2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஏப்ரலில் நாட்டின் ஏற்றுமதி வீழ்ச்சி: ஆடை ஏற்றுமதித் துறை பெரும் பாதிப்பு

ச. சந்திரசேகர்   / 2020 மே 31 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் மாதத்துக்கான ஆடை ஏற்றுமதிகள், 65 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 277.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது. கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, பெருமளவான ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தமை காரணமாக, இந்தப் பெறுமதி, வரலாற்று ரீதியான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை வெளியிட்டிருந்த தரவுகளில் காண முடிந்தது.

2019 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், 772.57 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆடை உற்பத்திகள், ஏற்றுமதி செய்யப்பட்டிருந்ததுடன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 64.91 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்து, 277.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது. இதன் பிரகாரம், 2020ஆம் ஆண்டின் ஏற்றுமதி வருமானத்தை, 10.75 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்குக் குறைத்துள்ளது. ஏற்கெனவே எதிர்வு கூறியிருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில், இது 42 சதவீதக் குறைப்பாகும்.

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தவிசாளர் பிரபாஷ் சுபசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ''நாட்டில் கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக, ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தமையின் காரணமாக, இந்த ஏற்றுமதி வீழ்ச்சியை ஏப்ரல் மாதத்தில் அவதானிக்க முடிந்தது'' என்றார்.

ஏப்ரல் மாதத்தில், நாட்டின் மொத்த  ஏற்றுமதியைப் பொறுத்தமட்டில் ஆடை ஏற்றுமதித் துறை, பெருமளவு வீழ்ச்சியைப் பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 82 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து, 64.91 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.

தேயிலை ஏற்றுமதி, 2019ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 21 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து, 78.37 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.

இறப்பர் உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி, 53 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 55.37 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.

தெங்கு உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி, 35.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து, 27.88 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.

கடலுணவு ஏற்றுமதி 72.37 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து, 6.26 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.

ஏப்ரல் மாதத்தில், உணவு, பானங்கள் ஏற்றுமதியிலும் பெருமளவு வீழ்ச்சியை அவதானிக்க முடிந்தது.

2019ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 44 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்திருந்தது. வாசனைத் திரவியங்கள் 24சதவீதத்தாலும் இலத்திரனியல், மின் சாதனங்கள் 63 சதவீதத்தாலும் பெற்றோலிய பொருள்கள் 63 சதவீதத்தாலும் இரும்புசார் உற்பத்திப் பொருள்கள் 49 சதவீதத்தாலும் வீழ்ச்சியை பதிவு செய்திருந்தன.

எவ்வாறாயினும், மரக்கறி பயிர்ச்செய்கை மூலப்பொருள்கள், மரக்கறி உற்பத்திகள், மஞ்சள், அரேகாவிதைகள், இஞ்சி, குங்கிலியம், வெங்காயம், உடனடித் தேயிலை, தென்னந்தும்பு, அத்தியாவசிய எண்ணெய்கள், சிரட்டைக் கரி, சிறு கிழங்கு, பயறு, நீர்த்துப்பூசணி, பப்பாசி, சேதன இரசாயனம், இயற்கை இறப்பர் போன்றன, 2019ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், உயர்ந்த ஏற்றுமதியைப் பதிவு செய்திருந்தன.

நடப்பு ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 26 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து, 2,853 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், இந்தப் பெறுமதி 3,884.28 மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்டது.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், வியாபார வெளிக்களச் செயற்பாடுகள், நிர்மாணம், நிதிச் சேவைகள், சரக்கு கையாளல்கள், ஆரோக்கிய நல சுற்றுலாத்துறை போன்ற சேவைகள் சார் ஏற்றுமதி வருமானம், முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த 1,381 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் 1,030 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது என, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மதிப்பிட்டுள்ளது.

மேலும், உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவிய சூழலில், ஜனவரி முதல் ஏப்ரல் வரையான நான்கு மாத காலப்பகுதியில், நாட்டின் மொத்த ஏற்றுமதி வீழ்ச்சிக்கு, உலகின் நுகர்வு வீழ்ச்சியடைந்தமை காரணமாக அமைந்துள்ளதாகவும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

''ஏற்றுமதி தொடர்பில், நாட்டின் ஏற்றுமதியாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில், ஏற்றுமதி அபிவிருத்திச் சபை உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் கொவிட்-19 பரவல் காரணமாகப் புதிய சந்தைகளையும் புதிய பொருள்களுக்கான தேவைகளையும் இனங்கண்டு, அவற்றுக்கேற்ற வகையில் நாட்டின் ஏற்றுமதிசார் உற்பத்தித் துறையை ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ளது'' என, சுபசிங்க மேலும் குறிப்பிட்டார்.

இதன் ஓர் அங்கமாக, நாட்டின் ஆடை ஏற்றுமதித் துறை, 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான பிரத்தியேக பாதுகாப்பு அங்கிகளுக்கான (PPE) ஓடர்களைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை அறிவித்துள்ளது.

இந்த அங்கிகளை உற்பத்தி செய்யும் 33க்கும் அதிகமான தொழிற்சாலைகளிலிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தயாரிப்புகளை, விரைவில் ஏற்றுமதி செய்யக்ககூடியதாக இருக்கும் எனக் கணிப்பிட்டுள்ளது.

''கொவிட்-19 தொற்றுப் பரவி வரும் சூழலில், 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான ஓடர்களை இலங்கை பெற்றுள்ளது. இந்தப் பாதுகாப்பு அங்கிகளை உற்பத்தி செய்வதில் நாட்டின் 33 க்கும் அதிகமான தொழிற்சாலைகள் ஈடுபட்டுள்ளன. இந்தப் பெறுமதி ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை விரைவில் எய்தும் என, நாம் எதிர்பார்க்கின்றோம்'' என, இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் சஞ்ஜய மொஹோத்தல தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டில், இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 11.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது. இதில், 5.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆடை ஏற்றுமதி மூலம் பெறப்பட்டிருந்தது. நாடளாவிய ரீதியில், சுமார் 300 ஆடைத் தொழிற்சாலைகளில் 300,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிவதுடன், ஆடை உற்பத்தித் தொழிற்றுறையுடன் மறைமுகத் தொழில் வாய்ப்புகளினூடாகச் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், தமது வாழ்வாதாரத்தைப் பேணி வருகின்றனர்.

உலகளாவிய ரீதியில், ஆடை உற்பத்தித்துறையில் கொவிட்-19 தொற்றுப் பரவல் என்பது, பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விநியோகத் தொடர்களையும் பாதித்துள்ளது. குறிப்பாக நாடுகளின் எல்லைப் பகுதிகள் மூடப்பட்டுள்ளமையால், இலங்கையின் ஆடைத் தொழிற்றுறையைச் சேர்ந்த நிறுவனங்களும் போதியளவு மூலப்பொருள்கள் இன்மையால், பாதிப்பை எதிர்நோக்கி உள்ளதாக சஞ்ஜய மேலும் தெரிவித்தார்.

உலகப் புகழ்பெற்ற ஆடை வர்த்தக நாமங்களுக்கு, பெறுமதி சேர்க்கப்பட்ட, உயர் தரம் வாய்ந்த, உயர் விலை, உயர் மட்ட ஆடைகளை இலங்கை உற்பத்தி செய்கின்றது.

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, உலகளாவிய ரீதியில், அநேக மக்களுக்கு விலை உயர்ந்த ஆடைகளைக் கொள்வனவு செய்வது என்பது, சவால்கள் நிறைந்த விடயமாக அமைந்திருக்கும். குறிப்பாக, உலகப் பொருளாதாரம் என்பது சவாலை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், பெருமளவானோர் நிலைபேறான மீளப் பயன்படுத்தக்கூடிய ஆடைகளை எதிர்பார்ப்பார்கள். எனவே, ஆடை உற்பத்தி, ஏற்றுமதியில் ஈடுபடும் நிறுவனங்கள், முறையான மாற்று உற்பத்திகள், முறைகள், சந்தைகளை இனங்காண வேண்டியுள்ளது என, சஞ்ஜய தொடர்ந்து தெரிவித்தார்.

''எமது பிரதான ஆடை ஏற்றுமதி நாடுகள் ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பாவை மய்யமாகக் கொண்டுள்ளன. தற்போதைய தொற்றுப் பரவல், இந்தப் பிராந்தியங்களை அதிகளவு பாதித்துள்ளமையால், இந்த இரு கண்டங்களும் தமது உலக விநியோகத் தொடரை மட்டுப்படுத்தியுள்ளன. இலங்கையைப் பொறுத்தமட்டில், எமக்கு அண்மைய நாடான இந்தியா மூலப்பொருள்களை உற்பத்தி செய்கின்றது. பங்களாதேஷ், குறைந்த செலவிலான ஆடை உற்பத்தியை மேற்கொள்கின்றது. இலங்கை, உயர் செலவிலான ஆடை உற்பத்திகளை மேற்கொள்கின்றது. இந்த நாடுகள் அனைத்தும், ஒரே பிராந்தியத்தைச் சேர்ந்தவை. சார்க் பிராந்திய நாடுகளுக்கிடையே, சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் காணப்படுகின்றன. ஆடைத் தொழிற்றுறைக்கு இது உண்மையில் சிறந்த வாய்ப்பாகும்'' என, சஞ்ஜய மேலும் தெரிவித்தார்.

''ஆடை உற்பத்தித் துறைக்கு அவசியமான மூலப்பொருள்களை, உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்காக ஏறாவூர் பகுதியில் மூலப்பொருள்களைத் தயாரிக்கும் ஆடைப் பூங்காவை நிறுவும் நடவடிக்கைகளை, இலங்கை முதலீட்டுச் சபை துரிதப்படுத்தி உள்ளது. இந்தப் பூங்காப் பகுதியை நிறுவுவதற்கு நாம் சில நாடுகளின் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம். அவர்களின் ஈடுபாடு, சாதகமானதாக அமைந்துள்ளது. இந்த ஆடைப் பூங்காவில் செயற்கை, இயற்கை துணிகள் உற்பத்தி செய்யப்படும்'' என, சஞ்ஜய மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X