2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கடனட்டையில் ஒழிந்திருக்கும் நன்மைகள்

Johnsan Bastiampillai   / 2020 ஒக்டோபர் 12 , மு.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அனுதினன் சுதந்திரநாதன்   

இந்த அவசர உலகில், கடனுக்குப் பொருள்களையோ, சேவைகளையோ பெற்றுக்கொண்டு, அந்தக் கடனை, நமது சேமிப்பின் துணைகொண்டு அடைத்துக்கொண்டிருக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். இந்த இறுதிநிலைதான், நம்மிடையே கடனட்டைகளைப் பிரபலப்படுத்தி இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில், கடனட்டைப் பயன்பாடு, தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றம் பெற்றிருக்கிறது. அப்படி, மாற்றம் பெற்றிருக்கும் கடனட்டை எனும் வில்லனுக்கு உள்ளும், சில நன்மைகள்  ஒழிந்திக்கின்றன.  

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் பிரகாரம், இலங்கையிலுள்ள 80%சதவீதமான மக்கள், தமது கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளுக்காகக் கடனட்டையையோ வரவட்டையையோ பயன்படுத்துகிறார்கள். மத்திய வங்கியின் அண்மைக்கால தரவுகளின் பிரகாரம், 17,093,239 பேர் வரவட்டைகளைப் பயன்படுத்துவதுடன், 1,355,704 பேர் கடனட்டைகளைப் பயன்படுத்துகின்றனர்.  

ஒட்டுமொத்தமாகப் பார்க்கின், சுமார் 18.4 மில்லியன் மக்கள் ஏதோவொரு வகையில் பணமில்லாக் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளுக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இத்தகைய இலத்திரனியல் அட்டைகளின் பயன்பாட்டின் பிரகாரம், 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதிவரை, வங்கிகளிடம் மக்கள் பெற்றுள்ள ஒட்டுமொத்தக் கடன்தொகையின் அளவு 77.7 பில்லியன் ரூபாயாக உள்ளது. இது, ஒட்டுமொத்த சனத்தொகையில் இருபது பேருக்கு ஒருவர், கடனட்டையைக் கொண்டிருப்பதைக் குறிப்பதுடன், சராசரியாக ஒரு கடனட்டையைக் கொண்டிருப்பவரின் கடனளவு 581,540 ரூபாயாக இருக்கலாம் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவரது மீளச்செலுத்தும் இயலுமையின் அடிப்படையில், கடன் நிலுவையின் அளவு மாறுபடக்கூடியதாக இருக்கும்.  

உண்மையில், கடனட்டைப் பயன்பாடு, பல்வேறு வகையில் நெருக்கடிகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் பயன்பாட்டைச் சரியாக உணர்ந்து பயன்படுத்திக் கொண்டால், அதுவும் முன்னேற்றமடைந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக, நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். 

எனவே, பல்வேறு தரப்பினரால் மோசமாக வகைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கடனட்டைகள் மூலம், அடைந்துகொள்ளக்கூடிய நலன்களையும் அதற்குப் பின்னால் ஒழிந்திருக்கக் கூடிய வணிக மூலோபாயங்களையும் பார்க்கலாம்.  

0% கடன் தவணைக் கொடுப்பனவு முறை 

கடனட்டைகள் மூலமாகக் கிடைக்கப்பெறும் மிக அதியுச்சமான நன்மைகளில் இதுவே முதன்மையானது. இலங்கையில் கடனட்டைகளை வழங்கும் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களுடன் இணைந்து, இந்தச் சேவையைத் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. 

இதன் மூலமாக, குறித்தவொரு பொருளை எந்தவித மேலதிக கட்டணமும் இல்லாமல் அல்லது, ஒப்பீட்டளவில் மிகக் குறைவான மேலதிக கட்டணத்தில் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக, தொலைகாட்சியையோ, குளிர்சாதனப்பெட்டியையோ கொள்வனவு செய்ய வேண்டுமென்றால், நமது மாதாந்த சேமிப்பையோ, மாதாந்த வருமானத்தின் ஒருபகுதியையோ முழுமையாகச் செலவிட்டு, இந்தப் பொருள்களைக் கொள்வனவு செய்ய வேண்டியிருக்கும். 

ஆனால், இந்தக் கடன் தவணை கொடுப்பனவு முறை மூலமாக, வேறெந்த மேலதிக கட்டணமுமில்லாமல் உங்களுக்குத் தேவையான பொருள்களை, உங்கள் வருமானத்தில் சுமையற்ற வகையில் கொள்வனவு செய்துகொள்ளக் கூடியதாக இருக்கும். சாதாரணமாக, நாம் கடனட்டைகளைப் பயன்படுத்தி, ஏதேனுமொரு பொருளைக் கொள்வனவு செய்து, அதற்கான மாதாந்தக் கட்டணத்தை, கடனட்டையில் பயன்படுத்திய பணத்தை மீளச்செலுத்த தவறின், அதற்காக அதிக வட்டிவீதத்தில், தண்டப்பணத்தைச் செலுத்த வேண்டியதாக இருக்கும்.  

எனவே, கடனட்டை வழங்கும் நிறுவனத்தால், இப்படியான சலுகைகள் வழங்கப்படும்போது, இதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முடியும். இதன்மூலமாக, மிகப்பெரும் செலவீனங்களை மாதாந்தம் செலுத்தக்கூடிய Easy Monthly Installment (EMI) முறையாக மாற்றிக்கொள்ள முடியும். இவ்வாறு, மாதாந்தத் தவணைக் கட்டணமாக மாற்றிக்கொண்ட பின்பு, மாதம்தோறும் தவணைத்திகதி பிந்தாமல் பணத்தைச் செலுத்த வேண்டியது அவசியமாகும்.இல்லையெனில், மீளவும் கடனட்டையின் மீளாக்கடன் பொறிக்குள் சிக்கிக் கொள்வீர்கள்.  

பண முற்பணவசதி 

கடனட்டைகளிலிருந்து உங்கள் அவசர தேவைகளுக்கு ATM வாயிலாக பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ஆம்! உங்கள் கடனட்டையைப் பயன்படுத்தி, உங்கள் கடன் எல்லையின் அளவின் 50% அவசரதேவைகளின் போது, பணமாகப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான சேவை வரி, வட்டி வீதம் ஆகியவை அறவிடப்படுகின்றபோதும், அவை கடனட்டையில் செலவீனங்களைச் செய்கின்றபோது, அறவிடப்படும் வரி, வட்டிவீதங்களைப் பார்க்கிலும் சிறிது அதிகமாகும். 

எனவே, கடனட்டைகளை வீணாகப் பயன்படுத்தி, தேவையற்ற கடன்சுமையை ஏற்படுத்திக்கொள்வதை விட, இந்த வகையில் கடனட்டையை வினைதிறனாக் பயன்படுத்திக்கொள்ள முடியும்.  

பண ஊக்குவிப்புகள் 

தற்போதைய நிலையில், பல்வேறு கடனட்டை வழங்கும் நிறுவனங்களும் புதிதாக வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக வழங்கிவரும் சலுகையாக இந்தப் பண ஊக்குவிப்பு முறை அமைந்துள்ளது. இந்தியாவில், ஏற்கெனவே பிரபலமான இந்தத் திட்டமானது தற்போது இலங்கையிலும் பிரபலமாகி வருகின்றது. 

குறிப்பாக, நீங்கள் ஏதேனுமொரு கடையில் பொருள்களை வாங்கும்போது, அந்தப் பொருளின் மொத்தப் பெறுமதியில், குறித்தவொரு சதவீதம் உடனடியாகவே மீளவும் உங்கள் கணக்கில் வைப்பிலிடப்படும். இதன்மூலமாக, குறித்த பொருளை குறைவான விலைக்கு வாங்க முடிவதுடன், உங்கள் கடனட்டையின் செலவீனங்களையும் குறைக்க முடியும். இந்த ஊக்குவிப்பு முறையானது, மேலே குறிப்பிட்ட வசதிகளுடன் ஒப்பிடுகையில் குறைவான பெறுபேற்றைக் கொண்டிருந்தாலும், இதன் மூலமாகவும் உங்கள் பணத்தைச் சேமிக்கக்கூடிய வசதிகள் உண்டு.  

இலவச பயணக் காப்புறுதிகள்

நீங்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்கின்றபோது, உங்கள் விசாவைப் பெற்றுக்கொள்வது உட்பட, தற்பாதுகாப்புக்காகப் பயணக் காப்புறுதிகளை பெற்றுக்கொள்வதும்  அவசியமாகிறது. இதற்காகப் பயணமுகவர்களை அணுகும்போது, பெரும்தொகையை செலவீனமாகச் செலுத்த வேண்டி வரும். ஆனால், நீங்கள் கடனட்டை ஒன்றைக் கொண்டிருக்கும்போது, முதலில், உங்கள் கடனட்டை வழங்கும் நிறுவனத்திடம் உங்கள், இலவச பயணக் காப்புறுதி தொடர்பில் விசாரித்து கொள்ளுங்கள். தற்போது, பெரும்பாலான கடனட்டை நிறுவனங்கள், தமது வாடிக்கையாளர்களுக்கு கடனட்டை மூலமாக, இலவச வெளிநாட்டு காப்புறுதித் திட்டங்களை வழங்கி வருகின்றன. இதன்போது, உங்கள் விமானச்சீட்டை, குறித்த கடனட்டையைப் பயன்டுத்திக் கொள்வனவு செய்தாலே போதுமானதாகும். இதன்மூலமாக,வெளிநாட்டுப் பயணத்தின்போது, நீங்கள் மிகப்பெரும் தொகையைச் சேமித்துக்கொள்ளக் கூடியதாக அமையும்.  

மேற்கூறியவை தவிரவும், கடனட்டைகளின் மேலதிக பயன்பாடு காரணமாக, குறித்தவொரு கடனட்டையில் நீங்கள் அதிக கடன்சுமையைக் கொண்டிருக்கின்றபோது, அதை மற்றுமொரு கடனட்டைக்குத் தவணைக் கட்டண முறை அடிப்படையில் மாற்றிக்கொள்ளும் வசதிகளும் உண்டு. இதன்போது, நீங்கள் கடனட்டைக்கு செலுத்தும் அதியுயர் வட்டிவீதத்திலும் பார்க்க, மிகக் குறைவான வட்டி வீதத்தையே செலுத்த வேண்டிவரும். 

கடனட்டை என்கிற வார்த்தையைக் கேட்டதுமே, நம்மில் பலருக்கு கடன், வட்டிவீதம், கடன்சுமை ஆகியவைதான் கண்ணெதிரே வந்துபோகும். ஆனால், இவற்றுக்கு அப்பால் கடனட்டைகளைச் சரிவரப் பயன்படுத்துவதால் பெற்றுக்கொள்ளக்கூடிய நன்மைகள் நமது கண்களுக்குத் தெரிவதில்லை. எதுவுமே, ‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்பதுபோல, கடனட்டையின் பயன்பாடும் அளவுக்கு மிஞ்சினால், நம் கழுத்தையிறுக்கும் கடன்காரன்தான். எனவே, எல்லாவற்றையும் அளவுடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .