2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் மொத்த வெளிநாட்டு வெளிப்பாய்ச்சல் ரூ. 27 பில்.

Editorial   / 2019 ஜனவரி 06 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018ஆம் ஆண்டில் கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் மொத்த வெளிநாட்டு வெளிப்பாய்ச்சல் ரூ. 27 பில்லியனாகப் பதிவாகியிருந்ததாக, கொழும்பு பங்கு பரிவர்த்தனை தெரிவித்துள்ளது. இது, 2017இல் பதிவாகியிருந்த ரூ. 17.65 மில்லியன் மொத்த வெளிநாட்டு உட்பாய்ச்சலுடன் ஒப்பிடுகையில், முற்றிலும் மாறுபட்ட நிலையாக அமைந்துள்ளது.  

கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் புள்ளி விவரங்களின் பிரகாரம், கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் பதிவாகியிருந்த மொத்த வெளிநாட்டு வெளிப்பாய்ச்சலின் 62 சதவீதத்துக்கும் அதிகமான பகுதி 2018இன் நான்காம் காலாண்டு பகுதியில் பதிவாகியிருந்ததாகவும் இதன் பெறுமதி ரூ. 17.1 பில்லியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

குறிப்பாக, நான்காம் காலாண்டு பகுதியின் ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு பின்னரான காலப்பகுதியில் மொத்த வெளிநாட்டு வெளிப்பாய்ச்சல் பெறுமதி ரூ. 14 பில்லியனாகப் பதிவாகியிருந்தது.   

2018இன் முதல் காலாண்டில் இந்தப் பெறுமதி ரூ. 2.62 பில்லியன்களாகவும் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் முறையே ரூ. 1.62 மற்றும் ரூ. 6.14 பில்லியன்களாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

2018ஆம் ஆண்டு முழுவதிலும் இலங்கை எதிர்கொண்டிருந்த உறுதியற்ற தன்மைகள் காரணமாக பெருமளவான முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளைப் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றுவதற்கு தீர்மானித்து, கொழும்பு பங்குப் பரிவர்த்தனையிலிருந்து வெளியேறியிருந்தார்கள் எனப் பங்குப் பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டார்.  

“பெப்ரவரி மாதத்தில் இடம்பெற்ற பிரதேச சபைத் தேர்தலின் எதிர்பாராத பெறுபேறுகள், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், கண்டியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இதனைத் தொடர்ந்து எழுந்த அவசரகால நிலை, ஒக்டோபர் மாத அரசியல் சர்ச்சை போன்றன வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு குந்தகமாக அமைந்திருந்தன. மேலும், மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சியும் ஆண்டில் மிகவும் குறைந்த வளர்ச்சியை பதிவு செய்திருந்தது” என்றார்.  

முன்னைய ஆண்டுகளை எடுத்துக் கொண்டால், 2014 ஆம் ஆண்டில் கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் ரூ. 21.14 பில்லியன் மொத்த வெளிநாட்டு உட்பாய்ச்சலும், 2015 இல் ரூ. 5.37 பில்லியன் மொத்த வெளிநாட்டு வெளிப்பாய்ச்சலும், 2016 இல் ரூ. 384 மில்லியன் மொத்த வெளிநாட்டு உட்பாய்ச்சலும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .