2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சிலோன் பெவரேஜ் ஹோல்டிங்ஸ் பிஎல்சிக்கு புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி

Editorial   / 2020 ஜூன் 16 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலோன் பெவரேஜ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகக் கடமையாற்றும் சுரேஷ் ஷா பணியிலிருந்து ஓய்வுபெறுவது தொடர்பான அறிவிப்பைத் தொடர்ந்து, புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக கலாநிதி ரஜீவ் ஹேரத் மீவக்கலவை நியமித்துள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

கொழும்பு பங்குப் பரிவர்த்தனைக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், 2020 ஜுலை முதலாம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில், நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகக் கலாநிதி ரஜீவ் ஹேரத் மீவக்கல நியமிக்கப்படுவாரெனவும் தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரியாகச் செயலாற்றும் சுரேஷ் ஷாவின் ஓய்வைத் தொடர்ந்து, முழு அதிகாரமும் இவருக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் முதல், நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சபையிலும் இவர் அங்கத்துவம் பெறுவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளாக நிறுவனத்தில் வெற்றிகரமாகத் தலைமைத்துவ பதவி வகித்ததைத் தொடர்ந்து, 2020 ஜுன் 30 ஆம் திகதியுடன் சுரேஷ் ஷா பணியிலிருந்து ஓய்வு பெறுவுள்ளார் என, அறியத்தரப்படுகின்றது என அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது கடமைக் காலப்பகுதியில், நுவரெலியாவில் காணப்பட்ட நிறுவனத்தில் வடித்தல் செயற்பாடுகளை, பியகம பகுதிக்கு மாற்றியமைப்பதில் முக்கிய பங்காற்றியிருந்தார். இதைத் தொடர்ந்து, இலங்கையில் மிகவும் வெற்றிகரமான நொதிய வடிப்பு நிறுவனமான லயன் பிரெவரிஸ் நிறுவனத்தின் அங்கமாக, இந்நிறுவனத்தை மாற்றியமைப்பதிலும் பங்களிப்பு வழங்கியிருந்தார்.

நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீன பணிப்பாளர் சபை அங்கத்தவராக 2017 செப்டெம்பர் முதலாம் திகதி கலாநிதி மீவக்கல்ல இணைந்தார். இதற்கு முன் அவர் தனியார், அரச துறைகளில் நிர்வாக அனுபவத்தைக் கொண்டுள்ளார். மேலும், ஹொனாலுலு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவத்தில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுள்ளதுடன், கிளாஸ்கோ, Strathclyde பல்கலைக்கழகத்தின் சர்வதேச சந்தைப்படுத்தலில் MSc பட்டத்தைப் பெற்றுள்ளார். மேலும், ஐக்கிய இராஜ்ஜியத்தின் பட்டய சந்தைப்படுத்தல் கல்வியகத்தின் பட்டப் பின்படிப்பு டிப்ளோமா பட்டத்தையும் இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர் தனியார் துறையில், தமது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்ததுடன், பல்தேசிய நிறுவனத்தில் 19 வருடங்களாகப் பணியாற்றி இருந்தார். லங்கா சதொச, அரச அபிவிருத்தி நிர்மாண கூட்டுத்தாபனம், வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் இவர் பணியாற்றியிருந்தார்.

உள்நாட்டு, சர்வதேச சந்தைகளுக்காக பியர் வடிப்பு, சந்தைப்படுத்தல் ஆகிய செயற்பாடுகளை மேற்கொள்ளும் முதலீட்டு நிறுவனம், காசன் கம்பர்பட்ச் பிஎல்சியின் துணை நிறுவனமாக சிலோன் பெவரேஜ் ஹோல்டிங்ஸ் திகழ்கின்றது. இந்நிறுவனத்தின் கீழ் 'மசான்', 8.8% மற்றும் O! எனும் நாமங்களின் கீழ், 35 பப்களை நிர்வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் லயன் பிரெவரி (சிலோன்) பிஎல்சி, பப்ஸ் அன் பிளேசஸ் (பிரைவட்) லிமிடெட், ரிடெல் ஸ்பேசஸ் (பிரைவட்) லிமிடெட், லக்ஷரி பிரான்ட்ஸ் (பிரைவட்) லிமிடெட், வீ வருண (பிரைவட்) லிமிடெட், பேர்ள் ஸ்பிரிங்ஸ் (பிரைவட்) லிமிடெட், மில்லர்ஸ் பிரெவரி லிமிடெட் ஆகியன அடங்கியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .