2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

டுபாயின் 70 சதவீத வியாபாரங்கள் அடுத்த ஆறு மாதங்களில் மூடப்படும்

ச. சந்திரசேகர்   / 2020 மே 31 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாய் வர்த்தக சம்மேளனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம், டுபாயின் ஹோட்டல்கள், உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் போது, அவற்றில் அரைப் பங்குக்கும் அதிகமானவை, அடுத்த மாதமளவில் மூடப்படும் நிலையை எதிர்நோக்கி உள்ளதாகவும் டுபாயிலுள்ள சுற்றுலா, பிரயாண நிறுவனங்களில் மூன்றில் ஒரு பங்கு, இதே நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

டுபாய் முடக்கப்பட்டிருந்த ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில், அந்நாட்டின் 1,228 பிரதம நிறைவேற்று அதிகாரிகளிடம், டுபாய் வர்த்தக சம்மேளனம் இந்தக் கருத்துக் கணிப்பை முன்னெடுத்திருந்தது. இவர்கள், வெவ்வேறு துறைகளில் காணப்படும் வியாபாரச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 பரவல் காரணமாக, அடுத்த ஆறு மாத காலப்பகுதியில், டுபாயைச் சேர்ந்த சுமார் 70 சதவீதமான வியாபாரங்கள், மூடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம் என, இந்த ஆய்வில் இனங்காணப்பட்டிருந்தது.

இந்தக் கருத்துக் கணிப்பில், உள்வாங்கப்பட்ட வியாபாரங்களில் 75 சதவீதமானவை, சிறு வியாபாரங்களாக அமைந்திருந்ததுடன், 20க்கும் குறைவாக ஊழியர்களைக் கொண்ட வியாபாரங்களாகக் காணப்பட்டன. இந்தக் கருத்துக் கணிப்பின் போது, பதிலளித்திருந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், அடுத்துவரும் மாதங்களில், தமது வியாபாரம் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படலாம் எனக் குறிப்பிட்டிருந்தனர். 27 சதவீதமானவர்கள், தமது வியாபாரங்களை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம் எனவும் 43 சதவீதமானவர்கள் அடுத்த ஆறு மாத காலப்பகுதியில், தமது வியாபாரங்களை மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

மத்திய கிழக்கில் காணப்படும் எண்ணெய் வளம் சாராத, பன்முகப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை, டுபாய் கொண்டுள்ளது. விருந்தோம்பல், சுற்றுலா, களியாட்டம், சரக்குக் கையாளல், சொத்துகள் மற்றும் விற்பனைகள் போன்ற துறைகளில், டுபாய்ப் பொருளாதாரம் பெருமளவில் தங்கியுள்ளது.

இதன் ஹோட்டல்கள், உணவகங்கள் சர்வதேச ரீதியில் புகழ்பெற்றுள்ள நிலையில், இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்த அரைப் பங்குக்கும் அதிகமான ஹோட்டல்கள், உணவகங்கள் அடுத்த மாதத்தில் வியாபார நடவடிக்கைகளை மூட வேண்டிய நிலையை, எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்திருந்தன. இதே காலப்பகுதியில், சுமார் 74 சதவீதமான பிரயாணம், சுற்றுலா நிறுவனங்கள், தமது வியாபாரங்களை மூட வேண்டி ஏற்படலாம் எனத் தெரிவித்திருந்ததுடன் போக்குவரத்து, களஞ்சியப்படுத்தல், தொடர்பாடல் துறைகளைச் சேர்ந்த சுமார் 30 சதவீதமான நிறுவனங்களும் இந்த நிலைக்கு முகங்கொடுத்துள்ளன.

நகரம் முழுமையாகவும் பகுதியளவிலும் முடக்கப்பட்டு உள்ளமையானது, பிரதான சந்தைகளுக்கு இயங்க முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளன. இரட்டை அதிர்ச்சித் தாக்க நிலைமையானது, நிதி நெருக்கடி தோன்றிய காலப்பகுதியை விடவும் மோசமான நிலைக்கு, பொருளாதாரச் செயற்பாடுகளை வீழ்ச்சியடையச் செய்துள்ளது என, டுபாய் வர்த்தக சம்மேளனம் வெளியிட்டிருந்த 'டுபாய் வியாபார சமூகத்தில் கொவிட்-19 இன் தாக்கம்' எனும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பில், டுபாய் வர்த்தக சம்மேளனத்தின் பேச்சாளர் தெரிவிக்கையில், ''இந்த ஆய்வு, ஏப்ரல் மாத இறுதிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது படிப்படியாகத் தனது முடக்க நிலையை, டுபாய் தளர்த்த ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் வாரங்களில், இந்த நிலை மேலும் முன்னேற்றமடையும் என, நாம் எதிர்பார்க்கின்றோம். இதனால், பாதிக்கப்பட்டுள்ள வியாபாரங்கள், தமது வழமையான செயற்பாடுகளை, மீள ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கும் என, நாம் எதிர்பார்க்கின்றோம்'' என்றார்.

தற்போதைய உறுதியற்ற பொருளாதார சூழ்நிலையில், ஐக்கிய அரபு இராட்சியத்தைச் சேர்ந்த ஏழு பிரதான நகரங்களின் வியாபாரங்கள் சம்பளக் குறைப்பு, ஊழியர்களுக்குக் கொடுப்பனவற்ற விடுமுறை, ஊழியர் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

கடந்த வாரத்தின் நிலைவரப்படி, ஐக்கிய அரபு இராட்சியத்தில் 32,000 க்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர். மொத்தமாக, 255 உயிரிழப்புகளும் பதிவாகியிருந்தன. நாட்டின் பிரதான வணிக, சுற்றுலா மய்யமாக டுபாய் திகழ்கின்றது. அதன் 3.3 மில்லியன் மக்களுக்கு, 24 மணி நேரக் கடும் முடக்க நிலையை, ஏப்ரல் மாதத்தில் அமல்படுத்தி இருந்தது.

ரமழான் மாதப் பிறப்புடன், இந்த நிலை பகுதியளவு தளர்த்தப்பட்டதுடன், 30 சதவீதமான வியாபாரங்கள், மீள இயங்க அனுமதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும், பொது மக்கள் பெருமளவில் வெளியில் செல்லாமையின் காரணமாக, இந்த வியாபாரங்களுக்கான கேள்வி, பெருமளவு வீழ்ச்சி கண்டிருந்தது. இதன் காரணமாக, வியாபாரங்கள் ஊழியர் குறைப்பை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. சுற்றுலாத் துறை, பூஜ்ஜிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், பல ஹோட்டல்கள் வெறிச்சோடியுள்ளன. மார்ச் 24ஆம் திகதி முதல், வெளிநாட்டுப் பயணிகள் எவரும், ஐக்கிய அரபு இராட்சியத்துக்குள் பிரவேசிக்கவில்லை.

ஐக்கிய அரபு இராட்சியத்தைப் பொறுத்தமட்டில், அந்நாட்டின் மொத்தப் பொருளாதார செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு, 80 சதவீதம் வெளிநாட்டுச் சனத்தொகையில் தங்கியிருக்க வேண்டிய நிலையில், இவர்களுக்குத் தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுமாயின், தமது சொந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்படும். இதனால், அந்நாட்டின் பொருளாதார மீட்சி என்பது, மேலும் சவாலை எதிர்கொள்ளும். மே மாதத்தின் முற்பகுதியில், சுமார் 150,000 க்கும் அதிகமான இந்தியர்கள், 40,000 க்கும் அதிகமான பாகிஸ்தானியர்கள் தமது சொந்த நாடுகளுக்கு மீளத்திரும்பத் தம்மைப் பதிவு செய்திருந்தனர். இவர்களில் பலர் வெளியேறியும் உள்ளனர் என, அந்நாடுகளின் இராஜதந்திர உறவுக் காரியாலயங்களின் ஊடாக அறிந்து கொள்ள முடிந்தது.

மார்ச் மாதத்தின் பிற்பகுதியில், டுபாய் அரசாங்கத்தால் 1.5 பில்லியன் திரஹம்கள் பெறுமதியான நிவாரணக் கொடுப்பனவு அறிவிக்கப்பட்டிருந்தது. முடக்க நிலை காரணமாகப் பாதிக்கப்படும் வியாபாரங்களுக்குக் கட்டண மீளளிப்புகள், குறைப்புகள், அத்தியாவசிய பாவனைப் பொருள்களின் செலவுகள் குறைப்பு போன்றன அடங்கியிருந்தன.

அபுதாபியைப் பொறுத்தமட்டில், அந்நாட்டின் தனியார் துறை வியாபாரங்கள், வங்கிகளுக்கு அவசர நிதியளிப்புக்காக 27 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிவாரணமாக வழங்குவதாக அறிவித்திருந்தது.

வணிக வங்கிகளுக்குக் கடன் நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்கும் வகையில், ஐக்கிய அரபு இராட்சியத்தின் மத்திய வங்கி, 70 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தது. எவ்வாறாயினும், பல வியாபாரங்களுக்கு மேலும் உதவி தேவைப்படுகின்றது; அல்லது, காணப்படும் உறுதியற்ற பொருளாதாரச் சூழல் காரணமாக, இவ்வாறு வழங்கப்படும் கடன் வசதியைப் பெற்றுக் கொள்வதில் பின்நிற்கின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுப் பரவுவதற்கு முன்பிருந்தே, சில ஆண்டு காலமாக எமிரேட்ஸின் முக்கியமான துறைகளின் வருமானத்தில் வீழ்ச்சி பதிவாகியிருந்தது. குறிப்பாக, சொத்துகள், விருந்தோம்பல் துறைகளில் வீழ்ச்சி பதிவாகியிருந்தன. வதிவிடச் சொத்துகளின் விலைகள், 2014ஆம் ஆண்டில் பதிவாகியிருந்த அதியுச்ச பெறுமதிகளுடன் ஒப்பிடுகையில், 30 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்திருந்தன. 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஹோட்டல் அறை ஒன்றிலிருந்து கிடைக்கும் வருமானமும் 25 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தது.

கடந்த ஆண்டில், டுபாயின் பொருளாதாரம் 1.94 சதவீத வளர்ச்சியை மாத்திரம் பதிவு செய்திருந்தது. 2009ஆம் ஆண்டின் உலக பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து பதிவாகியிருந்த மிகவும் மந்தமான வளர்ச்சி, இதுவாகப் பதிவாகியிருந்தது.

கொவிட்-19 தொற்றுப் பரவல் என்பது, டுபாயைப் பொறுத்தமட்டில், ஒரு தசாப்த காலப் பகுதிக்கு முன்னர் பதிவாகியிருந்த, உலகப் பொருளாதார நெருக்கடியை விட, மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, உலகளாவிய ரீதியில் கொவிட்-19 இன் தாக்கம் என்பது, 2008-09ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நிலவிய நிதி நெருக்கடியை விட, மோசமான பொருளாதாரப் பாதிப்பைத் தோற்றுவிக்கும் என, டுபாய் வர்த்தக சம்மேளனம் எதிர்வுகூறியுள்ளது.

இந்நிலையில், டுபாய் அடங்கலாக ஐக்கிய அரபு இராட்சியத்தில், இலங்கையைச் சேர்ந்த சுமார் 300,000 பேர் வரை, வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டிருந்ததாக அந்நாட்டின் 'கல்ப்' செய்திச் சேவை தெரிவித்துள்ளதுடன், இவர்களில் பலர் ஹோட்டல், விருந்தோம்பல் துறைகளிலும், வீட்டுப் பணிப்பெண்கள், பொறியியல், நிர்மாணத்துறை, வங்கி, நிதியியல் துறை, வியாபார உரிமையாளர்களாகவும் பணியாற்றுவதாகத் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .