சந்தையில் முதலீடு செய்யக்கூடிய தொகை மொத்த பெறுமதியில் 4.23 சதவீதம் என்பதை பேண தாம் இணங்குவதாகவும், மாறாக 8ஆக உயர்த்த வேண்டுமாயின் முறையான முற்காப்பு பொறிமுறைகளை வெளிப்படுத்த வேண்டும் என, தொழிற்சங்கத்தின் தலைவர் சமரசிங்க குறிப்பிட்டார்.  

இதனைத் தொடர்ந்து இரு வார காலப்பகுதியினுள் கொழும்பு பங்குச் சந்தையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பான முழு அறிக்கையை தொழிற்சங்கங்களுக்கு பெற்றுக் கொடுக்க இலங்கை மத்திய வங்கி இணங்கியிருந்ததுடன், ஒவ்வொரு ஆறு மாத காலப்பகுதியிலும் மீளாய்வு கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவும் இணங்கியுள்ளது.  

அத்துடன், வெளிப்படைத் தன்மையைப் பேணுவதற்கு, கொழும்பு பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும் பண பெறுமதி தொடர்பான விளக்கங்கள் மற்றும் விதிமுறைகளை மத்திய வங்கியின் இணையத்தளத்தில் பிரசுரிப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .