2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காலத்துக்கு பொருத்தமான முதலீடுகளில் அரசாங்கம் கவனம் செலுத்துமா?

ச. சந்திரசேகர்   / 2020 மே 27 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கம், முதலீடுகளை எவ்வாறு தெரிவு செய்ய வேண்டும்?

இந்தத் தெரிவுகளின் போது, எந்த விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்?

ஏற்கெனவே மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிதி இருப்பை, எந்தவகையில் சிறப்பாகப் பயன்படுத்த முடியும்?

உயர்கடனில் நாடு காணப்படும் நிலையில், மேலும் கடன் சுமையை அதிகரிக்காமல், எவ்வாறு சிறந்த தீர்மானங்களை மேற்கொள்ளலாம்?

இவை, அண்மைக் காலமாக இடம்பெறும் பொதுவான கலந்துரையாடல்களில் அதிகளவு கேட்கப்படும், பேசப்படும் கேள்விகளாக அமைந்துள்ளன.

குறிப்பாக, கிரிக்கெட் மைதானங்கள், புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் நிர்மாணம் போன்றன தொடர்பில், கடந்த வாரங்களில் பேசப்பட்டிருந்தமை, பொருளாதார வல்லுநர்களின் மத்தியில் பரவலாக விமர்சிக்கப்பட்டிருந்தது.

கொவிட்-19 தொற்றுப் பரவல் என்பது, அபிவிருத்திக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் அளவிடக்கூடிய சர்வதேச மனித அபிவிருத்தி, உலகில் அளவிட முடிவதுடன், 1990ஆம் ஆண்டில், இந்தக் கொள்கை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) இனால் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டில் முதன் முறையாக வீழ்ச்சியைப் பதிவு செய்யும் என எச்சரித்திருந்தது.

2007 – 2009 காலப்பகுதியில், பதிவாகியிருந்த சர்வதேச நிதி நெருக்கடி அடங்கலாக, கடந்த 30 வருடங்களில் உலகம் பல இடர்களை எதிர்நோக்கியிருந்த போதிலும், சர்வதேச மனித அபிவிருத்தி என்பது, வருடா வருடம் அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தது. ஆனாலும், கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாகச் சுகாதாரம், கல்வி, வருமானம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், மனித அபிவிருத்தி வீழ்ச்சியைப் பதிவு செய்யக்கூடும்.

மனித அபிவிருத்தியுடன் தொடர்புடைய அடிப்படைப் பகுதிகள், வீழ்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் இதன் தாக்கம் உணரப்படும். கொவிட்-19 தொற்றுக் காரணமாக உலகளாவிய ரீதியில் 300,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், உலக தனிநபர் வருமானம், இந்த ஆண்டில் நான்கு சதவீதத்தால் வீழ்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், பாடசாலைக் கல்வியை, ஆரம்பநிலைக் கல்வியைப் பெறும் பிள்ளைகளில், 60 சதவீதமானவர்கள் போதியளவு இணைய வசதியின்மை காரணமாக, கல்வியைத் தொடர முடியாத நிலையில் இருப்பதாக UNDP மதிப்பிட்டுள்ளது. 1980ஆம் ஆண்டுகளின் பின்னர், இந்தநிலை சர்வதேச ரீதியில் மோசமாகப் பதிவாகியுள்ளமை, இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான தாக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, மனித அபிவிருத்தியில் பாரியளவு வீழ்ச்சியைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தப் பின்னடைவுகளின் கணிப்பீட்டின் போது, பெண்களில் தங்கியுள்ள பொருளாதார வீழ்ச்சி, கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, பெண்களின் வருமானம், சேமிப்பில் ஏற்படும் வீழ்ச்சி, அவர்களின் தொழில் பாதுகாப்பின்மை, சுகாதாரம், பாலின வன்முறை போன்றவற்றின் காரணமாக எழும் சிக்கல்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில், மனித அபிவிருத்தி என்பது, அதிகளவு வீழ்ச்சியடைந்து காணப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. செல்வந்த நாடுகளுடன் ஒப்பிடுகைளில், இந்த நாடுகளில் தொற்றுப் பரவல் காரணமாக எழக்கூடிய சமூக, பொருளாதாரப் பின்னடைவுகளைத் தாங்கிக் கொள்வதில், சிக்கல்கள் காணப்படும். எனவே, இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள், தூர நோக்கத்துடன் சிந்திக்க வேண்டியது முக்கியமானதாகும். உதாரணமாக, வீதி நிர்மாணம் போன்ற செயற்பாடுகளுக்கு, இக்கால கட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு மாறாக, குறைந்த செலவில் இணையப் பயன்பாட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதனூடாக, கல்வி, வியாபார வாய்ப்புகளை, மக்கள் மத்தியில் அதிகளவு மேம்படுத்தக் கூடியதாக இருக்கும். இதற்கான செலவும் குறைவானதாக அமைந்திருக்கும்.

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக எழுந்துள்ள இடர் நிலையைத் தணித்து, புதிய வழமை என்பதைக் கட்டியெழுப்புவதற்கு சூழலுக்கு நட்பான, பாலின சமத்துவமான, நல்லாட்சியுடன் கூடிய உடனடிச் செயற்பாடுகள், ஐக்கிய நாடுகள் சபையால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த இடர் நிலையின் சிக்கலைத் தவிர்ப்பதற்கு, ஐந்து முன்னுரிமை அடிப்படையிலான படிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ன.

சுகாதாரக் கட்டமைப்புகள், சேவைகளைப் பாதுகாத்தல், சமூகப் பாதுகாப்பைக் கட்டியெழுப்பல், தொழில்களைப் பாதுகாத்தல், சிறு-நடுத்தரளவு வியாபாரங்கள் மற்றும் தொழிலாளர்களின் வருமானத்தைப் பாதுகாத்தல், அனைவருக்கும் பொருந்தக்கூடிய வகையில், பாரியளவு பொருளாதாரக் கொள்கைகளை செயற்படுத்தல், சமாதானம், நல்லாட்சி, நம்பிக்கை ஆகியவற்றை ஊக்குவித்து, சமூக ஒருமைப்பாட்டை ஏற்படுத்தல் போன்றன அவற்றில் அடங்கியுள்ளன.

மேற்படி விடயங்களை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்திகளில், இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். பாரம்பரிய முறையில், உட்கட்டமைப்பு சார் அபிவிருத்தி என்பது இலங்கைக்கு கடந்த காலங்களில் பெருமளவு அனுகூலமாக அமைந்திருக்கவில்லை என்பதுடன், இவற்றில் தொடர்ந்தும் கவனம் செலுத்துவதைத் தற்போதைக்குத் தவிர்த்துக் கொள்ளலாம். வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் ஆகியவற்றை ஊக்குவித்து, பொதுமக்கள் மத்தியில் ஆதரவைப் பெற வேண்டிய தருணமாக இது அமைந்துள்ளது. சகல முதலீடுகளும் நாட்டுக்குப் பொருத்தமானதாக அமைந்திருக்காது என்பதை, கொள்கை வடிவமைப்பாளர்கள் உணர்ந்து செயலாற்ற வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X