2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நிதியியல் மோசடி தொடர்பில் அவதானமாக இருங்கள்

Gavitha   / 2020 ஒக்டோபர் 19 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுதினன் சுதந்திரநாதன்

இலங்கையில், கொரோனா வைரஸ் பரவலானது, மீண்டும் ஓர் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளது. முழுமையான முடக்கத்தினூடாக, நாட்டை சுமூக நிலைக்கு கொண்டுவந்து, நாடு பழைய நிலையில் இயங்கிக்கொண்டிருந்த​ேபாது, மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளமை எதிர்பாராதது. அரசாங்கத்தினதும் பொதுமக்களதும் கவனயீனமே, இதற்கு முதன்மைக் காரணம் எனச்சொல்ல முடியும். இந்த நிலையில், நாடு தழுவிய பொது முடக்கத்தை நோக்கி, இலங்கை செல்வது தவிர்க்க முடியாத ஒன்றா எனும் எண்ணம் எல்லோரிடத்திலும் வர ஆரம்பித்துவிட்டது.  

இந்த சூழ்நிலை மிக மோசமான ஒன்று. காரணம், கடந்த காலத்தில் சுமார் மூன்று மாதங்களாக, நாம் அனுபவித்த முழுமையான பொது முடக்கம், நமது வாழ்க்கை முறையில் எத்தகைய பிரச்சினைகளை ஏற்படுத்தியிருந்தது என்பதை நாம் நேராகவே பார்த்​தோம். ஆனால், முழுமையான பொது முடக்கமொன்றுக்கு செல்லப்போவதில்லை என்பதை, அரசாங்கம் தனது செயற்பாடுகள் மூலம் நிரூபித்துக்கொண்டுள்ளது. இதை ஒருவகையில், சிறந்த செயற்பாடாக நாம் பார்த்தாலும், மக்களின் நலனுக்கு எவ்வளவு தூரம் பாதுகாப்பாக இது அமையப் போகிறது என்பது கேள்விக்குறியே. 

இத்தகைய சூழ்நிலைதான், மக்களிடம் நிதியியல் ரீதியான ஒரு நிச்சயமற்றத் தன்மையை உருவாக்குகிறது. கிடைக்கும் வருமானம் போதாது எனும் மாயை அல்லது நாளாந்த மாதாந்த வருமானத்தில் ஏற்படுகின்ற சிக்கல், அவர்களை எப்படியாவது ஏதாவது வகையில் வருமானத்தை உழைத்துவிட வேண்டும் என்ற மனநிலைக்கு எடுத்து செல்கிறது. விளைவு, புதிய அல்லது அறிந்திராத, பாதுகாப்பற்ற வருமான மூலங்களைப் பெற்றுக்கொள்ளும் முறைகளைக் கூட, முயற்சித்துப் பார்க்க, நம்மவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். இது, நிதியியல் ரீதியான மோசடிக்குத் தூண்டில் போட்டு காத்திருப்பவர்களின் கையில், அப்பாவி மீன்களாக, நாம் போய் சிக்குகின்ற நிலையாக அமைந்து விடுகின்றது. தற்போதைய நிலையில், வடக்கு கிழக்குப் பகுதியில் இந்த பிரமிட் அடிப்படையிலான நிதியியல் மோசடி, அதிகரித்து வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகின்றது. இதுபோன்று நம் கண்ணுக்குத் தெரியாத பல மோசடிகள் இலங்கை முழுவதுமே பறந்து கிடக்கின்றன.  

ஆரம்பகாலங்களில், உங்கள் வீடுகளைத் தேடி, முகவர்கள் வடிவிலேயே வந்த இந்த பிரமிட் நிதியியல் மோசடிகள், தற்போது வளர்ந்து நிற்கும் தொழில்நுட்பங்களையும் சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்தி, ஒவ்வொரு தனிநபரையும் தன் பக்கம் இழுத்துக் கொள்ளும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றது. உலகளாவிய ரீதியில் இன்றைய நிலையில் சுமார் 3 பில்லியன் பேர் இணையவழியாக இணைந்து இருக்கிறார்கள். இவர்களின் நிதியியல் ரீதியான அறிவு என்பது, மிக மிகக் குறைந்த மட்டத்திலேயே இருக்கிறது. இதனால், கவர்ச்சிகரமான விளம்பரங்கள், சிறிய சலுகைகள் மூலமாக, தங்களது மோசடிக்குள் உங்களை மிக விரைவாக இழுத்து கொள்கிறார்கள். 

எனவே, கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில், ஏதாவது ஒருவகையில் வருமானத்தைப் பெற்றுக்கொள்ளலாம் எனும் மன அழுத்த நிலையிலிருக்கும் நீங்கள், உங்களது பலவருடகால உழைப்பின் மூலமாக உருவான சேமிப்புக்களையே இழந்துவிடுகின்ற நிலை வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள். எனவே, இப்படியான சூழ்நிலைகளைப் பயன்படுத்திக்கொண்டு எத்தகைய நிதி மோசடிகள் இடம்பெறுகிறன; அவற்றிலிருந்து எப்படி நம்மை காத்துக்கொள்ள முடியும் என்பதை அறிந்து கொள்ளுவது அவசியமாகிறது. 

பிரமிட் திட்ட மோசடிகள்

கடந்த காலங்களில், இந்தத் திட்டங்கள் உங்கள் வீடுகளைத் தேடி வந்திருக்கும். குறித்த ஒரு பொருளை உங்களுக்கு வழங்குவார்கள். அதை உங்களைப்போல பலருக்கும் நீங்கள் விற்பனை செய்ய வேண்டும். உங்களிடம் கொள்வனவு செய்தவர்கள், அதை மீண்டும் பலருக்கும் விற்பனை செய்ய வேண்டும். இதன் மூலமாக, ஒவ்வொரு கட்ட விற்பனையிலும் ஒரு தொகைப் பணம் கிடைக்கும். ஆனால், அதைத் தரகுப் பணம் என்று கூற முடியாது. பிரமிட் வடிவிலான கோபுரத்தில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை பொறுத்தே, உங்கள் வருமானம் உங்கள் கைகளுக்கு வரும். நீங்கள் இந்த பிரமிட் கோபுரத்தின் கீழ்நிலையில் இருந்தால், நீங்கள்தான் இந்த நிதி மோசடியில் பணத்தை இழப்பவர்களாக இருப்பீர்கள். 

தற்போது இந்த முறைமைதான், இணையத்தின் வழியாக மாற்றம் பெற்றிருக்கிறது. வெளிநாட்டுப் பங்குச் சந்தையில் வீட்டிலிருந்தவாறே நீங்கள் முதலீடு செய்து, பன்மடங்கு இலாபத்தைப் பெற முடியும் எனும் வாசகங்களுடன், காட்சிப்படுத்தப்படுகின்ற கவர்ச்சிகர விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். இவை நவீன கால பிரமிட் மோசடியாகும். இந்த முறையில் நீங்கள் உள்நுழைய, நிலையான கட்டணமொன்றைச் செலுத்த வேண்டும். அதற்கு பின்னர், உங்களுக்கு சிறுவருமானம் கிடைக்கும். அந்த நம்பிக்கையில், நீங்கள் பலரைச் சேர்க்க முயற்சி செய்வீர்கள். இதன்மூலமாக, உங்கள் பணத்தை நீங்கள் இழக்க வழிவகை செய்பவர்களாகவே இருப்பீர்கள்.  

இலங்கை மத்திய வங்கி, காலகாலமாக இந்த நிதியியல் மோசடிகள் தொடர்பில் மக்களை அறிவுறுத்தியே வருகிறது. ஆனால், குறைந்த முதலீட்டில் மிகப்பெரும் வருமானம் எனும் கவர்ச்சி வார்த்தைகளுக்கு, சாதாரண மக்கள் பலியாவதன் காரணத்தாலும்; இந்த வகை மோசடிகளின் வலையமைப்பு பெரிதானதன் பின்னரே, வெளிச்சத்துக்கு வருவதாலும் இதன் மூலம் ஏற்படும் பண இழப்​பை தவிர்க்க முடியாது.  

போன்ஸி திட்டங்கள்

ஊர்களில் நம்மவர்கள் பணத்தைச் சேமிக்க பயன்படுத்தும் ‘சீட்டு’ பிடித்தலின் மேம்படுத்தப்பட்ட மோசடி முறையே, இந்த போன்ஸி திட்டங்கள். அதாவது, நீங்கள் ஒரு நிறுவனத்திடம் நாளாந்த, வாராந்த, மாதாந்த அடிப்படையில் உங்கள் பணத்தை சேமித்து வருவீர்கள். அந்த முதலீடு, கால எல்லையை எட்டுகின்றபோது, குறித்த வட்டி வீதத்துடன் உங்கள் பணம் உங்கள் கைகளுக்கு மீள கிடைக்கும். இதில் எப்படி மோசடிகள் இடம்பெறுகின்றன என நினைக்கிறீர்களா? 

நிறுவனங்கள், முதலில் சிறிய சேமிப்பாளர்கள், பலரை ஒன்றிணைத்துக்கொண்டு இந்தத் திட்டங்களைச் செய்கிறது. இதன்போது இவர்கள் நம் கண்ணுக்குத் தெரியாது நிபந்தனைகளை வைத்திருப்பார்கள். இதன்மூலமாக, முதற்கட்ட மோசடிகளை செய்வார்கள். உதாரணமாக ஒவ்வொரு நாளும் 1,000/- சேமிக்க வேண்டும் எனும் திட்டத்தில், நீங்கள் இணைந்து கொள்ளுவீர்கள் என வைத்து கொள்ளுவோம். ஒரு நாள், உங்களால், இந்தத் திட்டத்தக்குப் பணத்தை செலுத்த முடியாமல் போனாலும் கூட, உங்களுக்குத் தருவதாக உறுதி செய்யப்பட்ட கவர்ச்சிகரமான வட்டி கிடைக்காமலே போகும். அதுமட்டுமல்ல, சில நேரங்களில் மத்திய வங்கியில் உரிமம் பெறாத இத்தகைய நிறுவனங்கள், உங்களுடைய சேமிப்பை சுருட்டிக்கொண்டு ஓடிவிடுகின்ற அபாய நிலையும் இருக்கிறது. எனவே, குறுங்காலத்தில் மிகப்பெரும் வருமானத்தைத் தருகிறோம் எனும் விளம்பரங்களுடன் வருகின்ற இத்தகைய நிறுவனங்கள் தொடர்பிலும் அவதானமாக இருங்கள்  

பணப்பரிமாற்ற அட்டையில் இடம்பெறும் மோசடிகள்

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக, 90%க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தங்களுடைய பரிமாற்றங்களை, பணக்கொடுக்கல் வாங்களிலிருந்து அட்டை மூலமான பரிமாற்றத்துக்கு மாற்றியுள்ளன. வீடுகளிலிருந்து உங்கள் வரவட்டை அல்லது கடனட்டை மூலமாகக் கொடுப்பனவுகளை செய்தவுடன், உங்களுக்குத் தேவையான பொருள்கள் உங்கள் வீடுகளையே நாடி வருவதாக கூறுவார்கள். கேட்பதற்கு இத்தனை சுலபமாக இருந்தாலும், இதற்குள்ளும் நம்மை அறியாத நிதியியல் மோசடிகள் இடம்பெறுகின்றன. நீங்கள் பெரும்பாலான இணையத்தளங்களில் உங்களுக்கு தேவையான பொருள்களைக் கொள்வனவு செய்தபின்பு, பணக் கொடுக்கல் வாங்கல்களைச் செய்வதற்கான இணைப்பானது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வேறாகவே இருக்கும். நாம் கொடுக்கல் வாங்கல்களைச் செய்ய முன்னர், இந்த வேறாக இருக்கக்கூடிய இணைப்பு, பொருள்களைக் கொள்வனவு செய்யும் நிறுவனத்துக்குச் சொந்தமானதா என்பதைக் கவனிக்கத் தவறி விடுகிறோம். இணையவழி மோசடி செய்பவர்கள், பல சந்தர்ப்பங்களில் நிறுவன இணைப்புக்குப் பதில், தங்களுடைய இணைப்பை அதில் வைத்துவிடுவார்கள். இதனால், உங்களுடைய கொடுக்கல் வாங்கல் செய்கின்ற அட்டையின் அனைத்து தகவல்களும், வேண்டாதவர்கள் கைகளில் போய் சேர்ந்துவிட, வங்கியிலிருக்கும் முழு பணத்தையும் இழந்துவிடுகின்ற நிலை ஏற்படுகிறது.  

எனவே, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இணையத்தில் கொடுக்கல் வாங்கல் செய்யும்போது, உங்களுக்கு வழங்கப்படும் லிங்க், பணக் கொடுக்கல் வாங்கலுக்கான தகவலைப் பதிவு செய்யும் படிவங்கள் தொடர்பில் அவதானமாக இருங்கள். சந்தேகங்கள் இருப்பின், அவற்றை நிவர்த்தி செய்துகொண்டே, உங்கள் விவரங்களைக் கொடுங்கள். இல்லையெனில் உங்களது ஒட்டுமொத்த சேமிப்பையும் நொடிப் பொழுதில் இழந்துவிடக் கூடும்.  

இவை சில உதாரணங்கள் மட்டுமே. இவை தவிர்ந்தும், நாம் கண்டிராத பல்வேறு வடிவங்களில், உங்கள் சேமிப்புக்களை வருமானமாக மாற்றிக்கொள்ள பலரும் உங்களை ஏமாற்றக் காத்திருக்கின்றனர். எனவே, இவர்கள் தொடர்பில் நாம் தான் அவதானமாக இருக்க வேண்டும். 

நமது பணத்தேவைக்கு என்றுமே எல்லை இல்லை. அது ஒரு முடிவிலியாகவே இருந்துகொண்டு இருக்கும். ஆனால், நம் மனங்களுக்கு நாம் பூட்டுப் போடமுடியும். இத்தகைய குறுங்காலத்தில், கைநிறைவான பணம் கிடைக்கிறது எனும் செய்தியை பார்க்கும் போதெல்லாம், உங்கள் மனதால் முடிவெடுப்பதைவிட, உங்கள் மூளையால் முடிவுகளை எடுங்கள். அவை தொடர்பில் முடிந்தவரை ஆய்வுசெய்யுங்கள். இதன் மூலமாக, இதுவரை காலமும் நீங்கள் சிறுகச் சிறுக சேமித்த  பணத்தையும்  உங்கள் எதிர்காலத்தையும்  காப்பாற்றி கொள்ள முடியும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .