2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பின் முக்கியத்துவம்

ச. சந்திரசேகர்   / 2020 ஜூலை 01 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் குழுமக் கம்பனி ஒன்றின், பிரதம நிறைவேற்று அதிகாரியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளமை வர்த்தக வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்து உள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தில் பெண்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பைத் தொடர்ச்சியாக வழங்கி வந்த போதிலும், அரசியல், தீர்மானம் மேற்கொள்ளல், உதவிக் கட்டமைப்புகள் போன்றவற்றில் அவர்கள் ஒதுக்கப்பட்டு, வலுவூட்டப்படாதவர்களாக காணப்படுகின்றனர். 2019 ஆம் ஆண்டில், இலங்கையில் இயங்கும் பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களில் எட்டு சதவீதத்தை மாத்திரமே பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தனர். இதன் காரணமாக, இந்த நியமனம் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது புலனாகின்றது.  

இலங்கையின் சனத்தொகையில் அரைப் பங்குக்கும் அதிகமானவர்கள் பெண்களாகக் காணப்படுவது மாத்திரமன்றி, நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதிலும் அவர்களின் பங்களிப்பு, கண்டிப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியதாகும். 

பல தசாப்த காலங்களாக, இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பண அனுப்புகைகளினூடாக இலங்கையின் வருமானத்திலும் பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, தேயிலை, ஆடைத் தொழிற்றுறை, இறப்பர் போன்ற துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு, ஆதிக்கம் செலுத்துவதைக் காண முடிகின்றது. 

நாட்டின் வருமானமீட்டும் மூன்றாவது பிரதான துறையான சுற்றுலாத் துறையிலும், பெண்களுக்கு பெருமளவு தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. எவ்வாறாயினும், பெண்கள் தொடர்ந்தும் தமது வாழ்க்கையில் பல சவால்களுக்கு முகங்கொடுத்த வண்ணமுள்ளனர்.  

இவ்வாறு பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு உச்ச நிலையில் காணப்பட்ட போதிலும், நாட்டின் முறைசார் பணியாளர்கள் எண்ணிக்கையில் 34 சதவீதத்தை மாத்திரமே பெண்கள் தம்வசம் கொண்டுள்ளனர். இது பல தசாப்த காலமாக, மாறாமல் காணப்படுகின்றது. 

முறைசார் பணியில் பெண்களை இணைத்துக் கொள்ளக்கூடிய வகையில் சட்ட வரைபுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமாயின், நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியை இரண்டு சதவீதத்தால் அதிகரித்துக் கொள்ள முடியும் என, சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது. 

விவசாயம் போன்ற குறைந்த திறன், குறைந்த வருமானம் படைத்த துறைகளில் பெண்கள் அதிகளவு அங்கம் வகிக்கின்றனர். சமூக கட்டுப்பாடுகள், திறன் விருத்திக்குக் காணப்படும் குறைந்தளவு வாய்ப்புகள் போன்றன இதற்குக் காரணங்களாக அமைந்துள்ளன.  

அரசியலில் பெண்களின் ஈடுபாடு மிகவும் அரிதாகக் காணப்படுகின்றது. குறிப்பாக, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை, ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானதாகக் காணப்படுகின்றது. 

இந்நிலையில், மாற்றத்தைக் கொண்டு வந்து, உள்ளூராட்சி மன்ற மட்டத்திலிருந்து பெண்களின் அரசியல் ஈடுபாட்டை அதிகரிக்க வேண்டும் எனும் நோக்கில், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, பெண்கள் போட்டியிடுவதற்கென விகிதாசார முறையொன்று அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், தேசிய அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பெண்களில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும் அலுவலகப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் பெண்களைத் தலைமைத்துவம் ஏற்பதற்கும் ஊக்குவிக்கப்பட வேண்டும். 

பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு, உயர்ந்த மட்டத்தில் காணப்பட்ட போதிலும், சம்பளக் கொடுப்பனவுகள், வரையறைகள், கடன் பெறுவதற்கான கட்டுப்பாடுகள், ஆளுகைக் கட்டமைப்புகளில் குறைந்தளவு பிரதிநிதித்துவம்,  போக்குவரத்துப் பாதுகாப்பு போன்ற பலவற்றிலும் பெண்கள் ஓரங்கட்டப்படுவதைக் காண முடிகின்றது.  

தொழில் நிலைகளில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கு, திறன் படைத்த பெண்களுக்கு தமக்கான சொந்த வாய்ப்புகளைக் கட்டியெழுப்பிக் கொள்ளும் ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டிய தேவையைக் கொண்டுள்ளது. 

பணியாற்றும் பெண்களுக்குத் தமது பணியுடன் குடும்பத்தையும் சமநிலையில் பேணக்கூடிய சூழலை ஏற்படுத்துவது இதில் அடங்கியுள்ளது. சட்டத்தின் கீழ், பாலின பாகுபாடு அடிப்படையிலான செயற்பாடுகளை சீர்செய்வது தொடர்பில், அரசாங்கம் உறுதிமொழிகளை வழங்கிய போதிலும், செயற்படுத்தப்படுவதற்கு நீண்ட காலம் வரை செல்லலாம். அதைச் செயற்படுத்தும் போது, அரசாங்கத்துக்குப் பல தரப்புகளிலிருந்தும் கடும் அழுத்தங்கள் எழலாம். அவற்றைக் கடந்து பெண்களுக்கான சமத்துவ உரிமைகளை அரசாங்கம் எவ்வாறு உறுதி செய்யும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.  

பெண்களுக்கு, சரியான வழிகாட்டல் என்பது, மற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த தேவையாக அமைந்துள்ளது. குறிப்பாக, நாட்டின் வட பிராந்தியம் அடங்கலாக பல்வேறு பகுதிகளில் பெண்கள் முகங்கொடுத்துள்ள கடன் பிரச்சினைகளுக்கு, நீண்ட கால அடிப்படையில் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு, தொழில் முயற்சிகளில் ஈடுபடும் பெண்களுக்கு, அவர்களின் முயற்சிகள் பற்றிய ஆலோசனை வழிகாட்டல்களுடன், நிதிசார் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் பற்றிய வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும். 

குறிப்பாக, வெற்றிகரமாக இயங்கும் பெண் தொழில் முயற்சியாளர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் போது, மூலதனத்தை விட, ஆலோசனை வழங்கல் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக தரப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.   

பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். பெண்கள் தற்போதும் பல்வேறு வழிகளில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். இது தொடர்பில், அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட துறைசார் பங்காளர்கள் இணைந்து கவனம் செலுத்தி, பொது மக்களின் மனநிலையில் மாற்றத்தைத் தூண்டி, அதனூடாகச் சமூகமட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது.  

குழும நிறுவனமொன்றுக்கு பெண் நிறைவேற்று அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், நாட்டின் பிரதான அரசியல் பிரமுகர்கள் அடங்கலாக பல அரசியல் தரப்பினரும் சமூக வலைத்தளங்களினூடாக வெளிப்படையாக வாழ்த்துகளைத் தெரிவித்திருந்த போதிலும், தமது சொந்தக் கட்சிகளுக்கு உள்ளேயேனும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு, பெண்களைக் கொண்ட புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மிகவும் சொற்ப பங்களிப்பையே மேற்கொண்டுள்ளனர் என்பது வெளிப்படை.

 தமிழ்பேசும் பெண் ஒருவர், இந்த வர்த்தக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பதவிக்கு நியமிக்கப்பட்டு உள்ளமைக்கு ‘தமிழ்மிரர்’ வாணிபம், கஸ்தூரி செல்லராஜா வில்சனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், இவ்வாறான பதவிகளில் ஏன் பெண்கள் அங்கம் வகிப்பதில்லை எனும் கேள்விக்கு பதில் தேடும் வகையில், அது தொடர்பில் காணப்படும் கட்டமைப்பு, முறைசார் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .