2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கொரோனா வைரஸும் இலங்கையரின் நிதியியல் அறிவும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 ஜூன் 01 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வாரங்களில், கொரோனா வைரஸுக்குப் பின்னரான இலங்கையின் பொருளாதார நிலை எப்படியானதாக இருக்கப் போகின்றது? இது தொடர்பில், தனிநபர் செய்ய வேண்டியவைகள் என்ன? கொரோனா வைரஸுக்குப் பின்னரான இலங்கையின் பங்குசந்தை, அதில் பங்குகொள்ளும் முறைகள் என்பவற்றைத் தொடர்ச்சியாகப் பார்த்திருக்கிறோம்.

இந்த வாரத்தில், மிக முக்கியமாகப் பேசப்பட வேண்டிய, நாங்கள் பேச மறுக்கின்ற நிதியியல் அறிவுசார்ந்த, மிக முக்கிய விடயங்களைப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

கல்வியறிவு, எழுத்தறிவு போன்று, நிதியியல் சார்ந்த அறிவும் கூட, இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக மாறியிருக்கிறது.

இந்த நிதியியல் சார்ந்த அறிவானது, தனித்து எங்களுடைய பணத்தை எப்படி நிர்வாகிப்பது, செலவு செய்வது என்பவற்றோடு மட்டும் தொடர்புபட்ட, மிக இலகுவான ஒன்றாக எடுத்துக் கொள்ளாதீர்கள். மாறாக, ஒரு தனிநபரின், வீட்டின், நாட்டின் பொருளாதாரம், அரசியல் மாற்றங்களுக்கு இந்த நிதியியல் அறிவானது, இன்றியமையாததாக இருக்கின்றது.

இன்றையநிலையில், எங்கள் ஒவ்வொருவரினதும் நிதியியல் சார்ந்த அறிவு, எப்படி இருக்கிறது என்பதையும் அதை வளர்த்துக் கொள்வதன் மூலமாக, எத்தகைய மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டிய காலகட்டத்தில், நாங்கள் இருக்கின்றோம்.

நிதியியல் அறிவு என்றால் என்ன ?

'நிதியியல் அறிவு' என்கிற சொற்றொடரை ஓர் அந்நியச் சொல்லாகப் பார்ப்பதை, நாங்கள் முதலில் தவிர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். இந்தப் பத்தியைத் தொடர்ந்து வாசிக்க முதல்,  ஒருசில நிமிடங்களை ஒதுக்கி, நிதி (Finance) என்கிற சொல்லை நினைவுபடுத்தும்போது, எவ்வகையான எண்ணங்கள் உங்களது நினைவுக்கு வருகிறது எனச் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் வருமானம், செலவுகள், சேமிப்புகள், முதலீடுகள் மட்டுமே நினைவுக்கு வருமாக இருந்தால், நீங்கள் ஓரளவுக்கு நிதியியல் சார் திறனுடன் இருப்பதை நினைத்துப் பெருமை அடையலாம்.

ஆனால், அது மட்டுமே போதுமான ஒன்றல்ல. இந்த நிதியியல் தாக்கங்கள், எப்படி உங்கள் வாழ்க்கையில் ஆரம்பித்து, உங்களைச் சார்ந்தவர்கள் உட்பட நாட்டின் பொருளாதாரத்தின் வழியாக, உங்கள் அரசியல் வரை, தாக்கத்தைச் செலுத்துகின்றது போன்ற அடிப்படை விடயங்களை அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. அப்போதுதான், உங்கள் பொருளாதாரம் சார்ந்த முடிவுகளை எடுக்கின்றபோது, அரசியல் சார்ந்த தெரிவுகளை மேற்கொள்ளுகின்றபோது, 'குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல்' இல்லாமல், பரந்த சிந்தனை அடிப்படையில், முடிவுகளை எடுக்கக் கூடியதாக இருக்கும்.

இலங்கையின் கல்வியறிவானது 92 சதவீதமாக இருக்கிறது. நாங்கள், சிறு குழந்தைகளாகப் பாடசாலைகளில் படிக்கின்ற காலத்திலிருந்தே, இந்தச் சதவீதமானது, இந்த மட்டத்திலேயே இருக்கின்றது. இது பாராட்டக்கூடிய ஒரு விடயமாகும். அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து,  இலங்கையின் இந்தச் சதவீதமானது, மிக உயரிய இடத்திலிருப்பதுடன், ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கிறது. ஆனால், எங்களின் நிதியியல் சார் அறிவு, எந்தநிலையில் இருக்கிறது என்பதை அறிந்து இருக்கிறீர்களா? இந்தச் சதவPதமானது, நிச்சயம் உங்களை சிந்திக்க வைக்குமென்பதில் ஐயமில்லை.

2018ஆம் ஆண்டின் தரவுகளின் பிரகாரம், இலங்கையின் நிதியியல் அறிவானது 35 சதவீதமாக அறியப்பட்டு இருக்கிறது. தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் இந்தச் சதவீதமே உயர்வாக இருப்பதென்பது, நம்மை நினைத்துப் பெருமைப்படுவதா, இல்லை, தெற்காசிய வலயத்தின் நிலையை எண்ணி வருந்துவதா, என்கிற நிலையை உருவாக்கி இருக்கிறது.

ஒரு நாட்டின் எழுத்தறிவுச் சதவீதமானது, உச்சமாக இருக்கின்ற நிலையில், அவர்களின் நிதியியல் அறிவானது, இத்தனை குறைவாக இருப்பதென்பது மிக அபாயகரமான நிலையைக் காட்டி நிற்கிறது. எழுதுவதற்கும், வாசிப்பதற்குமான அடிப்படையில் சிறந்து விளங்குகின்ற நாங்கள், நிதியியல் சார்ந்த அடிப்படை விடயங்களான, வங்கிக் கணக்கை ஆரம்பிப்பது எப்படி, வங்கிப் படிவங்களை நிரப்புவது எப்படி, கடனட்டைக் கூற்றுக்களை அறிந்துகொள்ளுவது எப்படி, வங்கி வட்டி வீதம் தொடர்பிலான அறிவு, ATMகளைப் பயன்படுத்துவது எப்படி என்பவை தொடர்பில், தடுமாறிக் கொண்டிருப்பதென்பது, எங்களுடைய கல்விக்கும் எங்களுடைய வாழ்வியலுக்கும் இடையில் இருக்கின்ற மிகப்பெரும் இடைவெளியைக் காட்டி நிற்கின்றது.

அப்படியாயின், இந்த நிதியியல் அறிவென்பது என்ன என்பதை, மிக எளிமையாக அறிந்துகொள்ளுவது அவசியமாகின்றது. இன்று, எங்களுடைய வாழ்க்கையில் தினம்தோறும் பயன்படுத்துகின்றதும்  தவிர்க்க முடியாத ஒன்றாகவும் இருப்பது பணம் ஆகும். இது, எவ்வாறு செயற்படுகின்றது என்பது தொடர்பான அறிவாக, இது இருக்கின்றது.

இது, பணத்தை எவ்வாறு உழைப்பது, எவ்வாறு சேமிப்பது, எவ்வாறு முதலீடு செய்வது, எவ்வாறு செலவு செய்வது போன்ற தனிநபர் இயலுமைகளைப் பரிட்சிப்பதாக இருக்கின்றது. மேலும், நிதியியல் மூலங்களை எவ்வாறு கையாளுகின்றோம், வங்கிகள் முதல் நிதியியல் நிறுவனங்கள் வழங்கும் சேவைகளைப் பூரண அறிவோடு பயன்படுத்துகின்றோமா, எங்களுடைய அரசியல், சமூகம் சார்ந்த முடிவுகளை எடுக்கின்றபோது, நிதியியல் சார்ந்த பிரச்சினைகளையும் கவனத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கின்றோமா, என்பவற்றிலும் நிதியியல் அறிவென்பது தங்கியிருக்கின்றது.

நிதியியல் அறிவிலான குறைபாட்டுக்கு என்ன காரணம்?

இந்தியா போன்ற நாடொன்றில், வங்கிச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளுவதிலேயே, மிகப்பெரும் பின்னடைவு காணப்படுகிறது. உதாரணமாக, இந்தியாவின் கிராமங்கள், குக்கிராமங்களில் மின்சார வசதிகளே இல்லாத நிலையில், வங்கிகளின் சேவையென்பது சாத்தியமற்றதாக இருக்கின்றது. இதனால், அடிப்படையான சேமிப்புத் தொடர்பிலும் கூட மக்கள் போதிய அறிவைக் கொண்டிருப்பதில்லை.

ஆனால், இலங்கையின் நிலை முற்றிலுமே மாறுபட்டது. இலங்கையர் ஒருவருக்கு, நிதியியல் சார் தேவைகளை, மிக இலகுவாக அணுக முடியும். 'தடுக்கி விழுந்தாலே' வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கொட்டிக்கிடக்கின்ற நாடாக, நமது நாடு இருக்கின்றது. இருந்தபோதிலும், நமது நிதியியல் சார் அறிவானது, மிகமோசமான மட்டத்தில் இருப்பதென்பது, நமக்கு மிகப்பெரும் அபாயநிலையைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது. இந்தநிலைக்கு மிகமுக்கியமான காரணம், மிகமோசமான நிதியியல் கல்விநிலையாகும்.

உதாரணமாக, உங்களுடைய பாடசாலைக் கல்விநிலையில், எப்போது நீங்கள் நிதிசார் கல்வியைக் கற்க ஆரம்பித்து இருப்பீர்களென நினைவுபடுத்திப் பாருங்கள். தரம் 8-10 காலப்பகுதியில், உங்களுக்கான வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிப்பது தொடர்பிலும், வங்கியில் சேமிப்புப் படிவமொன்றை நிரப்புவது தொடர்பிலும் படித்து இருப்பீர்கள். தரம் 11இல், வணிகக்கல்விப் பாடத்தில் நிதியியல் சார்ந்த அடிப்படைகளைப் படித்திருக்க வாய்ப்புக் கிடைத்திருக்கும். இதுவும் பாடசாலைகளில் விருப்பத்தேர்வுப் பாடமாக அமைகின்ற சந்தர்ப்பத்தில், உங்கள் வாழ்க்கையில் நிதியியல் தொடர்பான அடிப்படை விடயங்களை அறிவதற்கான வாய்ப்புக்களே இல்லாமல்ப் போயிருக்கும்.

92 சதவீதமான எழுத்தறிவு சதவீதத்தை, நமக்குத் தருகின்ற இலங்கையின் கல்வித் திட்டமானது, அதில் பத்தில் ஒரு பங்கைக் கூட, நமக்கு நிதியியல் கல்வியில் தரவில்லை என்பதுதான் உண்மையாக இருக்கிறது. இதனால்தான், இலங்கையின் கல்வித் திட்டமானது தொழிலாளர்களை உருவாக்குகின்றதே தவிர, முயற்சியாளர்களை உருவாக்குவதில்லை என்கிற குற்றச்சாட்டைக் கொண்டிருக்கிறது.

வருமானத்தை எப்படி உழைக்க வேண்டும், அந்த வருமானத்தில் சேமிப்பையும் செலவையும் எவ்வாறு செய்ய வேண்டுமென்கிற அனைத்துமே, வீடுகளில் தொடங்கி, பாடசாலையில் சொல்லித் தரப்பட வேண்டியது அவசியமாகிறது. ஆனால், முன்னைய தலைமுறைக்கு இது தொடர்பில் போதிய அறிவின்மை காரணமாக, இது வீடுகளில் சொல்லித் தரப்படாமலே போய்விடுகிறது. அதற்குப் பிறகு, பாடசாலைகளில் இந்தத் துறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படாததன் காரணமாக, மிகப்பெரும் தொழிற்றுறைகளில் சிறந்து விளங்குகின்ற கல்விமான்கள் கூட, இது தொடர்பில் தடுமாற்றத்தைச் சந்திப்பதை கண்கூடாகப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

இலங்கையர்களின் நிதி முகாமைத்துவம்

நாட்டின் பொருளாதாரம், அரசியல், இதர காரணிகளைக் கொஞ்ச நேரத்துக்கு மறந்துவிடுங்கள். ஒரு சாதாரண மனிதனாக, உங்களுடைய வீட்டிலேயே, உங்களுடைய நிதியியல் செயற்பாடுகள் எப்படி இருக்கின்றன எனச் சிந்தித்து பாருங்கள். அப்போதே, உங்களுடைய நிதியியல் குறைபாடுகளை அடையாளம் காணக்கூடியதாக இருக்கும்.

2016ஆம் ஆண்டின், இலங்கை சார்ந்த தனிநபர் வருமானம், செலவீனம் தொடர்பான அறிக்கை, பல அதிர்ச்சிகரமான பெறுபேறுகளை, நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

இலங்கையர் ஒருவரின், சராசரி மாதாந்த வருமானமாக 62,237 ரூபாய் இருப்பதுடன், அவர்களின் சராசரி மாதாந்த செலவீனமாக 54,999 ரூபாய் இருக்கின்றது. ஆனால், 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, சராசரியாக 1.4 மில்லியன் கடன் இருப்பதாகக் கண்டறியப்பட்டு இருக்கிறது. எனவே, மாதாந்தம் அவர்களால் சேமிக்கக்கூடிய வெறும் 7இ238 ரூபாவால், இந்தக் கடனை அடைக்க 193 மாதங்களைச் செலவிட வேண்டியதாக இருக்கும். இது கிட்டத்தட்ட 16 வருடங்கள் ஆகும்.

இது ஒட்டுமொத்த இலங்கையர்களின் சராசரியாக இருக்கிறது. ஆனால், தினக்கூலிக்கு வேலை செய்கின்றவர்கள், நடுத்தர குடும்பத்தில் செலவுகளுக்குப் போதுமான வருமானத்தைக் கொண்டிராத குடும்பம் ஆகியவற்றின் நிலையைச் சிந்தித்துப் பாருங்கள். வருமானம் போதிய மட்டத்தில் இல்லாதநிலையில், அவர்களின் செலவுகளுக்காகத் தனிநபர் கடன், அடகு வைத்தல், நிதிநிறுவனங்களில் நுண்கடன் எனப் போதிய நிதியியல் அறிவின்மையால், சிக்கிக் கொள்ளுகிறார்கள். அப்படிச் சிக்கிக் கொள்ளுகிறவர்கள், அந்தக் கடனிலிருந்து மீண்டுவர, மீண்டுமொரு கடனைப் பெறுகின்றார்கள். கடனுடனேயே இறுதிவரை தங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில், இந்தக் கடன்களை முழுமையாகச் செலுத்திவிட்டுத் தலைநிமிர்கின்றபோது, அவர்கள் தங்களுடைய முதிர்ச்சி வயதெல்லையை எட்டி இருப்பார்கள். தங்களுக்கான சேமிப்புகள் எதுவுமே அற்றநிலையில், தங்களுடைய குழந்தைகளை நம்பி வாழவேண்டிய துர்பாக்கியவாதிகளாக நிற்கத் தலைப்படுகிறார்கள். இந்தப் பத்தியை வாசிக்கின்ற பாதிக்கும் மேலானவர்களின் எதிர்காலம், இப்படியாகத்தான் இருக்கப்போகின்றது என்பதே கவலைக்குரியதாக இருக்கிறது.

அப்படியாயின், எமது நிதியியல் அறிவை விருத்தி செய்யவேண்டியது, தவிர்க்க முடியாததொன்று என்பதை, நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள். நிதியியல் ரீதியான அடிப்படை அறிவைத் தரவேண்டிய கல்விமுறையும் நமக்கு அதைத் தரவில்லை. குறைந்தது, மக்களின் பிரதிநிதியாக இருக்கின்ற அரசியல்வாதிகளாவது, இதைக் கருத்தில்கொண்டு, மக்கள் சார்பாக இதை முன்னெடுக்கத் தயாரில்லை என்கிறபோது, நாமே நமக்கானவற்றைப் பெற்றுக்கொண்டு, தனிநபர், சமூகம் சார்ந்த மாற்றங்களுக்குக் காரணமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

கொரோனா வைரஸ் பரவுகை, எத்தனையோ பாதகமான விடயங்களை நமக்குத் தந்திருந்தாலும், சில சாதகங்களையும் தந்துகொண்டே இருக்கிறது. அதிலொன்றுதான், தவிர்க்க முடியாமலே எங்களுடைய நிதிசார் தேவைகள் தொடர்பில், சிந்திக்க வைத்திருக்கிறது. இதை மிக ஆக்கபூர்வமாகவும் வினைதிறனாகவும் பயன்படுத்தி, நமது வாழ்க்கை முறையை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகிறது.

எனவே, நிதியியல்சார் கல்வியறிவை அதிகரித்துக் கொள்ளவும் அதுசார் முறைமைகளை எங்கள் வாழ்வியலில் எங்கெல்லாம் பயன்படுத்த வேண்டுமென்பதையும், அடுத்தடுத்த வாரங்களில் பார்க்கலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X