2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கொரோனா தாக்கமும் தொடக்கநிலை வணிகங்களும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 ஜூலை 21 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போன்றதொரு நாட்டில், தொடக்கநிலை வணிகங்களின் ஆரம்பமானது, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து வரவேற்கத்தக்க வகையிலும் பிரமிப்பைத் தரக்கூடியதாகவும் அமைந்திருக்கிறது.

அமெரிக்காவின் சிலிக்கன்வெளியை ஒத்தவகையில், இந்து சமூத்திரத்தில் இலங்கை தொடக்கநிலை வணிகங்களுக்கு ஒரு சாதகமான இடமாக உருப்பெற்று வந்துகொண்டிருக்கிறது. 

உண்மையில், கொரோனா தாக்கம் பல்வேறு வணிகங்களுக்கும், வணிகர்களுக்கும் பெரும் இடையூறாக மாறியிருக்கின்ற நிலையில், இந்த இடர்காலத்தைப் பயன்படுத்திக்கொண்டுகூட நிறைய தொடக்கநிலை வணிகங்கள், இலங்கையில் உருப்பெற்றதை நாம் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். ஆனால், அவ்வாறு குறுங்காலத்தில் உருவாக்கம் பெற்று, மக்களின் வரவேற்பைப் பெற்ற வணிகங்கள் நீண்டகால நிலைத்திருத்தல் தன்மையைக் கொண்டிருக்கிறதா என்கிற கேள்விக்குறியை ஏற்படுத்தியிருக்கின்றன.  

கொரோனா தாக்கமானது, வணிகங்கள் மீது நிதி ரீதியாக மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது, தொடக்கநிலை வணிகங்களையும் விட்டு வைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். சாதாரணமான நிலையிலேயே, தொடக்கநிலை வணிகங்களுக்கு வங்கிகளும் சரி, நிதி நிறுவனங்களும் சரி போதுமான நிதி ரீதியான ஒத்துழைப்பை வழங்குவதில்லை. அதிலும், இப்படியான சூழ்நிலை ஏற்படுகின்றபோது, தொடக்கநிலை வணிகத்துறையானது தனித்துவிடப் பட்டதுபோல பல இன்னல்களை சந்திக்கிறது என்பதே உண்மை.   

உதாரணமாக, உங்களிடம் ஒரு தொழில் முயற்சியைச் செய்வதற்கான சிந்தனை (idea) இருக்கிறது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் இருக்கிறது. ஆனால், அதனை ஆரம்பித்துக்கொண்டு நடத்த, போதிய நிதியில்லை. இந்நிலையில், உங்களுடைய திட்டங்களை நம்பியோ, உங்களுடைய கல்வித் தகைமைகளை நம்பியோ உங்களுக்கு நிதியியல் சார் உதவிகளை வழங்க எத்தனை நிறுவனங்கள் தயாராகவிருக்கின்றன என சிந்தித்துப் பாருங்கள். 

இந்த ஆரம்ப நிதியைப் பெற, நீங்கள் எத்தனைக் கஷ்டங்களைத் தாண்ட வேண்டியிருக்குமெனச் சிந்தித்து பாருங்கள். ஒருவேளை, அதனை நீங்கள் பெற்றுக்கொண்டாலும், கொரோனா போன்ற எதிர்பாராத நிலைமைகளில், உங்களுக்கு உதவக்கூடிய ஏதேனும் நிதி நிறுவனங்கள் இருக்கிறதா எனச் சிந்தித்துப் பாருங்கள். இந்த ஆரம்ப முடக்கநிலைதான், பல புத்தாக்கச் சிந்தனைகொண்ட தொடக்கநிலை வணிகங்கள் இலங்கையில் உருப்பெறாமல் போகவும், நிலைத்திருக்க முடியாததாகவும் இருக்கிறது. இந்தநிலையில், மாற்றத்தைக் கொண்டுவரத்தக்க வகையில், அரசாங்கமானது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது  

2019ஆம் ஆண்டில், இலங்கையின் எழுத்தறிவு வீதம் 91.7% ஆகவும் இலத்திரனியல் சார் அறிவு வீதம் 44.3% ஆகவும் இருந்திருக்கிறது. அத்துடன், தொலைபேசிச் சேவையைப் பாவிப்பார்களின் எண்ணிக்கை, 32.9 மில்லியனாக இருந்திருக்கிறது.

 இது, நாட்டின் மொத்த சனத்தொகையில் 150% ஆகும். அதுபோல, இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 11.8 மில்லியனாக இருந்திருக்கிறது. இது, மொத்தச் சனத்தொகையில் 54%ஆக இருக்கிறது. இவை அனைத்துமே, கொரோனா இலங்கையில் பரவ முன்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளாகும். இந்த ஆய்வுகளின் தொடக்கநிலை வணிகங்களைத் தொடங்க கிடைக்கப்பெறுகின்ற நிதி தொடர்பான ஆய்வானது அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.  

வணிகமொன்றைப் புதிதாக ஆரம்பிக்கின்றவர்களில் 51% ஆனவர்கள், தங்களுடைய சொந்த சேமிப்பை ஆதாரமாகக் கொண்டே ஆரம்பிக்கிறார்கள். இவர்களுக்கு நிதியியல் நிறுவனங்கள் மூலமாக வெறும் 8%ஆன பங்களிப்பே கிடைக்கிறது. இந்த 8%உம், மிகப்பெரும் நிறுவனங்களின் உறுதுணையுடன் ஆரம்பிக்கப்படும் புதிய வணிகங்களுக்கே கிடைக்கிறது என ஆய்வறிக்கை சொல்லுகிறது. அப்படியானால், சாதாரணமான ஒருவர், தனது சிந்தனையை வணிகமாக்கிக்கொள்ள இந்த அரசாங்கமும் நிதியியல் நிறுவனங்களும், எந்தவொரு பங்களிப்பையும் வழங்கவில்லை என்பதையே இது காட்டி நிற்கிறது.   

கொரோனாவுக்குப் பின்னதாக அதிகளவில் வாய்ப்புகளைக் கொண்ட தொழில் முயற்சியாக, தொடக்கநிலை வணிகங்கள் இருக்கின்றன. அதுபோல, அதிகளவிலான நிதியியல் பிரச்சினைகளையும் மூடுவிழா காணும் பாதிப்பைக் கொண்ட துறையாகவும் இது இருக்கிறது.  

உதாரணத்துக்கு, இலத்திரனியல் சேவைகளைப் பயன்படுத்தப் பின்நின்றவர்கள், அதன் பாதுகாப்புத்தன்மை தொடர்பில் கேள்வி எழுப்பியவர்கள், தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் பின்தங்கி நின்றவர்கள் எல்லோருமே, இன்று கொரோனா காலப்பகுதியில் விரும்பியோ விரும்பாமலோ, இந்த மாற்றங்களை ஏற்க ஆரம்பித்து விட்டார்கள். 

இன்று அவர்கள் இதன் பயன்பாட்டை உணர ஆரம்பித்து விட்டார்கள். இதனால், புதிய வணிகங்களான தொடக்கநிலை வணிகங்களுக்கு வரவேற்பும் சந்தை வாய்ப்பும் அதிகரித்துள்ளது.  

ஆனால், இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துகின்றபோது தொடக்கநிலை வணிகங்கள் இந்த இடர்நிலைமையில் பல்வேறு சிக்கல் நிலைமைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.  

உதாரணமாக, நீங்கள் இணைய வழியாகப் பொருட்களை விற்பனை செய்கின்ற வணிகத்தைக் கொரோனாவுக்கு முன்பிருந்து நடத்தி வருகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். உங்களுக்குச் செலவுகள் போக, போதுமான இலாபம் கிடைத்துக் கொண்டிருக்கிறது.கொஞ்சம் ஊழியர்களைப் பயன்படுத்தி வணிகத்தை விரிவுபடுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். இந்தச் சமயத்தில், கொரோனா தாக்கம் ஏற்படுகிறது. முதல் மாதம் எல்லோரைப் போலவும் உங்களது சேவைகளும் வருமானமும், கட்டாயம் பாதிக்கபப்ட்டிருக்கும். அதற்குப் பின்னதாக, இணையவழியாகப் பொருட்கள், சேவைகளை வாங்க மக்கள் எத்தனிக்கின்றபோது, உங்களுக்கான வாய்ப்புகளும் உருவாகத் தொடங்கும். 

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளவும் உங்கள் இணையத்தை மக்கள் நாடச் செய்யவும், நீங்கள் சந்தைப்படுத்துதல் செலவுகளைச் செய்யவேண்டியதாக இருக்கும். ஏற்கெனவே, ஊழியர் செலவுகள், பொருட்களுக்கான செலவுகள் என்பவற்றுடன், இந்தச் செலவும் உங்களுக்கு ஒரு சுமையாக வந்துசேரும். வாடிக்கையாளரை அதிகரிக்காமல், வணிகத்தைக் கொண்டு நடத்த முடியாதென்கிற நிலைமையில், நீங்கள் சந்தைப்படுத்தல் போன்ற செலவுகளுக்கு முன்னுரிமை வழங்கிக்கொண்டு, ஊழிய செலவுகளுக்கு வங்கியை அல்லது நிதியியல் நிறுவனங்களை நாடுகிறீர்கள். 

ஆனால், அங்கு உங்கள் வணிகம் புதியது மற்றும் இடர்கள் (Risk) கூடியது என்கிற அடிப்படையில், நிதியியல் தேவைகள் மறுக்கப்படுகிறது என வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நிலை என்ன ஆகும், உங்கள் ஊழியர்கள் நிலை என்ன ஆகும்?  

இந்த ஓர் உதாரணம் போதும், இன்றைய சூழ்நிலையில், பெரும்பாலான தொடக்கநிலை வணிகங்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினையை தெளிவப்படுத்துவதற்கு..! 2019ம் ஆண்டின் ஆய்வுகளின்படி, இலங்கையில் 47.6%ஆன புத்தாக்க வணிகங்கள் இணையவழி பொருட்கள், சேவைகளை விற்பனை செய்கின்ற வணிகங்களாக இருக்கிறது. 19.1%ஆனவை இலத்திரனியல் நிதியியல் சேவைகளை வழங்குவதாக இருக்கிறது. 13.1% மென்பொருள்சார் புத்தாக்க வணிகங்களாக இருக்கிறது. 7.1%ஆனவை பொறியியல் சார்ந்ததாகவும் 4.8%ஆனவை கணக்கீட்டு புத்தாக்க வணிகங்களாவும் இருக்கிறது. இவை தவிர்ந்து 8.4%ஆனவை ஏனைய துறைசார் புத்தாக்க வணிகங்களாக இருக்கிறது.  

எனவே, இந்த வணிகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஏற்படவிருக்கும், குறுங்கால மற்றும் நீண்டகால பாதிப்புகள் தொடர்பில் அரசு கவனஞ்செலுத்த வேண்டியது அவசியமாகிறது. 

தற்போதைய நிலையில் நிலவிவரும் இறுக்கமான இறக்குமதி கட்டுப்பாட்டு நடைமுறைகள், நிதியியல் ரீதியான சேவைகளைப் பெறுவதில் தொடக்கநிலை வணிகங்களுக்கு இருக்கின்ற கட்டுப்பாடுகள். 

அரச நிர்வாகத்தில் காணப்படும் தாமதத்தினால் இழக்கப்படும் வாய்ப்புகள், இறுக்கமான வரி சுமைகள் என்பனவும் இந்த வணிகத்தின் நிலைத்திருத்தலுக்கு மிகப்பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.   

தொடக்கநிலை வணிகங்களை நம்பி இலங்கையில் நேரடியாகவோ மறைமுகமாவோ, சுமார் 1 மில்லியன் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். 

எனவே, அவர்களின் எதிர்கால வாழ்க்கையையே கருத்தில்கொண்டும் நாட்டின் எதிர்கால அபிவிருத்தியை கருத்திற்கொண்டும் இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதியும் தங்கள் இறுக்கமான கொள்கை கட்டமைப்பில் மாற்றங்களை செய்யவேண்டியது அவசியமாக இருக்கிறது இல்லாவிட்டால் கொரோனா ஏற்படுத்தப்போகும் பொருளாதார பாதகங்கள் மிகப்பாரதூரமாக இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .