2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தடுப்பூசியுடன் பொருளாதார வளர்ச்சி உயரும்

Johnsan Bastiampillai   / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ச. சேகர்

இ ந்தியாவின் முதற்கட்ட கொவிட்-19 நோய்க்கான தடுப்பூசியின்  வருகையுடன், எதிர்வரும் மாதங்களில் மேலும் பல தொகுதிகள் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதனூடாக பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, நாட்டில் தொற்றுப் பரவல் காரணமாக பெருமளவு பின்னடைவுகளை எதிர்நோக்கியிருந்த ஏற்றுமதிகள், இதர பொருளாதாரத் துறைகளில் வளர்ச்சியை அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.எவ்வாறாயினும், பாரியளவு சனத்தொகைக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு அவசியமான நிதியைத் திரட்டுவது, பின்தங்கிய சமூகங்களுக்கான உதவிகளை வழங்குவது, புதிய வைரஸ் மாதிரிகளை கட்டுப்படுத்துவதற்கு புதிய வழிமுறைகளை இனங்காண்பது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் பெருமளவானோருக்கு தடுப்பூசியை வழங்கக்கூடியதாக இருக்கும். இந்நிலையில், புதிய வகை வைரஸ் பரவல் தொடர்பில் வெளியாகியிருந்த அறிவித்தல் காரணமாக, மேலும் ஆபத்து அதிகரித்துள்ளது. உறுதியற்ற சூழலிலும் சர்வதேச பொருளாதாரம் 2021ஆம் ஆண்டில் 5.5 சதவீத வளர்ச்சியையும் 2022ஆம் ஆண்டில் 4.2 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டிருந்த உலக பொருளாதாரத் தோற்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் பெருமளவு பின்னடைவை எதிர்நோக்கியிருந்த உலகப் பொருளாதாரத்தில், பெண்கள், இளைஞர்கள், வறுமையில் வசிப்போர், முறைசாரா தொழிலில் ஈடுபடுவோர், நேரடித் தொடர்புகளைப் பேணும் துறைகளில் பணியாற்றுவோர் போன்றவர்கள் பெருமளவு பாதிப்புகளை எதிர்நோக்கியிருந்தனர்.
  இந்நிலையில் பொருளாதார மீட்சி என்பது, நாடுகளுக்கு நாடு வேறுபட்டதாக அமைந்துள்ளது. 

மீட்சி என்பது உறுதியாக இடம்பெறும் வரையில், கொள்கை சார் உதவிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். சகலருக்கும் அனுகூலம் அளிக்கக்கூடிய வகையிலான பொருளாதாரத் தீர்மானங்கள் அமல்படுத்தப்பட வேண்டும். 

சகல பகுதிகளிலும் தொற்றுப் பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு உறுதியான பரஸ்பர கைகோர்ப்பு அவசியமானதாக அமைந்துள்ளது. சகல நாடுகளுக்கும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கு அவற்றை உற்பத்தி செய்யும் பகுதிகளுக்கு போதியளவு நிதி வசதிகளை வழங்குகின்றமை, அவற்றை உலகளாவிய ரீதியில் விநியோகிக்க நடவடிக்கைகளை மேற்கொள்கின்றமை, சகாய விலைகளில் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றமை போன்றன மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. 

குறைந்த வருமானமீட்டும் அபிவிருத்தியடைந்து வரும் பல நாடுகளின் பொருளாதாரங்கள் உயர் கடன் சுமையுடன் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளன.இவ்வாறான நாடுகளுக்கு, சர்வதேச திரள்வைப் பெற்றுக் கொள்வதற்கு உதவும் வகையில் சர்வதேச சமூகம் உதவிகளை வழங்க வேண்டும்.

தரப்படுத்தல்களில் குறைப்புகளை எதிர்கொண்டுள்ளதும் குறைந்த ஒதுக்கங்களைக் கொண்டுள்ளதுமான நாடுகள், முன்னேற்றத்தைப் பதிவு செய்ய சவால்களை எதிர்கொள்ளும் என்பதுடன், தடுப்பு மருந்துகளை வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அப்பால், தமது பொருளாதாரத்தை சீர் செய்து, நிலைபேறான வளர்ச்சியை எய்துவது தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்தும். இலங்கையிலும் இவ்வாறான ஒரு போக்கை அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X