2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கடனட்டைகள் கவனிக்க வேண்டியவை

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 நவம்பர் 26 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எவ்வளவுதான் கையிருப்பில் பணமிருந்தாலும், போதாதென்ற நினைப்புத்தான், நம்மில் பலருக்கும் நிச்சயமாக இருக்கும். இந்த எண்ணமும் நினைப்பும், ஒரு வியாபாரத்துக்கு அடித்தளமிட முடியுமெனின், அது கடனட்டை வியாபாரமாகத்தான் இருக்கும். 

ஆரம்பகாலங்களில் நம்மிடமுள்ள பணத்தின் அளவுகளுக்கு, நமது செலவுகளை மட்டுப்படுத்திக் கொண்டோம். சில காலங்களின் பின்பு, சேமிப்பின் வாயிலாக நமது மேலதிகத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள ஆரம்பித்தோம்.

இப்போது, சேமித்து, நமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவதை விடவும் இந்த அவசர உலகில் கடனுக்குப் பொருள்களையோ அல்லது சேவையையோ பெற்றுக்கொண்டு, அந்தக் கடனை, நமது சேமிப்பின் துணைகொண்டு அடைத்துக்கொண்டிருக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். இந்த இறுதி நிலைதான், நம்மிடையே, கடனட்டைகளை பிரபலபடுத்தியிருக்கிறது.  

இதன்காரணமாக, கடனட்டை பயன்பாடு என்பது, தவறானது என்றோ அல்லது அவசியமற்றது என்றோ அர்த்தமாகிவிடாது. கடனட்டை பயன்பாட்டை மிகவும் சிரத்தையுடனும் அவசியத் தேவைகளுக்கும் அதனது நேரடியான, மறைமுகமான சாதக, பாதக விடயங்களைத் தெரிந்துகொண்டு பயன்படுத்துவது தற்சமயத்தில் அவசியமே என்பதை, இது எடுத்துக் காட்டுகிறது.  

எனவே, ஒரு கடனட்டையைப் பயன்படுத்த விரும்புவராக நீங்கள் இருந்தால், பின்வரும் விடயங்கள் தொடர்பில் கவனமாக இருக்கவேண்டியது அவசியமாகிறது. அதுபோல, கடனட்டையைப் பயன்படுத்திக் கொண்டுள்ளவராக இருந்தால் இதை எல்லாம் கவனித்துக்கொண்டு உள்ளீர்களா? என்பதையும் மறுபரீசீலனை செய்துகொள்ளுங்கள்.  

கடனட்டை வட்டி வீதங்கள்

கடனட்டைக்கான வட்டிவீதங்கள் வருடாந்த வட்டிவீதத்தின் அடிப்படையில்தான் கணிப்பிடப்படுகிறது. சில கடனட்டை வழங்குநர்கள் நிலையான வட்டிவீதங்களையும் சில வழங்குநர்கள் நெகிழ்வான வட்டிவீதங்களையும் அறவிடும் முறையைக் கொண்டிருப்பார்கள்.

இது தொடர்பில்தான், மிக அதீத அவதானம் தேவையாக இருக்கும். கடனட்டைக்கு அறவிடப்படும் வருடாந்த வட்டி வீதங்கள் நிலையானதாகவுள்ளபோது, மாதாந்தம் நாம் கடனட்டையில் கொண்டுள்ள நிலுவைக்கான வட்டிவீதத்​ைத இலகுவாக கணிப்பிட்டுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

ஆனால், நெகிழ்வான வட்டிவீதம் அமைகின்றபோது, எதனை அடிப்படையாகக்கொண்டு வட்டிவீதங்களைக் கணிப்பிடுகின்றது என்பது தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும். இல்லையெனில், நீங்கள் கடனட்டையில் மேற்கொண்ட செலவீனத்தொகையைப் பார்க்கிலும், மிக அதிகமாக செலவிட வேண்டிவரும்.  

கடன் எல்லை

இது கடனட்டை வழங்குநர் ஒருவரால் உங்களுக்குச் செலவுசெய்யவென வழங்கப்படும் அதியுட்சமானக் கடனின் அளவு இதுவாகும். இந்தக் கடன் எல்லை, உங்களது வருமானம், கல்வித்தகமை போன்ற பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. பெரும்பாலும் கடன் வழங்குநர்கள் வழங்கும் கடன் எல்லையானது, உங்கள் வருமானத்திலும் அதிகமானதாகவே இருக்கும். வருடாந்தம் உங்களது செயற்பாடுகளுக்கு அமைவாக, உங்களுக்கு அறிவிக்காமலேயே, அந்தக் கடன் எல்லைகளை அவர்கள் உயர்த்தவும் கூடும். எனவே, இது தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டியது அவசியமாகும்.

உங்கள் வருமானத்திலும் பார்க்க அதிக கடன் எல்லை இருக்கிறதுதானே எனும் எண்ணத்தில், செலவுகளை மேற்கொள்ள பழகுவீர்களேயானால், அது உங்களை நிரந்தர கடனாளியாக்கிவிடும். எனவே, உங்களது கடனட்டை எல்லையை உங்களுக்கு ஏற்றால்போல, தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதுபோல, கடனட்டை வாயிலாக, நீங்கள் மேற்கொள்ளும் செலவீனங்கள் தொடர்பிலும் அவதானமாக இருங்கள்.  

செலவீனப் பழக்க வழக்கங்கள்

கடனட்டை ஒன்றை மிகத் திறமையாக பயன்படுத்தும் ஒருவருக்கும் கடனட்டை வழியாகவே கடனாளியாக மாறி, தனது வருமானத்தை முழுவதுமாகக் கடனட்டைக்கேச் செலுத்திக்கொண்டு உள்ளவர்க்கும் இருக்கக்கூடிய மிகப்பாரிய வேறுபாடே, அவர்களது இந்தச் செலவீன பழக்க வழக்கங்கள்தான்.   

நீங்கள் கடனட்டை ஒன்றுக்கு சொந்தக்காரர் ஆன பின்பு, கடனட்டை மூலமாகச் செய்யும் செலவீனங்களை, முறையாக குறித்த காலப்பகுதிக்குள் மீளசெலுத்துபவராக இருந்தால், கடனட்டையின் பாதகத் தன்மைகள் தொடர்பில் குறிப்பாக, வட்டிவீதங்கள் நீங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

நீங்கள் கடனட்டை தேர்வின்போது, வருடாந்த கட்டணங்கள் இல்லாத அல்லது குறைவானதும், கடனட்டை பணத்​ைத மீளச்செலுத்த அதிக நாள்கள் தரக்கூடியதுமான கடனட்டைகள் தொடர்பில் கவனம் செலுத்தினாலே போதுமானதாக இருக்கும்.  

ஆனால், கடனட்டை பயன்பாட்டு செலவீனங்களை முறையாகச் செலுத்த முடியாத ஒருவராக நீங்கள் இருப்பின் அல்லது உங்கள் ஒட்டுமொத்த செலவீனங்களுக்கும் கடனட்டையே பயன்படுத்துபவராக இருப்பின், கட்டாயம் கடனட்டை தொடர்பில் அனைத்தையும் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.

இதன்போது, கடனட்டையின் கடன் எல்லை , வட்டி வீதம், கடனட்டை தொடர்பிலுள்ள சலுகைகள் என அனைத்தையுமே கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகிறது. இல்லையெனில், கடனட்டையில் நீங்கள் மீதமாக வைக்கும் நிலுவைக்கான வட்டியே உங்களுக்கு மிகப்பெரும் தலைவலியாக அமைந்துகொள்ளக்கூடும்.  

அதுபோல, கடனட்டைகளை ஏதேனும் அவசரத் தேவைகள் ஏற்படும்போது மட்டும் பயன்படுத்துவபராக இருப்பின், முன்னமே கூறியதுபோல, குறைந்த வட்டி, குறைந்த கட்டணங்களைக் கொண்ட கடனட்டையைத் தேர்வு செய்வது போதுமானது.  

தண்டப்பணம், கட்டணங்கள்

கடனட்டை வழங்குநர்கள் குறைந்த வட்டிவீதமுள்ள கடனட்டைகள் என அறிவிப்புகளை செய்துவிட்டு, வெவ்வேறு வட்டி கட்டணங்களை விதித்து அதனூடாக தங்களது வருமானத்தை பெற்றுக்கொள்ளுபவர்களாக இருப்பார்கள்.எனவே, இது தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும்.

சாதரணமாக, கடனட்டை ஒன்றுக்கு வருடாந்த அங்கத்துவக் கட்டணம், நிலுவையை குறிப்பிட்ட காலத்தில் செலுத்தாதவிடத்து நிதி கட்டணங்கள் அறவிடப்படும். கூடவே, ஏதேனும் சர்வதேச கொடுக்கல்வாங்கல்கள் செய்திருப்பின், அதற்கான அரச வரிகளை உள்ளடக்கிய கட்டணமும் அறவிடப்படக்கூடும். இதுதவிர்த்து, வேறு ஏதேனும் கட்டணங்கள் அறவிடப்படுவதாகவிருப்பின், அதுதொடர்பில் அவதானமாக இருக்கவேண்டியது அவசியமாகும்.  

பெரும்பாலான கடனட்டை வழங்குநர்கள், நீங்கள் கடனட்டையூடாக திட்டமிடும் சில கடன்களுக்கு 0% வட்டிவீதமென விளம்பரப்படுத்துவார்கள். “அடடா! வட்டியில்லாமல், மாதம் மாதம் நாம் நமது கடனை செலுத்தினால் போதுமாக இருக்கும்போல” என நினைத்துகொள்ளுவோம்.

ஆனால், அதில் மறைமுகமாக ஒரு கட்டணத்தை உட்சேர்த்து கடனட்டை வழங்குநர் தனது வட்டிவீதத்தை உங்களிடமிருந்தே உங்களுக்கு தெரியாமல் வசூலித்து விடுவார். அந்தக் கட்டணத்தை “கையாளல் கட்டணம்” (Handling Charges) எனக் குறிப்பிடுவார்கள். எனவே, இவை தொடர்பில் எல்லாம் அவதானமாக இருக்கவேண்டும்.  

கடனட்டை நிலுவை

கடனட்டையில் மாதம் தோறும் சிறியதாகவோ, பெரியதாகவோ நிலுவையை கொண்டிருப்பதில் தவறில்லை. ஆனால், அந்த நிலுவைக்கு மாதம்தோறும் என்ன நடக்கிறது? அதற்கான நிதிக் கட்டணங்கள் எவ்வாறு அறவிடப்படுகிறது என அறிந்திருப்பது அவசியமாகும்.

பெரும்பாலும், சராசரி தின நிலுவையின் பிரகாரமே அறவிடப்படுவதாக இருக்கும். அதாவது, ஒவ்வொரு நாளுக்குமான நிலுவைக் கூட்டப்பட்டு, அவை உங்கள் கடனட்டை கூற்றுக்கான நாள்களால் வகுக்கப்பட்டு அதற்கு ஒரு நிச்சயிக்கப்பட்ட விகித அடிப்படையில், இந்தக் கட்டணங்கள் அறவிடப்படும்.

எனவே, நீங்கள் வங்கிக்கூற்று வரும் நாளுக்கு அண்மையாக செய்த செலவீனங்களுக்கு உள்ள கட்டணத்துக்கும், மாத ஆரம்பத்தில் செய்த செலவீனம் நிலுவையாகவுள்ளபோது அறவிடப்படும் கட்டணத்துக்கும் நிறையவே வேறுபாடு இருக்கும். இது தொடர்பில் அவதானமாக இருப்பதுடன், அதற்கேற்ப உங்கள் செலவீனங்களைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.  

இலங்கை மத்திய வங்கியின் அண்மையக்கால தரவுகளின் பிரகாரம்,   17,093,239 பேர் வரவட்டைகளைப் பயன்படுத்துவதுடன், 1,355,704 பேர் கடனட்டைகளைப் பயன்படுத்துபவர்களாக உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக பார்க்கின் சுமார் 18.4 மில்லியன் மக்கள் ஏதோ ஒரு வகையில் பணமில்லாக் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளுக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இந்த இலத்திரனியல் அட்டைகளின் பயன்பாட்டின் பிரகாரம், 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதிவரை, வங்கிகளிடம் மக்கள் பெற்றுள்ள ஒட்டுமொத்தக் கடன்தொகையின் அளவு, 77.7 பில்லியனாக உள்ளது. இது, ஒட்டுமொத்த சனத்தொகையில் 20 பேருக்கு ஒருவர் கடனட்டையைக் கொண்டிருப்பதைக் குறிப்பதுடன், சராசரியாக ஒரு கடனட்டையைக் கொண்டிருப்பவரின் கடனளவு 581,540 ரூபாயாக இருக்கலாம் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரது மீளசெலுத்தும் இயலுமை அடிப்படையில் கடன் நிலுவை அளவு மாறுபடக்கூடியதாக உள்ள நிலையில், சிலரது கடன் எல்லையின் அளவு மாதம்தோறும் எப்படியானதாக இருக்கும் என்ப​ைத நீங்களே கணிப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.  

எனவே, கடனட்டை பயன்படுத்த விரும்புவர்களும் சரி, கடனட்டை பயன்படுத்தி கொண்டிருப்பவர்களும் சரி, உங்கள் கடனட்டை பயன்பாட்டில் சரியான முடிவினை எடுப்பவர்களாக இருக்க வேண்டும். இல்லையெனில், அதன்மூலமாக ஏற்படக்கூடிய மிக அதீதமான பாதகவிளைவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .