2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஐரோப்பிய ஒன்றியத்தால் பின்தங்கிய சமூகங்களுக்கு நீர், கழிவறை, தூய்மை வசதிகள்

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘சூழல், போஷாக்கு அபிவிருத்தியை ஏற்படுத்துவதனூடாக சமூகங்களுக்கு உதவுதல்’ எனும் நான்காண்டுத் திட்டத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதி உதவிகளை வழங்குவதுடன், ADRA UK உடன் ADRA இலங்கை, OXFAM ஆகியன தேசிய சமூக நீர் விநியோக திணைக்களம் (DNCWS) மற்றும் சுகாதார அமைச்சு உடன் இணைந்து நுவரெலியா மாவட்டத்தின் டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் கழிவறைகள், நீர் வடிகட்டல் அலகுகளைப் புதுப்பிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தன.

நாளாந்தம் 500 நோயாளர்களுக்குச் சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் இந்தப் புதிய கழிவறைகள், சிறுவர்களுக்கு நட்பானதாகவும் அங்கவீனமானவர்களுக்கு இலகுவில் அணுகப்படக் கூடியவையாகவும் அமைந்துள்ளன. இந்தத் திட்டத்தினூடாக, சுகாதாரம், தூய்மை தொடர்பான 28 விழிப்புணர்வுத் திட்டங்கள், சுகாதார அமைச்சு ஊழியர்களுக்குப் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. 

இலங்கையின் நுவரெலியா, மொனராகலை,  மாத்தளை மாவட்டங்களை உள்வாங்கி ஊவா, மத்திய மாகாணங்களைச் சேர்ந்த கிராமி, பெருந்தோட்டச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியில் சுகாதாரம், போஷாக்கு, தூய்மை, கழிவறை பயன்பாட்டை மேம்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு, இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தத் திட்டத்தினூடாக, சுமார் 300,000 குடும்பங்கள் அனுகூலம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதுடன், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக இந்தத் திட்டம் அமைந்திருக்கும். ஆளுகை தொடர்பான புதிய முறைகளை அறிமுகம் செய்வது, நீர், கழிவறை, தூய்மை (WASH) தொடர்பான பணிகளை நிர்வகிப்பதற்குப் புதிய வழிமுறைகளை அறிமுகம் செய்வது போன்றன இந்தத் திட்டத்தின் பிரதான இலக்காக அமைந்துள்ளது. இதில் WASH வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான அணுகுமுறைகளை மேம்படுத்தல், பிரத்தியேகத் தூய்மையை மேம்படுத்தல், தூய்மைச் செயன்முறைகள் போன்றன அடங்கியுள்ளன. 

வைத்தியசாலைக்கு விஜயம் செய்யும் போது ஹட்டன், ஷனன் தோட்டத்தின் ஜி.ரி. பிரிவைச் சேர்ந்த 60 வயது நிரம்பிய ராசம்மா, டிக்கோயா வைத்தியசாலைக்குத் தற்போது விஜயம் செய்யும் போது, கழிவறை வசதிகளைப் பயன்படுத்துவதில் அசௌகரியங்களை எதிர்நோக்குவதில்லை என தெரிவித்தார். “நான் நோய் வாய்ப்படும் போது, வைத்தியசாலையின் கழிவறை வசதிகளைப் பயன்படுத்துவதில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் பல இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. கழிவறைகளிலிருந்து வெளிப்படும் துர்நாற்றம், அருகிலுள்ள சிகிச்சைப் பகுதிகளிலும் வீசியது. ஆனாலும், தற்போது இந்த நிலை மாறி, வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. எனது சர்கரக் கதிரையில் கழிவறையினுள் செல்லும் வசதி கூட ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எனது உதவியாளரின் சிறியளவிலான உதவியுடன் என்னால் கழிவறை வசதிகளைப் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது. இந்த வசதிகள் உண்மையில் வரவேற்கத்தக்கன” என்றார். 

அரசாங்கத்தின் கிராமிய நீர், கழிவறை விநியோக கொள்கையை (RWSS) நடைமுறைப்படுத்துவதற்கு ‘நீரைத் தொடர்புபடுத்தியாகப் பயன்படுத்துவது’ எனும் பிரத்தியேகமான வழிமுறை இந்தத் திட்டத்தில் அடங்கியுள்ள மற்றுமொரு விசேட உள்ளம்சமாகும். இந்த வழிமுறையினூடாக, சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பெருந்தோட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட, மாகாணம், உள்ளூராட்சி மட்ட அரசாங்க அதிகாரிகளை ஒன்றிணைத்து, ஈடுபடுத்தும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

இந்த வழிமுறையினூடாக, சமூகக் கட்டமைப்புகளில் ஆளுகை முறைகள் வலிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், WASH தொடர்பில் அரசாங்கம், சமூகங்கள், இதர பங்காளர்கள் இணைந்து செயலாற்ற முடியுமாயின், தமது சமூகத்தில் காணப்படும் இதர முக்கியமான விடயங்கள் தொடர்பிலும் இணைந்து செயலாற்றுவதற்கு வழியேற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. 

இந்தத் திட்டத்துக்கு ADRA வழங்கும் பங்களிப்பு தொடர்பில் ஸ்ரீ லங்காவின் நிகழ்ச்சிப் பணிப்பாளர் பிரபூக் பண்டாரதிலக கருத்துத் தெரிவிக்கையில், “ஐரோப்பிய ஒன்றியத்துடன் நாம் இணைந்து செயலாற்றும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இலங்கையில் நிலைபேறான அபிவிருத்தி ஏற்படுத்தப்படுவதற்கு இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு காண்பிக்கும் அர்ப்பணிப்பு வரவேற்கத்தக்கது. தேசிய மட்டத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடன் இணைந்து செயலாற்றுவது போன்ற நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுப்பதுடன், எமது செயற்பாடுகளுக்கு இவை பெரும் பங்களிப்பாக அமைந்துள்ளன. அபிவிருத்திப் பணி என்பது, சவால்கள் நிறைந்தது என்பதுடன், உண்மையான பங்காண்மைகளின் ஊடாக, இதற்கு முகங்கொடுக்கக் கூடியதாக இருக்கும். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயலாற்ற வாய்ப்புக் கிடைத்தமையை நாம் பெரும் பேறாகக் கருதுகின்றோம்” என்றார். 

ஏ.டி. இமன்லதா எனும் விதவை, அவரின் பிறப்பிலிருந்து அங்கவீனமான மகன் இசுரு பெதும் போன்றவர்களுக்கும் இந்தத் திட்டத்தினூடாக உதவிகள் வழங்கப்பட்டிருந்தன. குறிப்பாக, அங்கவீனமான இசுருவுக்கு நலன்விரும்பிகளின் உதவியுடன் சக்கரக் கதிரை ஒன்று அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்த போதிலும், வீட்டில், தற்காலிகக் கழிவறைக்கு சக்கரக் கதிரையில் பயணிக்கக்கூடிய வசதிகள் எதுவும் காணப்படவில்லை. இந்நிலையில், சுகாதார மற்றும் போஷாக்கு அமைச்சின் / சமூக அடிப்படையிலான தலைவர்களின் பரிந்துரையின் பிரகாரம், இந்தத் திட்டத்தினூடாக அங்கவீனர்களுக்கு நட்பான கழிவறை வசதி மற்றும் நீர் விநியோக வசதி போன்றன ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன. 

மாகாண சுகாதார அமைச்சு ஊழியர்களின் திறனைக் கட்டியெழுப்புவது தொடர்பில் இந்தத் திட்டத்தினூடாகக் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. மனநிலை, திறன்கள், அறிவு அபிவிருத்தி தொடர்பில் இந்தப் பயிற்சிகள் கவனம் செலுத்தியிருந்தன. ‘பொதுச் சுகாதார ஊழியர்களுக்கான சுகாதாரத்துறை இடர் முகாமைத்துவம்’ எனும் தலைப்பில் பயிற்சி முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், இதைச் சுகாதார அமைச்சின் இடர் தயார்நிலை மற்றும் பதிலளிப்பு பிரிவு வடிவமைத்திருந்தது. 

பொகவந்தலாவை சுகாதார அமைச்சின், பொதுச் சுகாதார மருத்துவமாது ஈ.ஜி.என். சனிகா, இந்தத் திட்டத்தினூடாகத் தமது திறனை மேம்படுத்தியிருந்தார். “கடந்த 15 வருடங்களாகப் பொதுச் சுகாதார மருத்துவமாது எனும் நிலையில் பணியாற்றி வருகின்றேன். ஆனாலும், நான் பங்கேற்ற முதலாவது பயிற்சி இதுவாகும். இந்தப் பயிற்சியின் பிரயோக தன்மையை நான் வரவேற்கின்றேன். முன்னர் இந்தப் பயிற்சிக்கு என்னால் பங்கேற்க வாய்ப்பு கிடைத்திருந்தால், இந்தப் பயிற்சியினூடாக அறிந்து கொண்ட பல விடயங்களை, என்னால் முன்பிருந்தே பின்பற்றக்கூடியதாக இருந்திருக்கும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .